full screen background image

பராசக்தி – சினிமா விமர்சனம்

பராசக்தி – சினிமா விமர்சனம்

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ்ரீலீலா, சேத்தன், குள்ளப்பள்ளி லீலா, பிருத்விராஜன், காளிவெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – சுதா கொங்காரா, தயாரிப்பு – ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பு நிறுவனம் – பேனர் பிக்சர்ஸ், இசை – ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு – ரவி.கே.சந்திரன், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை இயக்கம் – எஸ்.அண்ணாதுரை, பாடல்கள் – யுகபாரதி. ஏகாதேசி, அறிவு, கபீர் வாசுகி, ஜெய மதிமாறன்.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குர்களாக இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு தனித்தன்மையை வைத்து தங்களுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுநாள் வரையிலும் பெண் இயக்குர்கள் இயக்கிய திரைப்படங்கள் அரசியலை தொட்டுவிடாமல் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவது.. பெண்களுக்காண பிரச்சனைகளை பேசுவது என்று பெண்களுக்கான மாத பத்திரிகைகள் தங்களுடைய உள்ளடக்கத்தில் என்னென்ன செய்திருப்பார்களோ அதையேதான் தாங்கள் இயக்கியிருந்த திரைப்படங்களிலும் செய்திருந்தார்கள்.

ஆனால் ஒரே ஒரு விதிவிலக்காக சுதா கொங்காரா என்ற இந்த பெண் இயக்குநர் தான் இயக்கிய இறுதிச் சுற்று திரைப்படத்திலும், ‘சூரரைப் போற்று திரைப்படத்திலும் எண்ணற்ற விருதுகளை பெற்று குவித்தார்.

இந்தியாவின் இயக்குரான மணிரத்னத்தின் சீடரான இந்த சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இந்த பராசக்தி என்ற திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் படமாக வந்துள்ளது. இப்பொழுது படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பெண் இயக்குர்களுக்கு ஒரு சவாலான திரைப்படமும்கூட..!

தமிழகத்தில் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாதது. எந்த அளவுக்கு சினிமாத் துறை இன்றைக்கு வளர்த்திருக்கிறதோ அதே அளவுக்கு அரசியல் பற்றிய புரிதலும் இப்போதைய 2 கே கிட்ஸ்களுக்கும் நிறையவே இருக்கிறது.

இப்படி ஒரு அரசியல் படத்தை சினிமா தடம் இல்லாமல் அதே சமயம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தியாவில் இருக்கும் போலித்தனமான ஜனநாயகத்தை தொட்டு பார்த்து, அரசியல் சதுரங்கத்தில் விழாமல் தப்பித்து ஒரு அழகான படைப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மொழிப் பிரச்சனை என்பது இனி எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய அரசியல் நிலைப்பாடாகத்தான் இருக்கும். அப்படி ஒரு சென்சிடிவான பிரச்சனையை கையில் எடுத்து அனைவருக்கும் பிடிப்பதுபோல இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குர் சுதா கோங்காரா.

தமிழகத்தில் இதுவரையிலும் மூன்று முறை தமிழ் மொழியை காப்பாற்றுவதற்காக ஒரு பெரும் போராட்டமே நடந்திருக்கிறது. அந்தப் போராட்ட களத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் கற்பனையோடு சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குர்.

1939-ல் நடந்த முதல் மொழிப் போர் போராட்டங்களுடன்தான் இந்தப் படமும் துவங்குகிறது. வீட்டிற்கு மூத்த மகனானே செழியன் சிறு வயதிலிருந்தே தமிழ் இன உணர்வோடு வளர்ந்தவன். ஆங்கிலத்தை அகற்றி விட்டு இனிமேல் இந்தியா முழுவதும் அரசு அலுவல் மொழியாக இந்திதான் இருக்கும் என்று அப்போதைய சென்னை மாகாண அரசு அரசாணை பிறப்பித்த பொழுது, அப்போது அரசியல் கட்சிகளைவிடவும் மிகுந்த ஆக்ரோஷமாக களத்தில் குதித்தனர் கல்லூரி மாணவர்கள்.

அதில் ஒருவனாக படை எடுத்து வந்த செழியன் தன்னுடைய சக நண்பர்களோடு தமிழின உணர்வுள்ள மாணவர்களோடு இணைந்து தங்களுடைய எதிர்ப்பை ஒரு புகை வண்டியை எரித்து சாம்பலாக்கி இந்தியா முழுக்க தங்களுடைய அடையாளத்தை பதிவு செய்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் தீவிரமாய் குதித்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மத்திய அரசு ‘திரு’ என்ற எதற்கும் அஞ்சாத ஒரு போலீஸ் அதிகாரியை தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அப்படி வந்த திருவை, நேருக்கு நேராக அவர் வந்த புகைவண்டியிலேயே சந்தித்து அந்த புகை வண்டியையும் எரித்துவிட்டு தப்பித்து ஓடுகிறார்கள் செழியனும், அவரது நண்பர்களும்.

செழியன் தப்பித்துப் போகும்பொழுது திருவின் ஒரு விரலை வெட்டி விட்டுத்தான் போயிருக்கிறார் அந்த தாக்குதலில் நிலை குலைந்து போன திரு எப்படியும் அந்த செழியனை பிடித்த தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ஆனால் இந்தப் போராட்டத்தில் தங்களுடன் வந்த ஒரு மாணவனை இழந்தார் செழியன். அந்த மாணவனின் பெற்றோரின் கதறல் செழியனை வாட்டியெடுக்க அதன் பின்பு எந்த வம்பு, சண்டைக்கும் போகாமல் அமைதியாகிறார்.

வருடங்கள் உருண்டோட 1965-ல் பண்டித நேரு காலமான பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆகிறார். அப்போதும் இந்தியா முழுவதும் இந்தி மொழி கட்டாயம் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும். மாணவர்கள் இந்தியை படித்தே தீர வேண்டும் என்ற உத்தரவு ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வருகிறது.

இப்போது போராட்டத்தை கையில் எடுக்கிறார் கல்லூரி மாணவரான அதர்வா. இவர் செழியனின் உடன் பிறந்த தம்பி.

செழியன் தன்னுடைய அப்பா உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதால், அவர் பார்த்து வந்த ரயில்வே டீசல் கலாசி வேலை கிடைத்துவிட அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தம்பி எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்கின்ற ஒரு முடிவில் இருக்கிறார் செழியன். ஆனால் தம்பி அதர்வாவோ அண்ணனை விடவும் மிக வேகத்துடன் மொழி திணிப்பை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

ஹிந்தி பிரச்சார சபாவையே தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கொளுத்திவிட்டார். இப்பொழுதும் தன் விரலை வெட்டிய செழியனை கண்டு பிடித்தே தீர வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் திரு, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் அடக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று வருகிறார்.

அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் இந்த மொழிப் போராட்டத்தை எப்படியாவது எந்த வகையிலாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தமிழகமெங்கும் வெகுஜன மக்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்க தமிழ்நாட்டில் மட்டும் என்னதான் நடக்கிறது என்று மத்தியில் ஆளும் அரசே, மாநில அரசை கேள்வி கேட்கிறது.

இந்தப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளிவிட்டால்தான் நல்லது. இல்லாவிடில் அது நம் கழுத்தைப் பிடித்து விடும் என்று திரு, முதலமைச்சரிடம் தூபம் போ, அவரோ “என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுக்கிறார்.

இந்த அனுமதியோடு போராட்ட களத்திற்கு வரும் திருவும் அவர் அழைத்து வந்த ராணுவத்தினரும் போராட்டத்தை கலைக்க துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்துகிறார்கள்.ந்தத் துப்பாக்கி சூட்டில் செழியனின் தம்பி அதர்வா பரிதாபமாக உயிரிழக்கிறார்.

அதே நேரம் செழியன் மத்திய அரசு பணிக்காக டெல்லிக்கு இன்டர்வியூக்கு சென்ற நிலையில் அங்கே ஹிந்தி தெரியாது என்ற ஒரே காரணத்தினால் செழியனுக்கு அந்த வேலை கிடைக்காமல் போகிறது.

இந்த சோகத்தில் ஊர் திரும்பும் செழியன் தன்னுடைய தம்பி தலைமையேற்று நடத்திய போராட்டத்தில் இறந்துவிட்டான் என்ற செய்தியை அறிந்து ஓடி வருகிறார். அங்கே திரு, செழியனை பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து என்ன நடந்தது செழியன், திரு மோதல் என்னவானது? செழியனை கைது செய்தாரா? செழியன் இந்தப் போராட்டத்தை அடுத்து எந்த வகையில் கொண்டு சென்றார்? போராட்டத்தில் முடிவுதான் என்ன? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு சிறந்த இயக்குரின் கைகளில் திறமைசாலிகள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்தால் அந்தத் திரைப்படம் காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநரான சுதா கொங்காராவின் அற்புதமான இயக்கத்தினால், படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கதையின் முழு நேர நாயகனான செழியன் என்ற சிவகார்த்திகேயன், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து புரிந்து நடித்திருக்கிறார். முதல் காட்சியிலேயே தனது மொழியைக் காப்பதற்காக பரபரப்பான ஒரு விஷயத்தை செய்து அனைவரின் கவனத்தையும் கவர வேண்டும் என்று நினைத்து ரயிலை கொளுத்துகின்றார்.

தன்னுடைய தாய் நாட்டிற்கு தான் செய்த மிகப் பெரிய உதவி என்கின்ற வகையில் மொழி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்து அனுபவித்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒரு பக்கம் வீர ஆவேச பேச்சுக்களை பேசினாலும் காவல் துறையின் கண்களில் சிக்காமல் ரகசியமாக என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து போலீஸ் எப்படி விசாரணை நடத்துவார்கள் என்பதை அறிந்து அதிலிருந்து தப்பிக்கும்விதமாக மாணவர்களை வழி நடத்துகின்ற அந்த தளபதி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இன்னொரு பக்கம் தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரின் மகளான ஸ்ரீலீலாவின் காதலில் மாட்டிக் கொண்டு, அந்தக் காதலையும் ஏற்றுக் கொண்டு காதலன் வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இதுவரையிலும் நடித்த படங்களில் எல்லாம் அவருடைய பேச்சுக்கள் காமெடியை வரவழைப்பது போல பெரும்பாலும் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சிகூட அமையாமல் ஒரு போராளியாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.

தன்னுடைய தம்பி மீதான பாசத்தில் “படிப்பை தவிர வேறு எதிலும் போகாதே.. வேறு எதையும் செய்யாதே” என்று அட்வைஸ் மேல் அட்வைஸ் செய்து கொண்டு கடைசியாக இந்த மொழி திணிப்பினால் தென்னிந்திய மக்களுக்கு என்ன கெடுதல் ஏற்படும் என்பதை புரிந்து கொண்ட பின்பு மீண்டும் தம்பி விட்டுச் சென்ற போராட்டத்தை அவரை கையில் எடுத்து தொடங்கும் பொழுது கை தட்டவும் வைத்திருக்கிறார்.

திருவிடம் சிக்கி சின்னா பின்னமான நிலையிலும் திருவுக்கு சரியான பதில்களை சொல்லும் பொழுதும் தன் நடிப்பில் அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார் சிவா.

டெல்லிக்கு சென்று அப்போதைய மத்திய அமைச்சரான இந்திரா காந்தியை சந்தித்து அவர் பேசுகின்ற பேச்சுக்களும் அப்படியே ஒரு தமிழ் குடிமகனின் பேச்சாகவே நம்மால் பார்க்க முடிகிறது. இறுதிவரையிலும் திருவிடம் சிக்காமலேயே கோவை வந்திருக்கும் இந்திரா காந்தியிடம் கடிதங்களை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடும் அந்த கடைசி அரை மணி நேர பரபரப்பில் செழியன் ஜெயித்தே தீர வேண்டும் என்று படம் பார்க்கும் நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் 25-வது திரைப்படம். இந்தப் படத்தை அவர் தேர்வு செய்ததை நினைக்கும்பொழுது பெருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

இந்தப் படத்தில் திரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மோகனையும் முதலில் நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் அவரே சிவகார்த்திகேயன் போலவே ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சக நடிகர்தான். ஆனாலும், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்றால் அதற்கெல்லாம் நிச்சயமாக ஒரு தைரியம் வேண்டும். இந்த விட்டுக்கொடுத்தல் ரவி மோகனின் சினிமா வரலாற்றில், இந்தப் படத்தை ஒரு முக்கியமான படமாக ஆக்கிவிட்டது.

அறிமுகமான முதல் காட்சிகளிலிருந்து கடைசிவரையிலும் பாதி தமிழனாகவும் பாதி வட நாட்டுக்காரனாகவும் இருக்கும் திரு, இந்தித் திணிப்பினால் ஏற்படும் பிரச்சனைகள் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்கின்ற ஒற்றை குறிக்கோளோடு அவர் கடைசிவரையிலும் செய்திருக்கும் வில்லத்தனம் நிச்சயம் பாராட்டுக்குரியது.

தமிழக முதல்வரிடம் அவர் பேசுகின்ற ஸ்டைலான பேச்சுக்களும், நீங்கள் எதையும் செய்ய வேண்டாம்.. சும்மா இருந்தாலே போதும் என்று சொல்லி, முதல்வரை மிரட்டி அமர வைத்து பேசுகின்ற பேச்சும், மத்திய சர்க்கார் மாநில சர்க்கார்களை எந்த லட்சணத்தில் அப்போது நடத்தி இருக்கின்றன என்பதை நமக்குப் புரிய வைத்திருக்கிறது.

இன்னும் ஒரு அதிர்ச்சியாக நடிகர் அதர்வா இந்தப் படத்தில் செழியனின் தம்பியாக நடித்திருக்கிறார். இதுவும் நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். அதர்வாவின் அந்த துள்ளலான நடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. முதல் கட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒரு போராளி எப்படி துடிப்புடன் இருப்பான் என்பதற்கு ஒரு உதாரணம் போல அதர்வா வாழ்ந்து நடித்திருக்கிறார். அவருடைய மரணம் நிச்சயமாக படம் பார்க்கின்ற அத்தனை பேரையும் ஒரு சோகத்தில் ஆழ்த்தியது. அந்த உணர்வை கச்சிதமாக தன்னுடைய நடிப்பின் மூலமாக கொடுத்திருக்கிறார் அதர்வா.

தெலுங்குலகில் ஆட்ட ராணி என்று பெயர் பெரும் அளவுக்கு நடனத்திலும், நடிப்பிலும் பெயர் பெற்றிருக்கும் ஸ்ரீலீலா நடித்திருக்கும் முதல் தமிழ் படம் இதுதான். ஆனால் அப்படி ஒரு எண்ணமே நமக்குத் தோன்றாதவண்ணம் பல திரைப்படங்களில் நடித்தவர்போல வசன உச்சரிப்புகூட கச்சிதமாக இருக்கும் வகையில் டப்பிங் செய்திருப்பதால் இவருடைய நடிப்பையும் நம்மால் ரசிக்க முடிகிறது.

முதல் பாதியில் செழியன் உடனான காதலை வளர்த்தெடுக்கும் விதத்தில் இவரும் செழியனும் பேசுகின்ற அந்த நாகரீகமான காதல் பேச்சுகள் அனைத்தும் மிக சுவையாக ரசிக்கும்படி இருந்தன. அந்த ரசிப்புக்கு காரணம் நிச்சயமாக ஸ்ரீலீலாதான்.

ஸ்ரீலீலா தெலுங்கர் என்பதை சொல்லிக் காட்டும் பிரிதிவிராஜனிடம் “நான் இப்போது வரையிலும் ஒரு தமிழச்சியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இனிமேலும் இப்படித்தான் வாழ்வேன்” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு போகும்போது நமக்கே கை தட்ட தோன்றியது.

1965-ல் ஒரு பெண் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட படிப்பை எல்லாம் படித்து அதில் வித்தகியாக இருக்கிறாள் என்பதை ஸ்ரீலைலாவின் கதாப்பாத்திரம் மூலமாக நமக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஸ்ரீலீலாவின் இந்தத் திறமை இந்தப் படத்தை முடிவுக்கு கொண்டுவர திரைக்கதையில் பெரிதும் உதவி இருக்கிறது.

டூயட் பாடலில் தன்னுடைய ஆட்ட நடிப்பை கொஞ்சமாகவே சுருக்கி காண்பித்து இருக்கிறார். அவருடைய ஆட்ட திறமைக்கேற்ற கதைகள்  இனிமேல் வேறு வேறு படங்களில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

செழியன், அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் குள்ளப்பள்ளி லீலா அட்டகாசமான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். பேரன்களின் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற பாசத்தை படத்தில் காண்பிக்கும் பொழுது அவருடைய நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.

பேரறிஞர் அண்ணா வேடத்தில் நடித்திருக்கும் சேத்தன் அப்படியே அண்ணா போலவே இருக்கிறார். சென்சார் போர்டில் இவர் பேசிய வசனங்களை குதறிவிட்டதால் அண்ணாவின் முழுமையான பங்களிப்பை இந்தப் படத்தில் சொல்ல முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் 1969-ல் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும். இந்திக்கு இங்கே இடமில்லை என்று சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றியும் காட்டினார். அந்த வகையில் அண்ணாவின் இந்த அற்புதமான முடிவை இந்தப் படத்தில் இறுதியில் சொல்லி நம்மை கை தட்ட வைத்திருக்கிறார் இயக்குநர் சுதா கோங்காரா.

மாணவர்களை பொள்ளாச்சிக்கு வரவழைத்து தங்க இடமும், உணவும் கொடுத்து போராட்டத்திற்கு உற்ற துணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட்டும், செழியன் உடன் முதலில் இருந்து கடைசி வரையிலும் போராட்டத்திற்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்த பிரித்விராஜனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

இது போன்ற வரலாற்று திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு மிக மிக முக்கியம். ரவி கே.சந்திரன் இந்தப் படத்திற்காக செய்திருக்கும் ஒளிப்பதிவு அற்புதம் என்றே சொல்லலாம். ரொம்பவும் உயர் தரமான ஒளிப்பதிவை கொடுக்காமல் கலர் கிரேடிலும் அதிகம் கை வைக்காமல் எப்போதும் மப்பும், மந்தாரமுமாக இருப்பதைப் போல இந்த படத்தின் ஒளிப்பதிவை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அதோடு படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகளை படமாக்கியவிதத்தை சூப்பர் என்றே சொல்லலாம். அதேபோல் அந்த சண்டை காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தருக்கும் நமது பாராட்டுக்கள். கடைசி ட்ரெயின் சண்டையில் நமக்கு ஒரு பதபதைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகும் நூறாவது திரைப்படம் இது என்பதால் அவருக்கும் இது ஸ்பெஷலாகிவிட்டது. பாடல்களை விடவும் பின்னணி இசை அபாரம். பாடல் வரிகளும் மிக எளிமையாக நம் காதுகளில் நுழைவது போல அமைத்து ஒரு சிறப்பினை செய்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கலை இயக்கத்தை செய்திருக்கும் அண்ணாதுரை இந்தப் படத்திற்காக நிச்சயம் நிறைய விருதுகளைப் பெறுவார். அந்த அளவுக்கு 1939, 1965-ம் காலக்கட்டத்தை நம் கண் முன்னே உலாவ விட்டிருக்கிறார். பாராட்டுக்கள்.

அந்தக் காலத்திய உடைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பூர்ணிமா ராமசாமிக்கும் ஒரு தனி பாராட்டு..! நாயகிக்கு மட்டுமில்லாமல் ரயில்வே ஸ்டேஷனில் குழுமியிருக்கும் பொது மக்களுக்கும்கூட பொருத்தமான உடைகளை அணிவித்து அசத்தியிருக்கிறார்.

படத் தொகுப்பாளர் சதீஷ் சூர்யா எப்படித்தான் இந்தப் படத்தை தொகுத்தளித்தாரோ தெரியவில்லை… அந்த அளவுக்கு கச்சிதமாக அமைந்திருக்கிறது. மூன்றுவித காலக்கட்டங்களில் படம் நடக்கும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் கதையின் களத்தை நமக்கு காட்டுவதைப் போல காட்சிகளைத் தொகுத்து தந்திருக்கிறார்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் சுதா கொங்காரா ஒவ்வொரு வசனத்தையும் யோசித்து யோசித்து எழுதி இருப்பார் போலிருக்கிறது. ஒவ்வொரு வசனமும் நமக்கு ஈர்ப்பை கொடுத்து இருக்கின்றன. அதுவும் அரசியல் வசனங்களில் தீப்பொறி பறக்கிறது. மொழி பிரச்சனையில் எப்படி எல்லாம் மக்களை அப்போதைய ஒன்றிய அரசு ஏமாற்றியிருக்கிறது என்பதையும் வசனம் மூலமாக சொல்லி நமக்கு ஒரு விழிப்புணர்வை தந்திருக்கிறார் இயக்குநர்.

ஆனாலும் சென்சார் போர்டு பல வசனங்களை நீக்கியிருக்கிறது.

“பஞ்சத்துல இருக்கிற மக்களோட குண்டில இருக்கிற கோவணம்கூட உருவப்படும்…”

(இந்தியைக் குறித்து) இது என்ன எழுத்துய்யா? கொடில காயப் போட்டிருக்கிற துணியாட்டம்!..”

(நாயகியைப் பார்த்து) தெலுங்குச் சிறுக்கி” என்று சொல்வது..

“குண்டில கொழுப்பு”, இந்தி படிச்சிட்டு நக்கிப் பொழைக்கப் போற”, என்ன மயிரைப் படிச்ச”, என் கனவை இந்தி எரித்தது” என்ற வசனங்களையெல்லாம் நீக்கிவிட்டு கூடுதலாக “தீ பரவட்டும்” என்று இந்தப் படத்தின் ஸ்லோகனை “நீதி பரவட்டும்” என்று மாற்றம் செய்து தனது அதிகாரத் திமிரைக் காட்டியிருக்கிறது சென்சார் போர்டு.

ஆனாலும் ஓரிடத்தில் “தமிழ் நொண்டி ஆயிட்டேன் நான்”, (அண்ணா சிறையிலடைக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில்) “உங்க நொண்ணாவே உள்ளதான் இருக்காரு” என்ற வசனங்களை மட்டும் விட்டு வைத்திருப்பது சென்சார் போர்டில் இருக்கும் மொழி வெறியர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

இந்தப் படம் நடந்த கதையை சொல்வதாக சொல்லி இருந்தாலும் சில இடங்களில் இதுவொரு திரைப்படம் என்பதற்காக சில சமரசங்களை செய்வதுபோல கதைகளில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இருக்கிறார்கள்.

அந்தக் கற்பனை கதைகள் இடைவேளைக்கு பின்பு வரும்பொழுது நமக்கு கொஞ்சம் சோர்வை தந்திருக்கிறது. ஆனாலும் தென்னிந்தியா முழுவதுமே இந்த மொழி போராட்டத்தில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் அன்றைக்கு தமிழ்நாடு மட்டுமே அதை கையில் எடுத்து போராடி ஓடோடி வந்த ஹிந்தியை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். அந்த உண்மையை இயக்குநர் உண்மையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் போராட்டத்திலேயே இறங்காத மற்றைய தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடத்தின் மாணவர்களும் போராடியதாக தவறான செய்தியை ஏன் கொடுத்தார் என்பது புரியவில்லை.

ஒருவேளை இத்திரைப்படம் பான் இந்திய படமாக உருவாகி இருப்பதால் மற்ற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன என்பதால் அவர்களை சாந்தப்படுத்துவதற்காக இப்படி ஒரு கதையை திரித்துவிட்டார் போலிருக்கிறது. ஆனால், எப்படி இருந்தாலும் இந்த திரைக்கதை நிச்சயமாக தவறு என்பதுதான் நம்முடைய கருத்து.

இது போன்ற வரலாற்று கதைகளை, இப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு சொல்லித் தரும் அளவுக்கு இன்னமும் நிறைய திரைப்படங்கள் வர வேண்டும். அப்பொழுதுதான் சுதந்திரம் என்பது சும்மா கிடைத்துவிடவில்லை… என்ற உண்மை இப்போதைய இளைய தலைமுறையினருக்குத் தெரிய வரும். சுதந்திரம் என்கின்ற அந்த டாபிக்கே இப்போதைய இளசுகளின் பேச்சில் அடிபடும்.

இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் கட்சிகள் அனைத்துமே அரசியல் ஆதாயத்திற்காக வீட்டுக்குள் ஒரு பேச்சும், வெளியில் ஒரு பேச்சும், சட்டமன்றத்தில் ஒரு பேச்சும், தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒரு பேச்சமாக உண்மையையே பேசாமல் பொய்களை பரப்பி வரும் சூழலில் இயக்குநர் சுதா கொங்காரவின் இந்தப் படைப்பு நிச்சயம் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களுக்கும் பணியாற்றியிருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

RATING : 4.5 / 5

Our Score