முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது

முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது

60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களை  கொடுத்த  முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா இம்மாதம் 22-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்  முக்தா சகோதரர்கள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து  பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945-ல் முக்தா ராமசாமி, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தட்டச்சராக வேலைக்கு சேர்ந்தார்.

muktha brothers-2

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பர்மா  ராணி’ தயாரிப்பின்  காலக்கட்டத்தில்.. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன  நேரத்தில் வராததால் அந்தப் படத்தைத்  தயாரித்து இயக்கி வந்த தயாரிப்பாளரான  T.R.சுந்தரம் கோபத்தில்,  அந்தக் கதாநாயகனை  நீக்கிவிட்டு தானே கதாநாயகனாக நடித்தார். அந்தச் சமயத்தில்  முக்தா  ராமசாமியை  தன் காரியதரிசியாக  வேலை  செய்யச்  சொல்லி  தயாரிப்பு  வேலையில் ஈடுபடுத்தினார் டி.ஆர்.சுந்தரம்.

பின்பு 1947 கம்யுனிச கொள்கையில்  பிடிப்பு கொண்ட அவரது தம்பி சீனிவாசனை  முக்தா ராமசாமியின்  வேண்டுகோளுக்கு  இணங்க  வேறு  பாதை  அமைத்து தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிய வைத்தார் டி.ஆர்.சுந்தரம்.

திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் T.R.S. சொல்லும் வேலையை முதற் கடமையாகக் கருதி  செய்து  முடிப்பார்  முக்தா  ராமசாமி.  முக்தா  சீனிவாசன்  உதவி இயக்குநராகவும், இணை  இயக்குநராகவும்  வேலை செய்து  ‘முதலாளி’  என்கிற  படத்தை இயக்கினார். முக்தா ராமசாமி  படங்களையும் விநியோகமும் செய்தார்.

MUKTHA-SRINIVASAN-1

‘முதலாளி’க்கு பிறகு முக்தா சீனிவாசன் இயக்கிய  படங்கள்  சரியாக  ஓடாத  காரணத்தால் வேலை  இல்லாமல்  இருந்த  சீனிவாசனுக்கு அண்ணனுடன்  சேர்ந்து  சொந்த  பட  தயாரிப்பு நிறுவனம் தொடங்கச்  சொல்லி  அறிவுறுத்தி அதற்கான உதவிகளையும் செய்தவர் தமிழ்த் திரையுலக பிதாமகரான இயக்குநர் கே.சுப்ரமணியம்.

1959 நவம்பரில் ஹிந்தி மொழியில் வெளியான மீனா குமாரி நடித்த ‘Ardhangini’ என்ற வெள்ளி விழா கொண்டாடிய படத்தை முக்தா சகோதரர்கள் விலைக்கு வாங்கினர்கள்.

அந்தப் படத்தை தமிழில் ‘பனித்திரை’ என்கிற பெயரில் உருவாக்கினார் முக்தா சீனிவாசன். இந்தப் படத்தில் கதாநாயகன் நாகேஸ்வரராவ். நாயகி சரோஜா தேவி.

muktha-panithirai-poster

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்கள் நடைபெற்ற பிறகு தெலுங்கு சினிமாவில்  நாகேஸ்வரராவ் மிக பிரபலமான நடிகராக இருந்ததால், இந்தப் படத்திற்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது.

அதனால் நாகேஸ்வரராவ் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுத்து அதுவரையிலும் எடுக்கப்பட்ட ஷூட்டிங்கிறான செலவையும் சேர்த்துக் கொடுத்து "வேறு நடிகரை வைத்து இந்தப் ‘பனித்திரை’ படத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.." என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

‘பனித்திரை’ படப்பிடிப்பு நின்று  8 மாதங்கள்  கழித்து நாகேஸ்வரராவுக்கு பதிலாக நடிகர் ஜெமினி கணேசன்  இதில் நடிக்க  ஒப்புக்  கொண்டார்.  மீண்டும்  படப்பிடிப்பு  தொடங்கியது. 

பல தடங்கல்களை  சந்தித்து ’பனித்திரை’ திரைப்படம் 1961-ம் ஆண்டு  வெளியானது.  படம் ஓரளவு  ஒடினாலும்  கிடைத்த பணத்தை வைத்து படத்திற்காக வாங்கப்பட்ட கடனை அடைக்கத்தான்  முடிந்தது. 

MUKTHA-SRINIVASAN

பிறகு முக்தா சீனிவாசன் தயாரித்த ‘இயத்தில் நீ’,  ‘பூஜைக்கு வந்த மலர்’ ஆகிய திரைப்படங்கள் சுமாராக ஓடினாலும், இதற்கடுத்து தயாரித்த ‘தேன் மழை’ திரைப்படம் 92 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை  கண்டது.

இதைத் தொடர்ந்து முக்தா பிலிம்ஸ் தயாரித்த ‘நினைவில்  நின்றவள்’,  ‘பொம்மலாட்டம்’ ஆகிய படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெற்றன. அதன்  பிறகு  முக்தா பிலிம்ஸ் நிறுவனம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் முதல்முறையாக ‘நிறைகுடம்’ என்ற படத்தைத் தயாரித்தது. இத்திரைப்படம் வியாபார ரீதியில் மிகப்  பெரிய வெற்றி அடைந்தது.

muktha-niraikudam-poster

தொடர்ந்து முக்தா பிலிம்ஸ் தயாரித்த ‘தவப் புதல்வன்’,  ‘சூரியகாந்தி’,  ‘அந்தமான்  காதலி’, ‘பொல்லாதவன்’,  ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘சிவப்பு சூரியன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘பரிட்சைக்கு நேரமாச்சு, ‘நாயகன்’,  ‘கதாநாயகன்’,  ‘வாய்கொழுப்பு’ போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தன.

சிவகுமார், லட்சுமி,  ஸ்ரீப்ரியா ஆகியோரின்  நடிப்பில்,  எழுத்தாளர் சிவசங்கரியின் கதையில், விசுவின்  திரைக்கதை,  வசனத்தில்  முக்தா சீனிவாசனின்  இயக்கத்தில் வெளியான ‘அவன் அவள் அது’ திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

muktha-anan-aval-athu-poster

ஒட்டு மொத்தமாக தமிழ்ச் சினிமாவில் முக்தா பிலிம்ஸ் நிறுவனம் இதுவரையிலும் 41 படங்களைத் தயாரித்துள்ளது.

இப்போது கடைசியாக முக்தா பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘வேதாந்த தேசிகர்’ திரைப்படம் வரும் 2020-ம் ஆண்டில் திரைக்கு  வர  இருக்கிறது.

இந்த 60 ஆண்டு காலப் பயணத்தில் தங்களது உயர்வுக்குத்  தோள்  கொடுத்த  நடிகர்கள், நடிகைகள்  மற்றும்  தொழில் நுட்பக்  கலைஞர்கள்  ஆகியோருக்கு  நன்றி தெரிவிக்கும்வகையில் ‘முக்தா பிலிம்ஸ் வைர விழா’  என்ற  பெயரில் ஒரு விழாவினை முக்தா பிலிம்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

muktha-films-logo

இந்த விழா வரும்  டிசம்பர்  22-ம் தேதி  மாலை  5  மணியளவில்  எம்.ஆர்.சி.  நகரில் உள்ள செட்டி நாடு  வித்யாஷ்ரம், குமாரராஜா ஹாலில்  நடைபெற உள்ளது.

இந்த விழாவில்  ஏராளமான தமிழ்த் திரையுலக  பிரமுகர்கள்  மற்றும்  அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இந்த விழாவிற்கான  அனைத்து  ஏற்பாடுகளையும்  முக்தா ராமசாமி  மற்றும்  முக்தா சீனிவாசனின் குடும்பத்தினர் இணைந்து  செய்து வருகிறார்கள்.