full screen background image

“கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமாக ரசிகர்களை உலுக்கும்” – பராரி பட இயக்குநரின் நம்பிக்கை.!

“கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமாக ரசிகர்களை உலுக்கும்” – பராரி பட இயக்குநரின் நம்பிக்கை.!

இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பராரி’. ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அறிமுக நடிகை சங்கீதா கல்யாண் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவரை தவிர 40 புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் அனைவரும் நடிப்பில் பி.எச்.டி. படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.

இவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கியிருந்து, படத்தின் காட்சிகளை ஒத்திகைப் பார்த்து அந்த மண்ணைச் சேர்ந்த மக்களாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராஜு முருகன் வழங்கும் இப்படத்தை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் ஹரி சங்கர் தயாரிக்க, ஷான் ரோல்டன் மற்றும் ஜி.முத்துக்கணி இசையமைத்துள்ளனர். சான்.ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் இப்படம் தமிழகத்தில் காலம் காலமாக பல திரைப்படங்களில் பேசப்பட்டு வரும் சாதி அரசியலில், இதுவரை யாரும் சொல்லாத விசயங்களை பேசியுள்ளது.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் மூவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து இத்திரைப்படம் பற்றிப் பேசினார்கள்.

படம் குறித்து இயக்குநர் எழில் பெரியவேடி பேசும்போது, “நான் ராஜு முருகன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ராஜூ முருகன் ஸாரின், ‘ஜிப்ஸி’ படம் முடியும்போதே இந்தக் கதையை நான் எழுதி முடித்துவிட்டேன். சில நிறுவனங்களில் இந்தக் கதையை சொன்னேன். கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னவர்கள், கிளைமாக்ஸ் காட்சியை கேட்டுவிட்டு பயந்துபோய் நிராகரித்துவிட்டார்கள்.

இந்த காட்சியில் எந்த நடிகர், நடிகையும் நடிக்க மாட்டார்கள் என்று சொல்லி சிலர் ஒத்துக் கொள்ள மறுத்தார்கள். ஆனாலும் நானும் விடாமல் பலரிடம் கதை சொல்லியிருக்கிறேன். பலரும் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டு பயந்துபோய் ஏற்க மறுத்தார்கள். இப்படியே போனதால் ஒரு கட்டத்தில் எனக்கே என் கதை மீது சலிப்பு ஏற்பட்டு விட்டது.

அதனால் சினிமாவைவிட்டே போய் விடலாம் என்று முடிவு செய்து என் இயக்குநரிடம் கூறினேன். அவர் பதற்றமடைந்து “வேண்டாம்” என்று சொன்னதோடு, “இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்” என்று கூறினார். அப்படித்தான் இந்த ‘பராரி’ திரைப்படம் தொடங்கியது.

வட தமிழகத்தில் இருக்கும் இரண்டு விளிம்பு நிலை சமூக மக்களிடையே இருக்கும் அரசியலைத்தான் இந்த கதை முன் வைக்கிறது. வட தமிழகம் பற்றி இதுவரை சொல்லாத அரசியல், இரண்டு சமூகமாக இருப்பவர்கள் ஒரே குல சாமியை வணங்குகிறார்கள். இதுதான் அங்கிருக்கும் மிகப் பெரிய அரசியல். இருவரும் தினக் கூலியாகத்தான் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது இவர்களிடம் ஏற்றத் தாழ்வு எப்படி வந்தது என்ற கேள்வியை நான் முன் வைப்பதோடு, திராவிட் நாடு என்ற அரசியலையும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறேன். திராவிட நாடு அரசியல் என்பது திராவிட அரசியல் இல்லை. மொழி வாரியாக பிரிந்து கிடக்கும் திராவிட நாடு அரசியல்.

மொழி வாரியாக திராவிட நாடுகள் பிரிந்திருந்தாலும், அதன் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது அவர்களை வேற்று மொழி பேசுபவர்களாக பார்ப்பதோடு, அவர்களை எப்படி நடத்துகிறார்கள்.. அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். 

டீசரில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நடக்கும் பிரச்சனைபோல் காட்சிகள் இருக்கலாம். ஆனால், படம் அதை மட்டும் பற்றி பேசவில்லை. அதை தாண்டிய மனிதத்தை பற்றிப் பேசும். ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமூகத்தினரை குறை சொல்வது போல் காட்சிகள் இருக்காது,

தவறு செய்பவர்களை குத்திக் காட்டுவதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை. அனைவரையும் நேசிக்க வேண்டும், அனைவரும் சமம். நீ பெரியவன் நான் பெரியவன் என்று பார்க்க கூடாது, தமிழ் மரபுகளில் இருந்துதான் உயிரினம் உருவானது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள், அப்படிப்பட்ட தமிழ் சமூகம், மேலே கீழே என்று பார்க்காமல், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

இந்தப் படத்தை பார்த்து ஒரு சமூகம் திருந்திவிட்டது அல்லது சிலர் திருந்திவிட்டார்கள் என்று சொல்லலாம். அப்படித்தான் கதை இருக்கும். படத்தில் கிளைமாக்ஸ் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்துவதோடு, அனைவரையும் யோசிக்க வைக்கும். 20 நிமிட கிளைமாக்ஸ் இதுவரை எந்த படத்திலும் வராத கிளைமாக்ஸாக இருக்கும். படம் முடிந்து வெளியே வரும்போது கண் கலங்கியபடிதான் வருவீர்கள்.

நான் சொல்வது உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக தோன்றலாம். “ஒரு படைப்போ, கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ, நாவலோ படிக்கும்போது உங்கள் மனதை சலனப்படுத்தவில்லை என்றால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள்” என்று அருந்ததி ராய் சொல்லியிருப்பார், அதுபோல் என் படம் உங்களை 10 நிமிடமோ அல்லது ஒரு நாளோ உங்கள் மனசாட்சியை கேள்வி கேட்கவில்லை என்றால், என் படத்தை குப்பையில் போட்டு விடுங்கள்.

நான் ஒரு அமைப்பில் இருக்கிறேன். அதன் மூலம் பல போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கிறேன், அப்போது நான் பார்த்த சம்பவங்கள்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் இருக்கும் பெருபாலான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை. இந்தப் படத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவில்லை, எந்த குரியீடுகளையும் வைக்கவில்லை.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல், அவர்களிடம் இருக்கும் அரசியல், அவர்கள் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி பராரிகளாக செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் அரசியலைத்தான் இந்தப் படம் பேசுகிறது.” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு 9 படங்களில் பணியாற்றி விட்டேன். அதன் பிறகு நான் எதிர்பார்த்த கதை எனக்கு அமையவில்லை. கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், அவை எதாவது நம்மை செய்ய வேண்டும் அல்லவா.. அப்படி எந்த கதையும் எனக்கு அமையாததால் காத்துக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் எழில் என்னை தொடர்பு கொண்டு “இந்தக் கதையைக் கேளுங்கள்” என்றார். அதற்கு முன்பு அவரை எனக்கு தெரியாது, அவரை பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவர் அனுப்பிய கதையை படித்தபோது, என்னை ஒரு மாதிரி செய்துவிட்டது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ், ஏசி அறையில் எனக்கு வியர்க்கும் அளவுக்கு பதற்றத்தை கொடுத்துவிட்டது, அந்த அளவுக்கு இந்த கதை என்னை உலுக்கியது, அதனால் இதில் பணியாற்றினேன்.

‘பரியேறும் பெருமாள்’போல் தமிழ்நாட்டில் நிறைய சாதி அரசியலை வைத்து படங்கள் வருகிறது. ஆனால், அதை தாண்டி மொழி, மதம், கார்ப்பரேட் ஆகியவற்றில் இருக்கும் அரசியலைத்தான் இந்தப் படம் அழுத்தமாக பேசுகிறது. குறிப்பாக மாநிலம் மற்றும் மத்திய அரசியலை தழுவி இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு சினிமாவில் சாதி படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள். ஒரு சமூகத்தினரை தாழ்த்தி பேசுவதோ அல்லது ஒரு சமூகத்தை பெருமையாக பேசுவதாகத்தான் சாதி படங்கள் இருக்கிறது. ஆனால், இந்த படம் முதலில் மக்கள் மன ரீதியாக திருந்த வேண்டும், பிறகு பொருளாதார ரீதியான மாற்றங்கள், முன்னேற்றங்கள் தானாக வரும் என்பதை வலியுறுத்துகிறது.

நான் இதுவரை 9 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். பல பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இதுவரை எந்த படத்திற்காகவும் இவ்வளவு பேசியதில்லை. ஆனால், இப்போது இவ்வளவு பேசுகிறேன் என்றால் இந்தக் கதைதான் காரணம்.

இந்தப் படத்தில் இருக்கும் புதுமுகங்களை எடுத்துவிட்டு பிரபலமான சில நடிகர்களை நடிக்க வைத்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த படமாக மட்டும் இன்றி, திரையரங்கில் ரசிகர்களை கொண்டாட வைக்கும் நல்ல படமாகவும் இருக்கும்.

120 ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள், படம் முடிந்த பிறகு கூடுதலாக 120 ரூபாய் கொடுக்க தயாராக இருப்பார்கள். அந்த அளவுக்கு தியேட்டருக்கான படமாகவும் ‘பராரி’ இருக்கும். இதை நான் இப்போது சொல்லவில்லை, 2021-ம் ஆண்டே என் சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லியிருக்கிறேன். படம் பார்த்த பிறகு நான் சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால், என் பதிவை நீக்க சொல்லுங்கள். தாராளமாக நீக்கி விடுகிறேன்…” என்றார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தோழர் வெங்கடேஷ்’ பட புகழ் ஹரி சங்கர் பேசும்போது,  “இந்தப் ’பராரி’ படத்தின் கதை மிக சிறப்பானதாக மட்டும் இன்றி எனக்கு பொருத்தமானதாகவும் இருந்தது. படத்தில் இடம் பெறும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன், அதனால்தான் இந்த கதையில் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

இந்தப் படத்துக்காக நான் என் உடல் எடையை குறைத்திருக்கிறேன். 100 கிலோவாக இருந்த நான் 44 கிலோவாக உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறேன். உடல் எடையை குறைத்து கூலி வேலை செய்யும் ஒரு இளைஞர் போல இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பை தொடங்குவேன், என்று இயக்குநர் சொல்லிவிட்டார். அதன்படி நான் உடல் எடையை குறைக்க முயற்சித்தேன்.

ஆனால், சென்னையில் இருந்து கொண்டு உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டால், அதை எளிதில் செய்ய முடியாது, என்பதால் படப்பிடிப்பு நடக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கே சென்று அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்து, கரும்பு வெட்டுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என்று ஒரு கூலி தொழிலாளியாகவே இருந்து உடல் எடையை குறைத்து, என் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தேன். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..” என்றார்.

Our Score