நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..!

நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..!

தமிழ்ச் சினிமாவின் மூத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான செந்தில் இதுவரையிலும் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இன்றைக்கும் கவுண்டமணி-செந்தில் காம்பினேஷனை அடித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவைகளாக தமிழ் ரசிகர்களுடன் இணைந்துள்ளன.

கவுண்டமணி நகைச்சுவையில் மகான்’ என்றே அழைக்கப்பட்டாலும் அவரும் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அவைகளும் ஓரளவுக்கு ஓடியிருந்தன. ஆனால் அவரை ஒரு நாயகனாக நிறுத்த முடியவில்லை. அதனால், கவுண்டமணியும் ஒரு கட்டத்தில் பழையபடி நகைச்சுவைக்கே திரும்பிவிட்டார்.

நடிகர் செந்தில் மட்டும் கவுண்டமணியுடன் மட்டுமில்லாமல் தமிழ்ச் சினிமாவின் அனைத்து நகைச்சுவை நடிகர்களுடனும் சேர்ந்து தனியாக சோலோ காமெடியனாகவும் நடித்துவிட்டார். ஆனால் இதுவரையிலும் படத்தின் நாயகனாக ஒரு படத்தில்கூட நடித்ததில்லை.

இத்தனையாண்டுகள் கழித்து இப்போதுதான் நடிகர் செந்தில் முதல்முறையாக ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இது, அவர் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரமாம்.

உறியடி’ மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ‘பன்னிக்குட்டி’, ‘கடைசி விவசாயி’, ‘சத்திய சோதனை’, தர்புகா சிவா இயக்கும் ‘முதல் நீ முடிவும் நீ’ போன்ற படங்களைத் தயாரித்திருக்கும் ‘சூப்பர் டாக்கீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரான சமீர் பரத்ராம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் நடிகர் செந்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கவிருக்கிறார். சுரேஷ் சங்கையா ஏற்கெனவே ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ப்ரேம்ஜி அமரன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படமாகும்.

இந்தப் புதிய படம், ஒரு சமூகப் பிரச்சினை பற்றிப் பேசக் கூடிய படமாம். ஆயுள் தண்டனை கைதியான ஒருவர் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியில் வந்தவர் இந்த உலகத்தை எதிர் கொள்வது எப்படி என்பதுதான் படத்தின் கதையாம்.

தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.