full screen background image

பாலக்காட்டு மாதவன் – சினிமா விமர்சனம்

பாலக்காட்டு மாதவன் – சினிமா விமர்சனம்

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்கிற வசனத்துக்குச் சொந்தக்கார்ரான நடிகர் விவேக்கிற்கும் ஹீரோ ஆசை இருப்பதில் தவறில்லைதான். வடிவேலு இன்னொரு பக்கம் முட்டி மோதிப் பார்த்தும் ஒரேயொரு படத்தில்தான் அவரால் ஹீரோவாக ஜெயிக்க முடிந்த்து.

அந்த அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்லையென்றாலும் விரலுக்கேத்த வீக்கம் என்பதை போல மீடியம் பட்ஜெட்டில் விவேக்கிற்கு ஏற்ற ஒரு கதையில் அவரை கதையின் நாயகனாக வைத்து இந்தப் ‘பாலக்காட்டு மாதவனை’ உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சந்திரமோஹன்.

பாலக்காட்டு மாதவனான விவேக்கும், சோனியா அகர்வாலும் தம்பதிகள். இரண்டு பெண் குழந்தைகள். இருவரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்கிறார்கள். ஆனால் சோனியாவுக்கு விவேக்கைவிடவும் அதிக சம்பளம். இந்த தாழ்வு மனப்பான்மையோடு, கொஞ்சம் சோம்பேறித்தனமும் சேர்ந்து கொள்ள அலுவலக வேலையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை விவேக்.

ஒரு நாள் இது பெரிய பிரச்சினையாக ஆபீஸ் மேனேஜர் மனோபாலாவிடம் ‘கா’ விட்டு தனது பதவியை ராஜினாமா செய்கிறார் விவேக். இதைவிட அதிக சம்பளத்தில் அதிலும் உன்னைவிட அதிக சம்பளத்தில் வேலைக்குப் போகப் போகிறேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வேலை தேடுகிறார்.

கால் டாக்சி டிரைவர் வேலைக்கு போகிறார் செட்டாகவில்லை.  முதல் சவாரியே ‘நாடோடிகள்’ டைப்பில் காதலித்த பெண்ணைத் தூக்கிச் செல்லும்படியான நிகழ்வாக இருக்க தர்ம அடி வாங்கி உயிர் தப்புகிறார். போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் பஞ்சாயத்து போய் மனைவியும், ஆபீஸ் மேனேஜரும் வந்து காப்பாற்றுகிறார்கள்.

அடுத்ததாக ஒரு அமைச்சரின் பி.ஏ.வாக உருமாறுகிறார். அந்த வீட்டில் மாதவனுக்கு செம கவனிப்பு. இவர் சாப்பிட்ட பின்புதான் அமைச்சர் சாப்பிடுகிறார். இதற்கான காரணம் சில நாட்களில் தெரிய வருகிறது. அமைச்சரின் எதிரிகள் அமைச்சரை கொல்ல எல்லா வழிகளையும் பயன்படுத்த நினைப்பதால் சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவார்களோ என்று பயந்து அதற்கு டெஸ்ட் பையனாகத்தான் மாதவனை பயன்படுத்துவது அவருக்குத் தெரிய வர இங்கேயிருந்தும் எஸ்கேப்.

மூன்றாவது ஒரு எம்.எல்.எம். கம்பெனியில் ஐக்கியமாகிறார். கஷ்டப்பட்டு ஆட்களை சேர்க்கிறார். ஆனால் அந்த பிராடு கம்பெனியும் மாட்டிக் கொள்ள மக்கள் பரேடு எடுக்கிறார்கள் மாதவனை.

ஒண்ணும் செட்டாக மாட்டேங்குதே என்கிற கவலையில் இருப்பவருக்கு ஒரு லட்டு நியூஸ் கிடைக்கிறது. முதியோர் இல்லத்தில் வசித்து வரும் பட்டு மாமியை தத்தெடுத்துக் கொண்xடால் மாதந்தோறும் 25000 ரூபாய் கிடைக்கும் என்கிறார்கள். மாமிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் வங்கியில் இருக்கிற தகவலும் மாதவனுக்குக் கிடைக்க மனைவியின் எதிர்ப்பையும் மீறி பட்டு மாமியை தனது வளர்ப்புத் தாயாக நினைத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

ஒரிஜினல் மாமியாராக இருந்தாலே சண்டைகளுக்கு பஞ்சமில்லை. இதில் வளர்ப்பு மாமியாரென்றால் சொல்லவா வேண்டும்..? பட்டு மாமிக்கும், மனைவிக்கும் ஒத்துப் போகாமல் போக இடியாப்பச் சிக்கலாகிறது மாதவனுக்கு. வயிறார விதம், விதமாகச் சாப்பிட நினைக்கும் பட்டு மாமிக்கு வீட்டில் செய்யும் இரண்டே இரண்டு டைப் உணவு பிடிக்காமல் போக வசந்தபவன் டிபன் தினந்தோறும் வீட்டுக்கு வருகிறது. மாத பில் 45000 ரூபாயையும் தாண்டிச் செல்ல பட்டு மாமியை அழைத்து வந்தும் வேஸ்ட் என்கிற நிலைமை.

ஆனால் பட்டு மாமிக்கு மாதவனையும், அவனது பிள்ளைகளையும் மட்டும் பிடிக்கிறது. இந்த நேரத்தில் பட்டு மாமியை வேறு யாருடைய தலையிலாவது கட்டிவிடலாம் என்று நினைக்கும் மாதவன் அதற்காக ரவுடி ராஜேந்திரனை அழைத்து வர.. இதற்குப் பின்னும் இங்கே தான் இருக்கக் கூடாது என்று நினைக்கும் பட்டு மாமி வீட்டில் இருந்து வெளியேறுகிறாள்.

இவள் வெளியேறிய சமயம் அவளது மூன்று மகன்களும் நடுரோட்டில் நின்று பட்டு மாமியை தங்களது வீட்டுக்கு வரும்படி கெஞ்சி கூத்தாடி அழைத்துச் செல்கிறார்கள்.

பட்டு மாமிக்கு முதல் நாள் நல்ல கவனிப்பு. இரண்டாம் நாளில் பையன்களில் ஒருவர் பிரச்சினையை ஆரம்பித்து மாமியிடம் இருக்கும் 30 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்கிறார்கள். மாமி கொடுக்க மறுக்க. இதே நேரத்தில் தங்களது வீட்டின் பூஜையறையில் மாமி வைத்துவிட்டுச் சென்றிருக்கும் வளையல்களை பார்த்து மனம் மாறுகிறார் மாதவனின் மனைவி.

“பட்டு மாமி மறந்து வைத்துவிட்டுப் போயிருப்பார். போய்க் கொடுத்துவிட்டு வருவோம்…” என்று சொல்லி மாமியின் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கே மாமியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.. அடுத்தது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்..!

விவேக்கிற்கு ஏற்ற கதை. அவருடைய அக்மார்க் பஞ்ச் வசனங்களை பேசிக் கொண்டே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்திக் கொண்டே போகிறார். காட்சிக்கு காட்சி வசனங்கள் சிரிப்பலையை எழுப்புகின்றன. படத்திற்கு மிகப் பெரிய பலமும் வசனங்கள்தான். வண்டியில் போகும்போது ‘இப்போ 40-க்கு மேல அழுத்தாம இருந்தா 80 வயசுவரைக்கும் இருக்கலாம். இப்பவே 80-ஐ தொட்டா 40-லேயே போயிரலாம்’ என்று சிரிக்காமலேயே சொல்லி சிரிக்க வைக்கிறார். பக்கத்து வீட்டு மாமி, மாமாவுக்கு பிள்ளை பிறக்காதது குறித்து இவர் பேசும் வசனங்கள் புரிந்து கொண்டவர்களுக்கு காமெடி.. எப்போதும் பிரெஷ்ஷாக அல்வா துண்டுபோல இருக்கும் சோனியா அகர்வாலை வர்ணிக்கும் காட்சியில் மாதவன் காணாமல் போய் விவேக் மட்டும் தென்படுகிறார். ஒரு காட்சியில் சோனியாவிடம், “ரெண்டு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்க..? ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கிற மாகிரில்ல இருக்க..?” என்கிற இவரது ஜொள்ளுக்கு ஒரு ஷொட்டு..! கிளைமாக்ஸ் காட்சியில் உருக்கமாக பேசி காட்சியை கனமாக்கியிருக்கிறார் விவேக். இது போதும்தான்..!

சோனியா அகர்வால்.. சீரியஸ் கேரக்டர்களுக்கு மட்டுமே தகுதியானவர் என்பதை இப்போதும் நிரூபிக்கிறார். வசனங்களை மென்று, துப்பி இவர் பேசுவதை பார்க்கத்தான் கொடுமையாக இருக்கிறது. வெறுமனே அழகு மட்டும் இருந்துவிட்டால் போதுமா..?

பட்டு மாமியாக நடித்திருக்கும் செம்மீன் ஷிலாவுக்கு பாராட்டுக்கள். அவரது அனுபவ நடிப்பு தங்கு தடையில்லாமல் வந்திருக்கிறது. குறையொன்றுமில்லை. மேலும் மனோபாலா, கிரேன் மனோகர், ஆர்த்தி, யோகி தேவராஜ், செல் முருகன் என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களை புரிந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. வெளிப்புற காட்சிகள் வேறொரு வீடு. உள்புற காட்சிகள் வேறொரு வீடு என்றிருப்பதையெல்லாம் கவனமாக பதிந்துவிடாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். அனைத்து பாடல்களுமே வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாராகியுள்ளன. டாஸ்மாக்கில் பாடும் பாடலும், ஆட்டமும், காட்சியும் ஜோர்..! தன்னுடைய கெட்டப்புக்காக மலேசியாவில் விவேக் ஆடும் ஆட்டம் ஓவர் என்றாலும் அந்த பாடலின் இறுதியில் வரும் டிவிஸ்ட்டுக்காக இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

நகைச்சுவை பிரியர்கள் நம்பி செல்லலாம்..!

Our Score