80-20 பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், இயக்குநர் ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்பது குழி சம்பத்’.
அறிமுக நாயகன் பாலாஜி, அறிமுக நாயகி நிகிலா விமல், அப்புக்குட்டி ஆகியோர் இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிகிலா விமலிற்கு தமிழில் முதல் படம் இதுவே. இந்தப் படம் வெளியாக தாமதம் ஆனதால் அவர் நடித்த பல்வேறு படங்கள் தமிழில் வெளிவந்துவிட்டன.
கொளஞ்சி நாதனின் ஒளிப்பதிவு செய்ய, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, சார்லி இசையமைக்க ஆர்.கே.செல்வமணியிடம் இணை இயக்குநராக இருந்த ஜா.ரகுபதி இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பேயே உருவான இத்திரைப்படம் இப்போதுதான் வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இது பற்றி இயக்குநர் ஜா.ரகுபதி பேசும்போது, “தியேட்டரில் படம் பார்க்கும் சுகமே தனி சுகம்தான். ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தியேட்டரில் படம் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இணையத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. தற்போது Over The Top Telecast எனப்படும் OTT முறையில் இணையத்தில் படங்கள் வெளியாகின்றன.
உதாரணத்திற்கு, அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்றவை 5000 திரைப்படங்களை தனது பக்கத்தில் வலையேற்றி வைத்திருக்குகிறது. அதற்கு மாதமாதம் சந்தா கட்ட வேண்டியது இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த படங்களும் இருக்கும். பிடிக்காத படங்களும் இருக்கும். இது ஒரு வகையான ஆன்லைன் ஸ்ட்ரீம் சினிமா பக்கம்.
எங்கள் படத்தை நாங்கள் Pay Per View (PPV) என்ற கான்செப்டில் வெளியிட இருக்கிறோம். அதாவது, உங்களுக்குப் பிடித்தப் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அப்படத்தை மட்டும் பார்க்கலாம்.
எளிமையாக சொல்லுவதென்றால், எப்படி ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோமோ, அதே போல, ஆன்லைனில் அப்படம் ரிலீஸ் ஆகும் தேதியில், டிக்கெட் எடுத்து, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்க்கலாம். அதனால்தான் இது ஆன்லைன் தியேட்டர்.
இதில் ஒரே ஒரு டிக்கெட் கட்டணத்தில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கலாம். தியேட்டருக்கு செல்லும் பயண நேரம் மிச்சமாகும். டிராபிக் தொல்லை இல்லை. ஹவுஸ்புல் ஆகிவிட்டதே என்ற வருத்தமும் இல்லை. தியேட்டரில் பார்க்கிங், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் இருந்து விடுபட இந்த ஆன்லைன் தியேட்டர் முறை சிறந்தது.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு, பிரபல கதாநாயகன் நடித்த படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், தரமான படத்தை தயாரித்தாலும் தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த Pay Per View எனும் ஆன்லைன் தியேட்டர் முறையில் வாரம் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதனால் உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, தங்களுக்குப் பிடித்த படத்தை மட்டும், குறைந்த கட்டணத்தில் பார்த்து மகிழலாம். ஆன்லைன் தியேட்டரில் படத்தை வெளியிட்டாலும், அப்படத்தின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்பதால் ரசிகனுக்கும் லாபம், தயாரிப்பாளருக்கும் லாபம்.
இப்போது எங்களது படம் ரீகல் டாக்கீஸ் என்னும் ஆன்லைன் தியேட்டர் தளத்தில் வெளியாகவிருக்கிறது. பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரான சி.வி.குமார் இதனை முன்னெடுத்து உருவாக்கியிருக்கிறார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், இதே ஆன்லைன் தியேட்டரில் மதுபானக் கடை படம் வெளியானபோது, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. அதனால் அது சரியாக இணையத்தில் வெளியாகவில்லை. இன்றோ இணையம் வழியாக பணம் செலுத்துவது எளிதாகிவிட்டது.
எனக்குத் தெரிந்து ஆன்லைன் தியேட்டரில் முதன் முதலாக வெளியாவது எங்களுடைய ‘ஒன்பது குழி சம்பத்’ படம்தான் என்பேன்.
ஆன்லைனில் தக்க பாதுகாப்போடு வெளியிடுவதால் திருட்டு பயம் இல்லை. இதனை யாரும் திருட மாட்டார்கள். மிகவும் குறைந்த கட்டணத்தில் படத்தை ஆன்லைனில், மிகத் தெளிவாக, எவ்வித இரைச்சலுமின்றி, தடங்கலுமின்றி நாங்கள் வெளியிடுவதால், கட்டணம் செலுத்தி படத்தைப் பார்ப்பார்கள்.
தமிழர்கள் என்றும் அடுத்தவன் உழைப்பை திருடுவதில்லை. நல்ல படங்களை கொண்டாடாமல்விட்டதும் இல்லை.
கிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்து கொண்டிருக்கும் போக்கிரி இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசை மாறிப் போகிறது என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது.
தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்று கிராமங்களும் நகரங்களைப் போலவே இருக்கின்றன. எங்கள் படத்தில் தொழில் நுட்ப வசதி இல்லாத கிராமத்தைப் பார்ப்பீர்கள். திருச்சியில் உள்ள ஒரு கிராமத்தை கேமரா கண்களில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம்.
மீதி வெற்றியை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அள்ளித் தருவார்கள் என்று நம்புகிறேன்…” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு..!!!