full screen background image

நானும் சிங்கிள்தான் – சினிமா விமர்சனம்

நானும் சிங்கிள்தான் – சினிமா விமர்சனம்

THREE IS A COMPANY  என்ற பட நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜெயக்குமார், ‘புன்னகை பூ’ கீதா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  – டேவிட் ஆனந்த்ராஜ், இசை  – ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள்  – கபிலன் வைரமுத்து, சண்டை இயக்கம்  – கனல் கண்ணன், கலை –  ஆண்டனி ஜோசப், படத் தொகுப்பு  – ஆதித்யன், நடன இயக்கம்  – அபீப் உஷேன், இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ’ கீதா, தாயாரிப்பு –  THREE IS A COMPANY, எழுத்து, இயக்கம் – கோபி.

ஹீரோவான தினேஷ் டாட்டூ போடும் கடையை நடத்தி வருகிறார். நயன்தாரா போல் ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாள் லட்சியம்.  

இவரது கண்ணில் படுகிறார் நாயகி தீப்தி. அவரை விரட்டி, விரட்டிக் காதலிக்கிறார் தினேஷ். நாயகியான தீப்தியோ “காதல், கல்யாணமெல்லாம் வேஸ்ட். படிப்பிலும், தொழிலிலும் முன்னேறுவதுதான் தனது லட்சியம்…” என்கிறார். ஆனாலும் தினேஷின் தொந்தரவு அளவுக்கு மீறிப் போக..

திடீரென்று லண்டனுக்குச் சென்று விடுகிறார் தீப்தி. நாயகியைக் காணாமல் தவிக்கும் தினேஷ் அவர் லண்டன் சென்றுவிட்டதை அறிகிறார். உடனேயே தனது கடையை விற்றுவிட்டு இவரும் தனது நண்பர்களுடன் லண்டனுக்கு விரைகிறார்.

அங்கே ஒரு எஃப்.எம். வானொலியில் அறிவிப்பாளராக இருக்கும் மொட்டை’ ராஜேந்திரனின் துணையுடன் நாயகியைத் தேடுகிறார். கண்டுபிடிக்கிறார். ஆனாலும் இப்போதும் நாயகிக்கு அவர் மீது காதல் வரவில்லை.

“சரி.. காதல்தானே பிடிக்காது.. நாம் நண்பர்களாகவே இருப்போம்…” என்கிறார் தினேஷ். இந்த நட்பை வலுப்படுத்தும்விதமாக நாயகி ஒரு விபரீத முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு..? நாயகன் அதனால் பாதிக்கப்பட்டாரா..? அல்லது இருவரும் இணைந்தார்களா…? என்பதுதான் இந்த ‘நானும் சிங்கிள்தான்’ படத்தின் கதை.

1990-களில் பிறந்து இப்போதுவரையிலும் ‘சிங்கிள்ஸ்’ என்று சொல்லி அலப்பறை செய்பவர்களின் ஒரு பக்கக் கதையை இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இதற்காக நயன்தாரா மாதிரி பெண் வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், காதலிக்க மறுக்கும் பெண்ணை வலுக்கட்டாயமாக காதலிக்கச் சொல்வதும் நியாயமா இயக்குநரே..?

தினேஷின் கேரக்டரிலும், நடிப்பிலும் ஒரு சிறப்பும் இல்லை. வசனங்களை பேசினாரா.. இ்ல்லையா என்பதே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். இவரது முந்தைய படங்களில் சிறப்பாகத்தான் நடித்திருந்தார். ஆனால், இதில் மட்டும் ஏன் இத்தனை சொதப்பல்..? ஒரு காட்சியில்கூட தினேஷை ரசிக்க முடியவில்லை. இயக்குநரின் இயக்கத் திறமை அவ்வளவுதான் போலும்.

நாயகி தீப்தி அறிமுகம். அறிமுகங்களுக்கே உரித்தான அதே தன்மையுடன் நடித்திருக்கிறார். டப்பிங் வாய்ஸில் இருக்கும் உணர்ச்சிகள் மட்டுமே இவரது கேரக்டரை கவனிக்க வைக்கிறது. அழகாக இருப்பது மட்டுமே நடிகைக்கு தகுதியல்ல.. அதையும் தாண்டி கொஞ்சமாச்சும் நடிக்க வேண்டும். இதில் இவரை மட்டுமே குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. இதுவும் இயக்குநரின் தவறுதான்.

இதில் மன்னிக்க முடியாத தவறு.. தினேஷின் நண்பர்களை வைத்து இயக்குநர் செய்திருக்கும் அட்டூழியம். காட்சிக்குக் காட்சி டபுள் மீனிங்கை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்டுவிட்டால் உடனேயே இளைஞர்கள் தியேட்டருக்கு ஓடோடி வருவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். எதுவும் சிரிக்க வைக்கவில்லை. எரிச்சலைத்தான் கூட்டியிருக்கிறார்கள்.

மனோபாலாவும், ‘மொட்டை’ ராஜேந்திரனும் ஆளுக்கொரு பக்கமாக பேசியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

மற்றைய தொழில் நுட்பக் கலைஞர்கள் மத்தியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. படம் எடுக்கப்பட்டது லண்டனில். அதையும் அழகாகக் காட்டியிருக்கலாமே..? காட்சிகளில் மதர்ப்பும் தெரியவில்லை.. உயிர்ப்பும் தெரியவில்லை. பாடல்கள் ஒலித்தன. நடனங்களை ஆடினார்கள். அவ்வளவுதான்..!

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாத அளவுக்கான மைனஸ்கள்தான் வரிசை கட்டி நிற்கின்றன.

நாயகி தேர்ந்தெடுக்கும் முடிவு தனி மனித சுதந்திரம் என்றாலும் காதலை வலுக்கட்டாயமாக மறைத்துவிட்டு அப்படி செய்வது தவறு என்பதை இயக்குநர் சுட்டிக் காட்ட மறந்துவிட்டார். சீரியஸாக போய்க் கொண்டிருக்கும் இந்த இடத்தில் இயக்குநர் நகைச்சுவையை புகுத்துகிறேன் என்று சொல்லி வைத்த காட்சிகளால் அனைத்தும் தவறாகிவிட்டது.

திருமணம் வேண்டும் என்பதற்கும், வேண்டாம் என்பதற்கும் நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். இதில் வேண்டும் என்று சொல்லும் நாயகனின் விருப்பமும், வேண்டாம் என்று சொல்லும் நாயகியின் விருப்பமும் தவறு என்பதுதான் பார்வையாளர்களின் முடிவு.

இதனாலேயே இந்தப் படம் ரசிகர்களிடமிருந்து வெகுதொலைவில் தள்ளிப் போய்விட்டது..!

Our Score