full screen background image

ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..!

ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..!

மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால்… அதைக் கண்டு பொருமியும், பொங்கியும் எழுந்ததுதான் ‘சமூக நீதி’ என்ற முழுக்கம்.

தற்போது நம் தமிழ்ச் சினிமாவில் ‘சமூக நீதி’ பேசும் படங்கள் அதிகமாக வரத் துவங்கியுள்ள நிலையில்  ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டும், உளவியல் ரீதியான அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும்விதமாகவும், மேலும் விடுதலைக்கான விடியலை வேண்டியும் ‘பற’ எனும் அட்டகாசமான படம் தயாராகி  இருக்கிறது.

லெமுரியா மூவிஸ், V5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு எஸ்.பி.முகில்.

IMG_3982

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி,  நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வ.கீரா, ஔிப்பதிவு – சிபின் சிவன், இசை – ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் – உமாதேவி, சினேகன், படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – மகேஷ், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர், இணை தயாரிப்பு – s.p.முகிலன், தயாரிப்பு – பெவின்ஸ் பால், ராமச்சந்திரன்,  ரிஷி கணேஷ்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில்  வெளியிடப்பட்டது. விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையில் பாடலாசிரியர் சினேகன் எழுதிய ‘உன் பேரை எழுதி வச்சேன்’ என்ற பாடல் யூ டியூபில் 15 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தும், கடந்தும் சாதனை புரிந்து வருகிறது.

IMG_4141
இப்படம் பற்றி படத்தின் இயக்குநரான கீரா பேசும்போது, “நம் சமூகத்தை ஆணவக் கொலைகள் அச்சுறுத்திவரும் இந்த வேளையில் ‘பற’ படம் வெளிவருவது மிகத் தேவையான ஒன்றாக இருக்கும்.

ஆணவக் கொலைகளை மிகவும் காத்திரமாக எதிர்க்கும் படமாக இது இருக்கும். இங்கு ஒடுக்கு முறை என்பதை  சாதிய ஒடுக்கு முறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள். அது அப்படியல்ல. மத ஒடுக்கு முறை, பாலின ஒடுக்கு முறை, பொருளாதார  ஒடுக்கு முறை, தேசிய ஒடுக்கு முறை என இங்கு ஒடுக்கு முறைகள் நிறைய இருக்கின்றன.

இப்படத்தின்  டைட்டிலை வைத்து சிலர் ‘பற’ என்பது ‘சாதியத்தின் குறியீடா?’ என்று பலரும் கேட்கிறார்கள். ‘இல்லை’ என்பதே எனது பதில். ‘பற’ என்பது சாதியத்தின் குறியீடு அல்ல. ‘பற’ என்றால் ‘பறத்தல்’. அது விடுதலையின் குறியீடு.

IMG_9610

ஓரே இரவில் நடக்கும் கதைதான் படம். படம் நெடுக சீரியசாக விசயங்கள் மட்டும் இருக்காது. இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விசயத்தை அவர்கள் ரசிக்கும்விதமாகவே செய்திருக்கிறோம்.

படத்தில் ‘அம்பேத்கர்’  என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரை அம்பேத்கர் கேரக்டர் வெளிப்படுத்தும். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

வட சென்னை ப்ளாட்பாரவாசியாக நித்திஷ் வீரா நடித்துள்ளார். அவரையே நம்பி நாம் வாழும் மண்ணில் நமக்கு ஒரு துண்டு நிலம் கிடைத்து விடாதா என்று ஏங்கி  வாழும் கதாபாத்திரம் சாவந்திகாவிற்கு. பார் டான்சராக அஷ்மிதா தோன்றுகிறார்.

IMG_2859

கிராமத்தில் இருந்து தப்பித்து வரும் காதலர்களாக சாந்தினி மற்றும் சாஜூமோன் நடித்துள்ளனர். சின்னச் சின்னத் திருட்டு வேலைகளில் ஈடுபடும் கேரக்டரில் முனிஷ்காந்த் நடித்துள்ளார். நடிகர் முத்துராமன் ‘பழுத்த’ அரசியல்வாதியாக நடித்துள்ளார். படத்தில் அவர் பெயர் ஆண்டவர்.

இவர்களின் கதைகள் தனித்தனியே வந்து மொத்தமாய் ஒரு புள்ளியில் இணைவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் வீரியமிக்கவையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

IMG_9050

ஒரே இரவில் நடக்கும் கதை இது. இரவில் நடக்கும் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு விடியலைத் தேடுவார்கள். அந்த விடியல் கிடைத்ததா என்பது உங்கள் முன் காட்சிகளாக விரியும்போது நிச்சயம் நாங்கள் கவனிக்கப்படுவோம் என்று நம்புகிறோம்…” என்றார்.

தரமாக தயாராகியுள்ள ‘பற’ நிச்சயமாக உயரப் பறக்கும் என்பது படக் குழுவினரின் நம்பிக்கை. இம்மாத இறுதியில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Our Score