‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற சொல் பலருக்கு தெரியாமல் இருந்தாலும், கல்லூரி மாணவர்களிடையே அது மிகவும் பிரபலம். கல்லூரி நாட்களில் மாணவர்கள் மத்தியில் சண்டைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அதற்கு தீர்வாக அவர்கள் கருதுவது, இந்த ‘ஒத்தைக்கு ஒத்த’ சண்டை முறையைத்தான்.
அத்தகைய வலுவான கதையம்சத்தில் தற்போது உருவாக இருப்பதுதான் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம். இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
‘விஷன் ஐ மீடியா’ சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். இவர்கள் தயாரிப்பில் உருவான ‘அரண்மனை’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் ‘அஞ்சாதே’ புகழ் நரேன் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை ‘ஒத்தைக்கு ஒத்த’ உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
“பிறர் யாரையும் சார்ந்து இருக்காமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதுதான் ஒரு மனிதனின் சிறப்பு என்பதை ஒரு மாணவன் உணரும் இடம், கல்லூரி. அத்தகைய மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை, அவர்களுள் யார் வலியவன் என்பதில் ஏற்படும் சண்டைகள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் காதல். இந்த மூன்றையும் மையமாக கொண்டு நகர்வதுதான் எங்களின் ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்.
இந்தப் படத்திற்காக அதர்வா தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கிறார். மாணவர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்த அவர் தன்னுடைய எடையை குறைத்தும் இருக்கிறார். மொத்தத்தில் ‘ஒத்தைக்கு ஒத்த’ மோத தயாராக இருக்கிறார் அதர்வா. தற்போது கதைக்கேற்ற கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் நாங்கள் இருக்கிறோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பர்னீஷ்.