full screen background image

ஒரு தோழன் ஒரு தோழி – சினிமா விமர்சனம்

ஒரு தோழன் ஒரு தோழி – சினிமா விமர்சனம்

தோழனுக்கு தோழன் கை கொடுத்த படங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். இதில் சற்று வித்தியாசமாக ஒரு தோழிக்காக களமிறங்கும் தோழனை பற்றிய படமாக அமைந்துள்ளது.

தோழன், தோழி என்றாலே அது நன்கு படித்தவர்கள்.. இலக்கியவாதிகள்.. பயன்படுத்தும் வார்த்தைகள் என்பது நமக்குத் தெளியும். இதையே சின்ன ஊரில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவி பிரயோகப்படுத்தினால் எப்படியிருக்கும் என்கிற ஒரு சிறிய ஜெர்க்கை இந்தப் படம் நமக்குக் காண்பிக்கிறது. கூடவே செல்போனை பயன்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.

கதைக்களம் ராஜபாளையம் பகுதி. ஹீரோக்களான மனோதீபன், கிருஷ்ணா இருவரும் நண்பர்கள். வறுமைக்கும் சற்று மேலேயான வாழ்க்கைத் தரம். பஞ்சு மில்லில் வேலை செய்கிறார்கள்.  இருவருக்குமே வீட்டில் பொறுப்புகள் உண்டு. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.

ஒரு நாள் இரவில் ஹீரோயினை இரண்டு கயவர்களிடமிருந்து இந்த இருவருமே காப்பாற்றுகிறார்கள். விதவை அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹீரோயினான அஸ்திரா பிகாம் கல்லூரி மாணவி. இவரைப் பார்த்தவுடன் மனோவுக்குப் பிடித்துப் போய் காதலிப்பதாகச் சொல்லி பின்னாலேயே அலைகிறார். இவரைத் திருத்த முயற்சித்தும் முடியாத கிருஷ்ணா பலவித கோப தாபங்களைக் காட்டி ஹீரோயினுக்கு மனோவின் காதலைப் புரிய வைத்து அவர்களை காதலாக்குகிறான். இதே நேரம் கிருஷ்ணாவுக்குள்ளும் ஒரு காதல் பூக்க.. அவனுக்காக காத்திருக்கும் அத்தை மகள் அபிநிதாவுடனான காதல் மலர்கிறது.

இந்த இரண்டு காதல் ஜோடிகளின் வாழ்க்கைப் பயணத்தில் கிருஷ்ணாவுடனான தனது நட்பை தோழன், தோழி என்று மாற்றி பெருமைப்படுத்துகிறார் ஹீரோயின் அஸ்திரா.

அஸ்திராவின் தாய் வட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்படுகிறாள். வட்டி கொடுத்தவன் அசலுக்கு பதிலாக அஸ்திராவை தனக்குக் கட்டி வைக்க சொல்லி டார்ச்சர் செய்கிறான். இந்த டார்ச்சரில்  இருந்து தப்பிக்க நினைக்கும் அஸ்திராவை மனோதீபன் தான் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியும் கொடுக்க.. காதல் கல்யாணம் நோக்கி நகர்கிறது.

இந்த நேரத்தில் தெரியாத்தனமாக அஸ்திராவின் செல்போனில் பதிவான அவளது வீடியோக்கள் செல்போன் ரிப்பேர் கடையில் அப்பட்டமாக தெரிய.. அந்தக் கடை ஊழியர்களால் மிரட்டப்படுகிறாள் அஸ்திரா. இனி என்ன ஆகும் என்பதுதான் மீதமான படத்தின் கதை.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இப்படத்தைத் தயாரித்து உருவாக்கியிருக்கிறார்கள். முதலில் அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். கேரக்டர்களின் குணாதிசயங்களை பக்குவமாக வகைப்படுத்தி அவர்கள் ஒவ்வொரு கணமும் கிடைத்த அனுபவத்திற்கு பிறகு தங்களை மாற்றிக் கொள்வதுபோல செய்திருப்பது யதார்த்தமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் யாருக்கும் ஒப்பனையில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஒப்பனையில்லாமலேயே மேல் பூச்சு பூசாத கதைக்குள் திரைக்கதையை அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

நடிப்பென்று பார்த்தால் படம் மொத்த்த்தையும் தாங்கியிருக்கிறார்கள் ஹீரோயின் அஸ்திராவும், ஹீரோக்களில் ஒருவரான கிருஷ்ணாவும். தன்னுடைய ஏழ்மையை தவறாக நினைத்து அதனை வைத்து தன்னிடம் பழக வேண்டாம் என்று அவர் ஹீரோவுக்கு பல முறை சொல்லும் காட்சிகளே அழுத்தமாக இருக்கின்றன.

வழக்கமான காதலிகள் போல் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை நிலைக்கு இந்தக் காதல் எந்தவித்த்திலும் இடைஞ்சலாகவிடக் கூடாது என்பதிலும், தனது பெயரை காப்பாற்றிக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறார் காதலி அஸ்திரா. இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் மிகவும் பிடித்திருக்கிறது.

தாடி வைத்த முகத்திற்குள் மூடில்லாத வாலிபனாகவே வரும் மனோதீபன், காதலிக்கத் துவங்கியுவுடன் ஆள் மாறுகிறார். ஆனால் தோற்றம் மாறவில்லை. காதலியிடம் முத்தம் கேட்டு வாங்கிவிடத் துடித்து அது காதலுக்கே வேட்டுவைக்கும் அளவுக்கு போனவுடன் சட்டென்று மன்னிப்பு கேட்டு காதல் ரத்துக்கு ஸ்டே ஆர்டர் வாங்கும் காட்சிகளிலெல்லாம் மிக மிக யதார்த்தம்.

இன்னொரு ஹீரோவாகவும், தோழனாகவும் நடித்திருக்கும் கிருஷ்ணா இடையிடையே வில்லனாகவும், நண்பனாகவும் இருவேறு தோற்றத்தில் காண்பிக்கப்பட்டாலும் தோழன் என்கிற சிறந்த கேரக்டரை அவர் தொட்டவுடன் அவரையும் மிகவும் பிடித்துப் போகிறது. அவருக்கும் ஒரு காதல் உண்டாகி அந்தக் காதல் ரசமானதாக உருமாறும் காட்சிகளெல்லாம் அருமை.

இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அபிநிதா.. சின்ன பட்ஜெட் படங்களுக்கென்றே கிடைத்திருக்கும் ஒரு நாயகி. சிறந்த நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வழங்கியும் வாய்ப்புகள்தான் வராமலேயே போகின்றன. இதிலும் காதலுக்காக உருகும் முறைப் பெண் கலைச்செல்வியாக மருகுகிறார்.. உருகிகிறார்.. மாமன் மறுத்ததும் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு கிளம்பும் காட்சியில் ‘அடப் பாவமே’ என்றுகூட சொல்ல வைத்துவிட்டார்.  ஒரு பாடல் காட்சியில் இவரது காதல் ஏற்பதும், திளைப்பதும், நடப்பதுமாக களை கட்டுகிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் மிக இயல்பான நடிப்பில் மிளிர வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்..!

தற்போதுதான் பாபநாசம் செல்போன் பிரச்சினையை ஆழமாகச் சொல்லி கண்ணை கசக்கியிருக்கிறது. அதற்குள்ளாக இந்தப் படம்.. செல்போனில் தற்செயலாக மாட்டிக் கொள்ளும் ஹீரோயினின் நிலைமை பரிதாபம்தான். அந்த விதியை மதியால் வெல்ல முடியாமல் தத்தளித்து கடைசியில் நமது பரிதாபத்திற்குரியவராகிறார் ஹீரோயின் அஸ்திரா.

இந்த நிலைமை இனி யாருக்கும் வரக் கூடாது என்றே நாம் நினைக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதேபோல் இந்த ஒரு செயலுக்காக தோழன் என்பவன் பழிக்குப் பழிதான் வாங்க வேண்டுமா என்பதையும் நாம் இயக்குநரை பார்த்து கேட்டாக வேண்டும். தோழன் வழி நடத்தலில் ஹீரோயின் தப்பித்திருப்பது போல வைத்திருந்தால் தோழன் தோழி வார்த்தைகளுக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும்.

ஹீரோயினே எதிர்பார்க்காத விஷயம் அது. கடைக்காரர்கள் ஐந்து பேருமே ஒன்று போல காமக் கொடூரர் போல காட்டியிருப்பது சற்று யதார்த்த்த்தை மீறிய செயலாக இருக்கிறது. தவிர்த்திருக்கலாம்..!

கிளைமாக்ஸில் ஹீரோவும், தோழனும் நடத்தும் சைக்கிள் ரேஸில் எப்படியும் ஹீரோதான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் விதைத்துவிட்டார் இயக்குநர். இதுவே இயக்குநருக்கு கிடைத்த வெற்றிதான்..! இந்த சைக்கிள் பந்தயக் காட்சிகள் அனைத்தும் புதுமையான திரைக்கதைக்கு அச்சாரம்.

எப்போதும் வெம்மையான கந்தக பூமியாக இருக்கும் ராஜபாளையத்தை குளுகுளுவாகவே மாற்றாமல் அதன் இயல்பு தன்மை கெடாமல் காட்சிகள் அனைத்திலுமே வெயிலாகவே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதுவே படத்தின் கதையோட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது..

ஜெய்கிரிஷின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் கேட்க வைத்திருக்கின்றன. சில நேரங்களில் பாடல்களே தடைக்கல்லாகவும் இருக்கின்றன. வேறு வழியில்லை.

இந்தப் படத்தின் பெண் படத் தொகுப்பாளரான கிருத்திகா இயக்குநருக்கு மிக்க பலமாக இருந்திருக்கிறார் என்பதும் இந்தப் படத்திற்குக் கிடைத்த பரிசு.

கந்துவிட்டிக்காரர் ஹீரோயினை கல்லூரி தேர்வு எழுத அனுப்ப மாட்டேன் என்று தகராற செய்யும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியில் தோழன் தான் செய்தவைகளை சொல்லத் துவங்கும் காட்சியிலும் படத்தொகுப்பாளரின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. அந்தக் காட்சியின் மனமொத்து ரசித்து பார்க்க வைத்ததற்கு படத்தொகுப்பாளர் கிருத்திகாவிற்கும் எமது பாராட்டுக்கள்.

மிக யதார்த்தமான மக்கள்.. ஹீரோக்களின் தாய்க்குலங்களின் நடிப்பு.. தமக்கையின் நடிப்பு.. ஹீரோயினின் தாயின் நடிப்பு.. மற்றும் ஊர்க்கார மக்களின் பங்களிப்பு.. படத்தில் காட்சிகளாக வரும் இடங்கள்.. யதார்த்த மனிதர்களின் வாழ்க்கைக் கதையைத்தான் படம் நெடுகிலும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

எந்த முகஞ்சுழிப்பு காட்சிகளும் இல்லாமல், தனக்குக் கிடைத்த நடிகர், நடிகையரை வைத்து மிக இயல்பான, நாட்டிற்கு அவசியம் தேவையான ஒரு விஷயத்துடன் பாராட்டக்கூடிய வகையிலான இயக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள்.

இந்த உருவாக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள். மென்மேலும் உயரட்டும்..!

Our Score