full screen background image

பப்பாளி சினிமா விமர்சனம்

பப்பாளி சினிமா விமர்சனம்

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஏதோ ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்பதற்காக வைத்துவிட்டார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. அவ்வளவுதான்..!

ரோட்டோரத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவரது ஒரே மகன்தான் ஹீரோவான செந்தில். இளவரசுவுக்கு ஒரேயொரு நீண்ட நாள் கனவு உண்டு. அதாவது சரவண பவன் மாதிரி அனைத்து வார்டுகளில் ஒரு சங்கிலி தொடர் ஹோட்டல்களை ஆரம்பிக்க வேண்டுமென்று.. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டுமே..? அவரும், அவரது மனைவியும் மட்டும் நாயாய் உழைக்க..  மகன் மட்டும் வழக்கம்போல ஊரைச் சுற்றுகிறார்.

ஓரிடத்தில் ஹீரோயின் இஷாராவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சில, பல மோதல்களுக்கு பிறகு இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள். எப்போதும் ஜாலியாகவே யதார்த்தமாக இருக்கும் செந்திலுக்கு ஐ.ஏ.எஸ்.ஆவது என்பது ஒரு கனவு. ஆனால் அது பற்றி இடைவேளைக்கு முன்பு ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.. இதைப் பற்றி வருங்கால மாமியாரான சரண்யாவிடம் சொல்ல.. அவர் மாப்பிள்ளையையே வேண்டாம் என்கிறார்.

மகள் காரணம் கேட்க.. தன்னுடைய சொந்தக் கதையைச் சொல்கிறார். சரண்யாவும், நரேனும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள.. நரேன் சரண்யாவுக்காகவே ஐ.ஏ.எஸ். கனவைத் தொலைத்துவிட்டு மின்சார வாரிய வேலையில் இருப்பதாகவும் இந்தக் குற்றவுணர்ச்சியுடனேயே தான் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் சரண்யா. அந்தக் குறையைப் போக்கணும்னா என்னைய படிக்க வைங்களேன். நான் ஐ.ஏ.எஸ். ஆகிட்டா உங்களுக்குத் திருப்தியாயிருமே என்று செந்தில் சொக்குப்பொடி போட.. ஓகே என்கிறார்கள் மாமனார் வீட்டில்.

பொறந்த வீட்டிலோ விருதுநகரில் ஒரு ஹோட்டல் ஓனரின் வீட்டில் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துவிடுகிறார்கள். இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க வேண்டி செந்தில் காதலியின் வீட்டில் சரணடைய, தடாலடியாக சரண்யா அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.

அப்பனுக்கும் மகனுக்குமான சண்டையில் இடையில் புகும் மாமியார் சரண்யா, தான் செந்திலை எப்படியாவது ஐ.ஏ.எஸ். ஆக்கியே காட்டுகிறேன் என்று சவால்விட்டு மாப்பிள்ளையை கையோடு தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். சொன்னபடி செய்தாரா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

கதையின் நாயகனாக செந்தில்.. டிவி தொடரில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பதால் இதில் சிரமப்படாமல் நடித்திருக்கிறார். நகைச்சுவையும், ரொமான்ஸும் கை கூடியிருக்கிறது.. இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்..! தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இஷாராவிடம் கொஞ்சும்போதும் அப்படியேதான் நினைக்கத் தோன்றுகிறது..

புதிய ஹீரோயின் இஷாரா. ஒருவேளை இவரைத்தான் பப்பாளி என்று சொல்லியிருக்கிறாரோ என்றால் அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லை. ஆனால் முகம் மட்டுமே ஏதோவொன்று இவரிடம் இருக்கிறது என்பதைச் சொல்கிறது.. பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்புத் திறமையைக் கொட்டியிருக்கிறார்..

சரண்யா பொன்வண்ணன்.. சொல்லவே வேண்டாம்.. மாமியாராகவும், தாயாகவும் வாழ்ந்தே காட்டியிருக்கிறார். இப்படத்தின் இயக்குநர் வீடு தேடிச் சென்று கதையைச் சொன்னவுடன்.. அப்படியே அந்தக் கதையில் சில, பல மாற்றங்களையும் சரண்யாவே சொல்லியிருக்கிறார். அதையும் இயக்குநர் ஏற்றுக் கொண்டு மாற்றியிருக்கிறார். ஆக.. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் சரண்யா பொன்வண்ணனின் கைவண்ணமும் அடக்கம் என்பதால் அதற்கு தனியாக பாராட்டிவிடுவோம்..

இளவரசுவின் ஆட்டம் பற்றி தனியாகத்தான் சொல்ல வேண்டும்.. மகனது துரோகத்தைத் தாங்க முடியாத சோகம்.. தனது ஹோட்டல் கனவைவிட மகனது ஐ.ஏ.எஸ். கனவு பெரிதல்ல என்று நினைக்கும் சின்னத்தனம்.. இதனால் இவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள் என்று கொடுத்த வேடத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் வரும்போதெல்லாம் சிரிக்க வைத்திருப்பவர் சிங்கம்புலிதான். லோக்கல் கவுன்சிலராக இருக்கும் சிங்கம்புலிக்கு ஹீரோயின் மீது ஒரு கண்.. அவரை காதலிப்பதாக வீடு தேடி வந்து பெண் கேட்டு.. பொண்ணு படிச்சு முடியட்டும் என்று ஹீரோயின் வீட்டில் சொல்லிவிடுவதால் தனது தொகுதிப் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு ஹீரோயின் பின்னாலேயே சுற்றி வரும் கேரக்டர்..

தனது கைத்தடிகளில் அவ்வப்போது ஹீரோயினின் ஆக்சன்களுக்கு கவுண்டர் கொடுக்கும்விதம் சூப்பர்.. பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது.. தனி ஆவர்த்தனத்தில் வெற்றி பெற்றுவிட்டார் சிங்கம்புலி. இத்தனை அழகாக நடித்தவர் பிரஸ்மீட் நிகழ்ச்சியன்று தனக்கும் தனி போஸ்டர் அடிக்காததால் வர முடியாது என்று தெனாவெட்டாகச் சொல்லி வீட்டிலேயே இருந்துவிட்டதை மன்னிக்கவே முடியாது. இது இப்படியொரு நல்ல வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு இவர் செய்த துரோகம்..!

விஜய் எபிநேசரின் இசையில் மனைவி வீட்டில் வாழப் போகும் பையா என்ற ரீமிக்ஸ் பாடல் ஒன்றுதான் உருப்படி.. மற்றபடி டாஸ்மாக் பாடலும், காதல் பாடல்களும் காலை வாரிவிட்டன. கூடவே இருக்கும் செவ்வாழையாக ஜெகன்.. அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார். இவரை இன்னும் கொஞ்சும் உருப்படியாய் பயன்படுத்தியிருக்கலாம்..

ஐ.ஏ.எஸ். தேர்வு என்றில்லை.. படிக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்கிற தத்துவத்தை முன்னிறுத்தியிருக்கும் படத்தில் பிற்பாதியில் மட்டுமே அழுத்தமான காட்சிகள் இருப்பதும் ஒரு குறை..! இருந்தாலும் இதனை மன்னிக்கலாம்..!

கமர்ஷியல் படம்தான்.. ஆனால் முதலில் மாத்திரையை முழுங்க வைத்து பின்பு மிட்டாய் கொடுக்கும் சாதூர்யத்துடன் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.கோவிந்தமூர்த்தி..! பாராட்டுக்கள்..!

Our Score