full screen background image

நார்வே திரைப்பட விழா-இந்தாண்டு முதல் விண்ணப்பத்திற்கு கட்டணம் அறிவிப்பு..!

நார்வே திரைப்பட விழா-இந்தாண்டு முதல் விண்ணப்பத்திற்கு கட்டணம் அறிவிப்பு..!

கடந்த ஐந்தாண்டுகளாக நார்வேயில் நடைபெற்றுவரும் தமிழ்த் திரைப்பட விழாவில் இந்தாண்டு முதல் போட்டியிடும் படங்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அத்திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

அது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

இனிய தமிழ் ஊடக நண்பரகள் அனைவருக்கும் வணக்கம்,

நோர்வே தமிழ் திரைப்பட விழா, தனது ஐந்தாவது வருடத்தை, கலைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பிரமாண்டமான ஆதரவோடும், வாழ்த்துக்களோடும், வெற்றியோடு பூர்த்தி செய்திருக்கிறது.

திரைப்பட விழா குழுவினர் சார்பாகவும், திரைப்பட விழா இயக்குனர் வசீகரன் சிவலிங்கம், அத்தகைய ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார்.

தொடரும் எமது 6-வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவின் செயற்பாடுகள்  விரைவாக நடைபெற்று வருகின்றன என்பதை இங்கே பெரு  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஐந்து வருட காலமாக, இந்த விழாவின் சகல செலவுகளையும், வசீகரன் சிவலிங்கம் தனி ஒரு மனிதனாக கவனித்துக்கொண்டார். தற்போது இந்த விழா பிரபலமடைந்து, பிரம்மாண்டமான விழாவாக  உருவெடுத்திருப்பதால். இத்திரைப்பட விழாவிற்கு எதிர்காலங்களில் நன்மை தரக் கூடியவகையில் சில புதிய வழிமுறைகளை பின்பற்ற உள்ளோம்.

நோர்வே தமிழ் திரைப்பட விழா தெரிவுக்கு வரும் அனைத்து  படங்களுக்கும் சமமான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுவதில்லை என்ற, படத் தயாரிப்பளர்களின் ஆதங்கத்தை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த விதிமுறைகளை இந்த வருடம் மேற்கொள்ள இருக்கிறோம்.

தெரிவுக்காக அனுப்பபடும் படங்களின் முதல் சுற்று, நோர்வே தமிழ் திரைப்பட விழாவின் குழுவினால் நடத்தப்பட்டு இறுதி தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்ட, படங்களின் பட்டியல் மட்டும் விருது தெரிவுக்காக நடுவர்களின் முன் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் பலருக்கு மனஸ்தாபங்கள் ஏற்பட்டது உண்மை.

ஆகையால் இந்த வருடம் முதல், போட்டிக்கு வந்துள்ள அனைத்து படங்களையும் பார்வையிடுமாறு  நடுவர் குழுவை வேண்டி இருக்கிறோம்.

அனைவருக்கும் நன்மை தரக்கூடிய  இந்த திட்டத்தை செயலாற்றுவதற்கு அதிகப்படியான செலவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏன்  எனில் தரமான நடுவர்களுக்கு அதற்குரிய அதிகப்படியான செலவை நாம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு உள்ளது.

இதன் காரணமாக படங்களை சமர்ப்பிப்போரிடம் எங்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம். உங்களது முழு நீளத்  திரைப்படதிற்கு  தலா  50 ஈரோவும், ஏனைய படைப்புகளுக்கு  25 ஈரோவும் விண்ணப்பக் கட்டணமாக  அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம். பிரம்மாண்டமான பணிகளுக்கு ஒரு சிறு தொகை அளிப்பது  நாகரிகச் செயலாகும்  என்ற கோட்பாட்டிற்கு இணங்கவே இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம்.

இவ்வாறு செய்வதால் போட்டிக்கு வரும் சகல படங்களும், குறும்படங்களும் நடுவர் குழுவினால் பார்வையிடப்படும் என்று உறுதிமொழி அளிக்கிறோம். இதற்கு கைமாறு தெரிவிக்கும் முகமாக அனுப்பப்படும் சகல படங்களும் வெவேறு நாட்களில் பார்வையாளர்களுக்கு, பிரத்தியேக  திரையரங்குகளில் திரையிடுவோம் என்றும் உறுதியளிக்கிறோம். இந்த வழியில் உங்களுடைய, படங்களும், குறும்படங்களும் வெவேறு திரைப்பட விழாக்களிலும், தொலைக்காட்சிகளிலும் இடம் பெற வழிவகை செய்வோம்.

2014-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவில் எமது திரைப்பட விழாவில் பங்குபெற்று, வெற்றி பெற்ற “Paranoid Patient” என்ற முழு நீளத் திரைப்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டு, விருது பெற்றது இதற்கு சான்றாக உள்ளது. இந்தத் தெரிவு நடுவர்களால் அன்றி முழுக்க முழுக்க பார்வையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட விருதாகும்.

இந்த வகையில்தான் உங்கள் படைப்புகளை உங்களுடைய வட்டத்திற்குள்  அமிழ்ந்து போகாமல், அதிக செலவுமில்லாமல், பிரபலமடைய வைக்க முடியும்.

எங்களுடைய இந்த பல நலன் பெறும்  திட்டத்தில் மனம் விரும்பி பங்கேற்று, எங்களுடன் சேர்ந்து உங்கள் படைப்புகளை விரிவடைய செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். 


நன்றி,

என்றும் அன்புடன் 

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா குழு 2015

Our Score