full screen background image

பாரிஸ் ஜெயராஜ் – சினிமா விமர்சனம்

பாரிஸ் ஜெயராஜ் – சினிமா விமர்சனம்

லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கிறார். அனைகா சோடி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிருத்வி ராஜ், மொட்டை ராஜேந்திரன், தங்கராசு, சேசு, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர்தர் வில்சன், இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – பிரகாஷ் மாபு, கலை இயக்கம் – துரைராஜ், மக்கள் தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – கே.ஜான்ஸன், வெளியீடு – 11-11 புரொடெக்சன்ஸ்.

சென்னையில் பிரபலமான கானா பாடகராக இருக்கிறார் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்னும் சந்தானம். இவர் வசிக்கும் பகுதி ‘பாரிஸ் கார்னர்’ என்பதால் பெயருடன் ‘பாரிஸ்’ என்பதும் சேர்ந்து கொண்டது.

ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் சந்தானம். அந்தப் பெண்ணின் தந்தை இந்தக் காதலைப் பிரிக்க வேண்டி இந்த விஷயத்தில் கில்லாடி வக்கீலான சந்தானத்தின் தந்தை பிரகாஷ்ராஜை அணுகுகிறார்.

தன்னுடைய மகனின் காதலைப் பிரிக்கிறோம் என்பது தெரியாமலேயே அந்தப் பெண்ணின் தந்தைக்கு உதவுகிறார் வக்கீல் பிரகாஷ்ராஜ். அவருடைய செட்டப் ஏற்பாட்டின்படி சந்தானத்தின் நல் ஒழுக்கத்திற்கு களங்கம் வருகிறது. இதைப் பார்த்த சந்தானத்தின் காதலி அவரை விட்டுப் பிரிகிறார். ஆனால், இந்தக் காதலைப் பிரித்தது தனது தந்தைதான் என்பதை அறியும் சந்தானம், தன் தந்தை மீது கோபமாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் அவருக்குள் இன்னொரு காதலும் பிறக்கிறது. கல்லூரியில் படித்து வரும் அனைகா சோடி, கல்லூரியின் விழாவில் பாடுவதற்காக சந்தானத்தை அழைக்க வருகிறார். கூடவே காதலும் பிறக்கிறது. ஒரு காதலை மறக்க இன்னொரு காதலை ஏற்பதுதானே சரி. இதனால் இந்தக் காதலும் செம ஸ்பீடில் போகும்போதுதான் ஒரு டிவிஸ்ட் தெரிய வருகிறது.

தன் மகன் சந்தானம் காதலிக்கும் பெண் தன்னுடைய இரண்டாம் தாரத்து மகள் என்பது வக்கீல் பிரகாஷ்ராஜூக்கு தெரிய வருகிறது. இதனால் இந்தக் காதலைப் பிரிக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.

இரண்டு மனைவிகள் மேட்டர் இரண்டு மனைவிகளுக்குமே தெரியாது என்பதால் அவர்களுக்குத் தெரியாமல் இந்தப் பிரச்சினையை முடிக்கப் போராடுகிறார் பிரகாஷ்ராஜ்.

ஆனால் அது முடிந்ததா..? இல்லையா..? சந்தானம் காதலித்தது நிஜமாகவே அவருடைய ரத்த உறவு முறையிலான தங்கையைத்தானா என்பதையெல்லாம் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக வைத்து நகைச்சுவையில் மிதக்க வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

சந்தானத்திற்கு வழக்கமான அவருக்கே உரித்தான கதாபாத்திரம். தந்தையை மதிக்காத குணம்.. அனைவரையும் கிண்டல் செய்யும் கதாபாத்திரம்.. பல இடங்களில் சந்தானம் அக்மார்க் சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறார்.

கடைசி காட்சிகளில் பலவிதங்கள் எதுவும் புரியாமல் அவர் தவிக்கும்போது ஏற்படும் கலகலப்புதான் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. கடைசி கட்ட டிவிஸ்ட் வெளிவந்தவுடன் அவர் ஓடும் ஓட்டமும்.. “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்ற விரக்தியில் அவர் காட்டும் பாவனையும், பேசும் வசனங்களும் நிறுத்த முடியாத சிரிப்பலை.

முதல் ஹீரோயின் ஒரு சில காட்சிகளே என்றாலும் இரண்டாவது நாயகியான அனைகா சோடி கடைசிவரையிலும் சந்தானத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறார். சந்தானத்தின் உருவத்திற்குக் கச்சிதமான பொருத்தமாக இருக்கிறார் அனைகா சோடி. வசனத்தை மென்று, முழுங்காமல் மிக அழகாக பேச வைத்திருக்கிறார்கள். டப்பிங் கலைஞருக்கு நமது வாழ்த்துகள்.

மிகவும் பாராட்டத்தக்கவர் சந்தானத்தின் அப்பாவாக நடித்தவர்தான். சிறந்த தேர்வு. துணிக் கடையில் மனிதர் மாட்டிக் கொண்டு முழிப்பதும், கடைசிக் காட்சியில் அவர் செய்யும் சமாளிப்புகளும் உண்மையாகவே ரசிக்க வைப்பவை. தெலுங்கு நடிகராம். ஆனால் தமிழை உணர்ந்து பேசி நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அம்மாக்கள் இருவருமே நாயகியைவிடவும் அழகுதான். அவரவர் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். சந்தானத்தின் அல்லக்கைகள் பேசும் வசனங்கள்கூட சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது.

இன்னொரு பக்கம் ‘மொட்டை’ ராஜேந்திரன், சேசு கூட்டணி உருவாக்கும் நகைச்சுவையும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். ‘மொட்டை’ ராஜேந்திரன் இதுவரையிலும் எந்தவொரு திரைப்படத்திலும் இப்படியொரு மகிழ்ச்சியை நமக்குத் தந்ததில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

சந்தோஷ் நாராயணின் இசையில் அனைத்துப் பாடல்களும் கானா பாடல்கள்தான். என்றாலும் இசை தாளம் போடவும், ஆடவும் வைத்திருக்கிறது. ஆனால், இது சென்னையைத் தாண்டி மற்றவர்களுக்குப் புரியுமா.. பிடிக்குமா.. என்பது தெரியவில்லை.

ஒளிப்பதிவில் குறையில்லை. அழகு மிளிர அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநரின் கை வண்ணத்தில் நாயகியின் வீடு செட்டப் அழகாக இருக்கிறது. சந்தானத்தின் அறிமுக காட்சியில் அவரே நமக்கு அழகான இளைஞனாகத் தெரிகிறார். மேக்கப்பும், ஒளிப்பதிவும் அவரை அப்படி காட்டியிருக்கிறது.

சிறப்பான கதை, திரைக்கதை. நிஜமாகவே பல காட்சிகளில் திரைக்கதையிலேயே சிரிக்க வைத்திருக்கிறார்கள். வசனங்களும் பன்ச் டயலாக்குகளாக வாய்விட்டுச் சிரிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது.

கிளைமாக்ஸில் பிரகாஷ் ராஜை “நாய் கடிச்சிருச்சு” என்று சந்தானம் பொய் சொல்வதும், அதற்கேற்றாற்போல் தெரியாமல் பிரகாஷ்ராஜ் அது போலவே நடந்து கொள்வதும்.. அவரை விரட்டிச் செல்வதுமாக கதையை மிக லாகவமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாதி தூள் பறக்கிறது. நேரம் போவதே தெரியாமல் இருந்தது.

இந்த அளவுக்கு பாராட்டத்தக்க அளவில் சந்தானத்தின் காமெடி முந்தைய படங்களில் படம் முழுவதிலும் இருந்ததில்லை. ஆனாலும், இத்திரைப்படம் ஏன் மக்களிடையே பேசப்படவில்லை என்பது மட்டும் புரியவேயில்லை.

பார்த்து மகிழ வேண்டிய திரைப்படத்தை கூவி, கூவி அழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்தது கொரோனாவா அல்லது மக்களின் சிக்கன நடவடிக்கையா என்பது ஆராய வேண்டிய விஷயம்.

எப்படியிருந்தாலும் இத்திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது நிச்சயமாக டி.ஆர்.பி.யை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

‘பாரிஸ் ஜெயராஜ்’ நிச்சயமாக பார்க்க வேண்டிய நகைச்சுவை திரைப்படம்.

Our Score