full screen background image

நூடூல்ஸ் – சினிமா விமர்சனம்

நூடூல்ஸ் – சினிமா விமர்சனம்

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி’ மதன்.

அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருண் பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.

‘டூ லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடிக்க, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா மற்றும் பலர் நடிக்க, ‘அருவி’ மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத் தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இந்த ‘நூடுல்ஸ்’ படத்தை தனது ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு சனிக்கிழமை இரவில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து மொட்டை மாடியில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி போன்ற ஒன்றை நடத்தி சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இவர்களுடைய சந்தோஷ கூச்சல் பின் வீட்டுக்காரருக்க எரிச்சலை கொடுக்க அவர் போலீஸுக்கு போன் செய்து புகார் செய்கிறார். ரோந்துப் பணியில் இருந்த அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் அவர்களது வீட்டுக்கு வருகிறார். தன்னுடன் வந்த ஏட்டுவிடம் அமைதி காக்கும்படி அவர்களிடம் சொல்லும்படி அனுப்பி வைக்கிறார்.

ஏட்டு மேலே வந்து அங்கேயிருந்தவர்களிடம் இது குறித்துப் பேசுகிறார். இன்ஸ்பெக்டரான மதனும் மேலே வந்து அவர்களிடம் பேசுகிறார். இந்தப் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி தள்ளு முள்ளில் முடிகிறது. புகாரை எடுத்திட்டு வாங்க நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றோம் என்று ஹரீஷ் உத்தமன் சொல்ல அவமானத்துடன் கிளம்புகிறார்கள் இன்ஸ்பெக்டரும், ஏட்டுவும்.

மறுநாள் ஹரீஷ் உத்தமனின் மனைவியான ஷீலா ராஜ்குமாரின் பெற்றோர் முதல் முறையாக அவர்களைப் பார்க்க சென்னைக்கு வருவது தெரிந்து ஹரீஷ் பரபரப்போடு இருக்கிறார்.

அந்த நேரத்தில் ஹரீஷ் உத்தமனின் மகளிடமிருந்து செல்போனை பறிக்க முயல்கிறான் ஒருவன். அவனது சட்டையை ஷீலா ராஜ்குமார் பிடித்திழுக்க.. அவன் தெருவில் இருந்து ஓடி வந்து வீட்டுக்குள் வந்து விழுகிறான். இப்போது பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறான்.

இதைப் பார்த்து அவன் இறந்துவிட்டான் என்று நினைக்கும் ஹரீஷ் இதை எப்படி போலீஸிடமிருந்து மறைப்பது என்று யோசிக்கிறான். துணைக்கு ஒரு டுபாக்கூர் வக்கீலையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஐடியா கேட்கிறான். இந்த நேரத்தில் போலீஸும் புகார் மனுவோடு வீட்டுக்கு வர ஹரீஷூக்கு திக்கென்றாகிறது.

அடுத்து என்ன நடக்கிறது.. ஹரீஷ், ஷீலா ஜோடி தப்பித்தார்களா.. அந்த திருடன் என்னவானான்.. போலீஸ் என்ன செய்தது என்பதுதான் இந்த நூடுல்ஸ் படத்தின் கதைச் சுருக்கம்.

நூடூல்ஸ் என்றாலே மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய உணவு என்று சொன்னாலும் அதன் ஒரு நுனியை வைத்துக் கொண்டு மறு நுனியைத் தேடுவதெல்லாம் முடியாத காரியம். இழுக்க, இழுக்க வந்து கொண்டேதான் இருக்கும். அதுபோல் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருப்பதுதான் இந்தப் படத்தின் டைட்டிலுக்கான காரணம் என்று சொல்லலாம்.

ஹரீஷ் உத்தமன், ரகுவரனை ஞாபகப்படுத்துகிறார். பல காட்சிகளில் அவருடைய பதட்டமும், தவிப்பும், கெஞ்சலும்தான் இன்ஸ்பெக்டரை மட்டுமல்ல.. நம்மையும் சேர்த்தே டென்ஷனாக்குகிறது.

ஷீலாவின் இன்னசென்ட் குணம் ஹரீஷுக்கே எரிச்சலைக் கொடுத்து நம்மையும் இது யாருப்பா இந்த முட்டாள் பொம்பளை என்றும் சொல்ல வைத்திருக்கிறது. நான்தானப்பா செஞ்சேன்.. நானே போலீஸூக்குப் போறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லி டென்ஷனை கூட்டியிருக்கிறார்.

ரசிகர்கள் அத்தனை பேருக்கும் பிடித்தமான நபர் என்றால் அது வக்கீலாக நடித்தவர்தான். துவக்கத்தில் மிகப் பெரிய பில்டப்பாக தன்னைக் காட்டிக் கொண்டவர் போலீஸை பார்த்தவுடன் கை, கால் நடுக்கத்துடன் இருப்பது சுவையான திருப்பமும், சிரிப்பையும் தந்தது. இவரது உடல் நடுக்கத்திற்குப் பொருத்தமாக பின்னணி இசையையும் வைத்து அவர் வரும் காட்சிகளிலெல்லாம் கை தட்டி சிரிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

பொல்லாத இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மதன் தனது வில்லத்தனமான பேச்சாலும், பார்வையாலுமே படத்தினை நகர்த்தியிருக்கிறார். கடைசியாக இவரை காமெடியனாக்கியதுதான் மிகப் பெரிய காமெடி.

மேலும் திருநாவுக்கரசு வீட்டுக்கு வெளியில் நின்று போலீஸை பற்றி சவுண்டு விடும் காட்சிகளில் தியேட்டரே வெடித்து சிரித்தது. சிச்சுவேஷன் காமெடிதான் இந்தப் படத்தில் அதிகம். இதற்குப் படத்தில் நடித்த அத்தனை பேருமே உதவியிருக்கிறார்கள்.

முக்கால்வாசி படம் ஒரு வீட்டுக்குள் ஒரு அறையில் நடக்கும் சூழலில் அதையும் ரசிக்கும்படியான கோணத்தில் வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தில் பாடல்கள் இல்லை.. சண்டை காட்சிகள் இல்லையென்றாலும் பின்னணி இசையினால் முடிந்த அளவுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படத் தொகுப்பாளர் கச்சிதமாக நறுக்கித் தந்திருப்பதால் படம் ஒரு நிமிடம்கூட கதையைவிட்டு வெளியே போகவில்லை. ரசிகர்களையும் படத்துடன் ஒன்றிப் போக வைத்திருக்கிறது.

படத்தின் குறையாகப் பார்க்கப் போனால் ஒரு போலீஸ் எப்படியிருக்கக் கூடாது என்பார்களோ அதைத்தான் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதேபோல் வக்கீலாக நடித்திருப்பவர் அந்த வக்கீல் தொழிலுக்கே லாயக்கில்லாதவர்போல் தொடை நடுங்கி பயில்வானாக நடித்திருப்பது காமெடிக்கு ஓகே.. ஆனால் யதார்த்தம் இடிக்கிறது இயக்குநரே..!

பெண் போலீஸ் இல்லாமல் பெண்களை விசாரிக்க வரக் கூடாது என்று அந்தக் கூட்டத்தில் இருந்த வழக்கறிஞர் உட்பட ஒருவருக்குக் கூடவா தெரியவில்லை..? அதேபோல் மொத்தக் குடியிருப்புவாசிகளையும் தோப்புக் கரணம் போடுங்கள் என்றெல்லாம் டார்ச்சர் செய்வதும், அதையும் அவர்கள் மறுதலிப்பில்லாமல் செய்வதும் முட்டாள்தனமான திரைக்கதை.

இவ்வளவு அநியாயம் செய்த அந்த இன்ஸ்பெக்டரை கடைசியாக காமெடியாக அழுகவிடுவது மட்டுமே அவர் செய்த தவறுகளுக்கு தண்டனையாகிவிடுமா.. அந்த இன்ஸ்பெக்டர் கடைசியில் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார் என்று சீரியஸாக முடித்திருக்க வேண்டிய கதையை.. காமெடியாக முடித்திருக்கிறார் இயக்குநர்.

இந்த ‘நூடுல்ஸ்’ படம் ஒரு புது வித அனுபவத்தை ரசிகர்களுக்குத் தருகிறது. ஒரு வீட்டில் ஏற்படும் ஒரு பரபரப்பான சூழ்நிலை, கதையின் களத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எடுத்து கொண்ட கதை யதார்த்தமாக இருப்பதால் திரைக்கதையையும், நடிகர்களின் நடிப்பையும் அதேபோல் மிகைப்படுத்துதல் இல்லாமல் அமைத்திருப்பது ஓகேதான்.

சொல்ல வந்த விஷயத்தை மிகக் குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நேரத்திலும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ரசிப்புத் தன்மை கெடாமலும் படத்தை  இயக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்த நூடுல்ஸ்’ திரைப்படம் இன்றைய இளைய தலைமுறைக்கும், சினிமா ரசிகர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது. குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score