‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் திரைப்படம் ‘பராரி’.
இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப் புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவருக்கும் சுமார் ஆறு மாத காலம் பயிற்சி கொடுக்குப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.
பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாம் ஆர்.டி.எக்ஸ். எடிட்டராகவும், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, NGK, ‘தங்கலான்’ போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார்.
ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ (கலை), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலி கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு), ஜி.முத்துக்கனி (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா–ரேகா டி’ஒன் (பத்திரிக்கை தொடர்பு) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் உள்ளனர்.
ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘பராரி’ என்ற வார்த்தை தங்களது சொந்த மண்ணிலிருந்து, பிழைப்பு தேடி பல்வேறு இடங்களுக்குப் போகும் மக்களைக் குறிக்கிறதாம்.
திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கையையும், அவர்களிடையே இருக்கும் தீண்டாமைப் போக்கையும், சாதிய மோதலையும், சாதீய அரசியலையும் இந்தப் ‘பராரி’ திரைப்படம் பேசுகிறது.
கூடவே சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமகால அவலங்களையும் இந்தப் படம் பேசுகிறது. சாதி, மதம், மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்த மானுட சமூகத்தை நோக்கி அறத்தோடு பல கேள்விகளையும் இத்திரைப்படம் எழுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் என்றொரு கிராமத்தில் ஒரு பக்கம் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினரும், மற்றொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊரிலும் தீண்டாமை போக்கு தலைவிரித்தாடுகிறது. ஆதிக்க சாதியினர், காலனியில் வசிக்கும் மக்களிடையே சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.
கரும்புத் தோட்டத்தில் 8 மாதங்கள் கிடைக்கும் கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இரண்டு பிரிவினரும், சொந்த ஊரில் வேலை இல்லாத நான்கு மாத காலங்களில் வேலைக்காக கர்நாடகாவில் உள்ள ஜூஸ் தொழிற்சாலைக்கு செல்வது வழக்கம்.
அங்கு வேலைக்கு வரும் இரண்டு சாதிப் பிரிவினரும் தமிழர்கள் என்பதால் கர்நாடகாவில் இருக்கும் உள்ளூர் இன ஆதரவு கோஷ்டிகள் இவர்களை எதிரிகளாக பார்க்கிறார்கள்.
உள்ளூரில் “நான் பெரியவன், நீ தாழ்ந்தவன்” என்ற ஆதிக்க மன நிலையில் வாழ்ந்திருந்த தமிழக தொழிலாளர்கள், கர்நாடகாவில் சேர்ந்து வேலை செய்யும்போது அங்கே அவர்கள் சந்திக்கும் இன, மொழி ரீதியான பிரச்சினைகளை எப்படி இணைந்து சமாளிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் ‘பராரி’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர், அந்த அப்பாவி, அடிமை போன்ற சாதிய வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அப்பாவி கிராமத்து இளைஞராக, சாதி மோதல்களை விரும்பாமல் தன்னால் தன் மக்களுக்குக் கெடுதல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்லவராகவும் தேர்ந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
ஊரில் தண்ணீர் பிரச்சினைக்காக ஏற்படும் மோதலை நாசூக்காகத் தவிர்க்கும் காட்சியிலும், பாறையைச் சொந்தம் கொண்டாடுவதால் ஏற்படும் சண்டையின்போதும் அது சாதி மோதலாக உருவெடுக்காமல் தவிர்க்க அவர் தவிக்கும் பாடு ஏற்புடையதே..!
தான் காதல் திருமணம் செய்தால் ஊருக்குள் ஏற்படவிருக்கும் மோதலை மனதில் வைத்து காதலை ஏற்க விரும்பாத பக்குவத்தில் இருப்பவர் அதே பெண்ணிற்குக் கர்நாடகாவில் நடக்கும் அநீதிக்கு எதிராகப் பொங்கியெழுந்து ஆக்ரோஷம் காட்டும் காட்சியில் தன் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார். அதே நேரம் கிளைமாக்ஸ் காட்சியிலும் தன் நடிப்பின் மூலம் நம்மைப் பெரிதும் கவர்கிறார் அரிசங்கர். பாராட்டுக்கள்!
நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா கல்யாண், எளிமையான, கிராமத்து முகம். காதலுக்காக ஏங்கும் தனது நடிப்பைக் கடைசிவரையிலும் காண்பித்திருக்கிறார். ஆனாலும், ஊரின் நிலைமை என்ன என்பதை கண்ணெதிரே கண்டறிந்தும் அதைப் பற்றித் துளியும் கண்டு கொள்ளாத இவரது கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் சரிவானதே..!
கன்னட வில்லனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன் ஒரு பக்கம் மிரட்டியிகுக்க, ஊருக்குள் இருக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த வில்லனான பிரேம்நாத்தும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஆதிக்க சாதியினரைத் தூண்டிவிடும் பணக்காரனாக குரு ராஜேந்திரன் தனது நரி புத்தியைக் காட்டுமிடத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் ஏனைய அனைத்து நடிகர்களும், புதியவர்களாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த தங்களது நடிப்பின் மூலம் அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், அந்த ராஜபாளையம் கிராமத்தின் எளிய மக்களின் வாழ்வியலை அழகு, தோரணையில்லாமல் மிக எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் பிரமாதம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் பாடல் வரிகள் நம் காதுகளை எட்டியிருக்கின்றன. இசையும் இனிமை.. பாடலும் அருமை. பின்னணி இசையும் படத்தின் தன்மைக்கேற்ப ஒலித்திருக்கிறது.
சாம்.ஆர்.டி.எக்ஸ்–ன் படத் தொகுப்பும், கலை இயக்குநரின் பணியும் படத்தின் தரத்தைக் கூட்டவே செய்திருக்கின்றன.
கிராமத்து வாழ்வியலை எந்தவித கலப்படமும் இல்லாமல் ரசிகர்களிடத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது இந்தப் ‘பராரி’ திரைப்படம்.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி, மக்களிடையே இருக்கும் சாதிய ரீதியிலான மோதலுக்கான அடிப்படைத் தளம் அரசியலும், அரசியல் கட்சிகளும்தான் என்பதை நேரிடையாகவே, தைரியமாக சொல்லியிருக்கிறார்.
சாதிய ரீதியிலான வேறுபாட்டை மறைமுகமாகத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு வசனத்தாலேயே சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
உள்ளூரில் சாதியை வைத்து பிரிவினை.. தீண்டாமை போக்கு, மாநிலங்களில் இனம், மொழியை மையமாக வைத்து பிரிவினை, மோதல் என்று இந்தியா முழுவதும் சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பேரில் நடக்கும் வன்கொடுமைகளை மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் எழில் பெரியவேடி. பாராட்டுக்கள்..! வாழ்த்துகள்..!
பராரி – சாதி, இனம், மொழி வெறியர்களுக்குச் சவுக்கடி.
RATING : 4 / 5









