full screen background image

“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..!

“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 90-வது பிறந்த தினத்தையொட்டி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது குருநாதரை வாழ்த்தி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ செய்தி கவிதாலயா நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது இது :

“இன்று என் குருவான கே.பி சார் அவர்களின் 90-வது பிறந்த நாள். கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பேன்.

ஆனால், நான் இன்று பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழக் காரணமே கே.பாலச்சந்தர் சார்தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட்களை எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்குக் காண்பித்து என்னை முழு நடிகனாக்கி, தொடர்ந்து நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர்களைக் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

என் வாழ்க்கையில் என் அப்பா, அம்மா, அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி.யும் இருக்கிறார். என்னுடைய நான்கு தெய்வங்கள் இவர்கள்.

அவர் எனக்கு மட்டுமல்ல; இன்னும் எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாகவும் இருந்துள்ளார்.

நான் பல இயக்குநர்களிடம் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால், கே.பாலச்சந்தர் அவர்களோடு பணியாற்றும்பொழுது சூட்டிங்கின் ஏதோ ஒரு பகுதியில் லைட் செட் போடக் கூடிய ஒரு தொழிலாளி… எங்கேயோ ஒரு இடத்தின் உச்சியில் உட்கார்ந்து இருக்கும் நபர்கூட எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அப்படியான ஒரு கம்பீரம் கே.பி. அவர்களிடம் இருந்தது. அதுபோன்று வேறு யார்கிட்டேயும் நான் பார்த்ததில்லை.

கே.பி. தான் வாழ்ந்த காலத்தில் மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக அனைத்திலும் பெர்பெக்ட்டாக விளங்கினார். இன்னும் நிறைய நாட்கள் அவர் வாழ்ந்திருக்கலாம்.

அவ்வளவு பெரிய மகான். அத்தனை பேருக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என் குரு. அவர்களை இன்று அவரது 90-வது பிறந்த நாளில் நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்று ரஜினி பேசியுள்ளார்.

.

Our Score