19 ரூபாயில் சினிமா டிக்கெட்டுகள் – புதிய திட்டம் அறிவிப்பு..!

19 ரூபாயில் சினிமா டிக்கெட்டுகள் – புதிய திட்டம் அறிவிப்பு..!

சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான 'மதுரை டூ தேனி - வழி ஆண்டிப்பட்டி' படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்ற படமாகும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோதும் பொதுமக்களிடம் பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'மதுரை டூ தேனி - 2' என்கிற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது.  போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளவருமான எஸ்.பி.எஸ். குகன், சினிமா தியேட்டர்களில் வெறும் 19 ரூபாய்க்கு திரைப்படங்களை காட்டப் போவதாகச் சொல்லி ஒரு புதுமையான திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

அவர் இது குறித்து பேசும்போது, "சினிமா என்ற இந்த ஒற்றைச் சொல் சிலருக்கு சுவாசம்.. வாழ்க்கை.. சினிமாவில் தாங்கள் விரும்பும் துறையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழ்கின்றனர். ஆனால் சினிமா இந்த ஒற்றைச் சொல் பலருக்கும் பொழுதுபோக்கு மட்டுமே..

இன்னும் சிலரோ தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை, இயக்குநர்களின் படங்களை பார்ப்பதை ஒரு கடமையாகவே செய்கின்றனர். தொழில் நுட்பம் பெரிதும் வளர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்களை டிவிடி, ஆன்லைன், டிவி சேனல்கள் மூலமாகவும் பார்க்கிறோம்.

திரைப்படங்களை பார்ப்பதற்காகவே உருவான இடம்தான் திரையரங்கம். நாம் வணங்கும் தெய்வங்களை நேரிடையாக கோவில்களுக்குச் சென்று வழிபடும்போது நமக்குக் கிடைக்கும் திருப்தியும், சிலிர்ப்பும் வீட்டில் அந்தத் தெய்வங்களின் போட்டோவில் பார்த்து கும்பிடும்போதுகூட கிடைப்பதில்லை.

அதேபோலத்தான் திரைப்படங்களை தியேட்டரில் பார்த்து ரசிக்கும் அனுபவம், வீட்டில் பார்க்கும்போது கிடைப்பதில்லை. தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்தால் டிக்கெட் விலையை யோசிக்கும்போது சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு கணவன், மனைவி தங்களின் இரண்டு குழந்தைகளுடன் சென்று படம் பார்க்க 320 ரூபாய் முதல் 480 ரூபாய்வரையிலும் செலவாகிறது. ஒரு குடும்பம் சராசரியாக ஒரு வருடத்திற்கு மூன்று திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்றாலே, டிக்கெட்டுக்கு மட்டுமே 960 ரூபாய் முதல் 1440 ரூபாய்வரையிலும் செலவிட்டாக வேண்டும்.

தனி நபர் ஒருவர் வருடத்திற்கு மூன்று திரைப்படங்களை பார்க்க 240 ரூபாய் முதல் 360 ரூபாய் வரையிலும் செலவாகிறது. இதனூடே பார்க்கிங், கேண்டீன் கட்டணங்களும் கூடுதலாக செலவாகும்.

டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால்தான் ரசிகர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வருவதில்லை.  அதில் ஆர்வமும் காட்டுவதில்லை. ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற காரணத்தினால்தான் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்கிற தியேட்டர் அதிபர்களும் இது போன்ற சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு தியேட்டர்களை தருவதும் இல்லை.

எனவேதான் சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல தரமான திரைப்படங்கள் தியேட்டரில் வெளியிட முடிவதில்லை. இதுபோல் தியேட்டரில் வெளியாகாத திரைப்படங்களை சாட்டிலைட் சேனல்களும் வாங்குவதில்லை.

மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்து போனதால்தான் பல ஊர்களில் பல தியேட்டர்கள் இன்றைக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறி வருகின்றன.

அதோடு திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் சொல்லும் காரணமும் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களின் விலை அதிகமாக உள்ளது என்பதுதான். அதனால்தான் திருட்டு டிவிடியில் படம் பார்க்கிறோம் என்று தைரியமாகச் சொல்கிறார்கள்.

அடுத்தவர் உழைப்பை திருடுபவன் மற்றவம் குற்றவாளியல்ல. அதற்கு துணை போவதும்கூட குற்றம்தான். எனவே திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் உழைப்பில் வரும் இலாபத்தை அடுத்தவர் சுரண்டினால் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா..?

பலரின் உழைப்பாலும் சிலரின் தயாரிப்பாலும் உருவாகும் திரைப்படங்களின் இலாபம் ஏன் உழைத்தவர்களுக்கே கிடைக்க்க் கூடாது..? நீங்கள் நினைத்தால் உழைத்தவர்களே ஊதியம் பெறலாம். நீங்கள் ஆதரித்தால் வெளியாகும் அனைத்து படங்களையும் மிக்க் குறைந்த கட்டணத்தில் வெளியிட மற்ற நிறுவனங்களும் கண்டிப்பாக முன் வருவார்கள்.

இதற்காகத்தான் எங்களின் நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் தியேட்டர் அதிபர்களுடனும், விநியோகஸ்தர்களிடமும் கலந்து பேசி திரைப்படத்தை எடுப்பவர்.. திரையிடுபவர்.. பார்ப்பவர் என அனைவருக்கும் இலாபம் ஏற்படும் வண்ணம் ஒரு திட்டத்தைத் துவக்கியுள்ளது.

அந்த முயற்சியே மக்கள் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் மிக, மிக குறைந்த கட்டணத்தில் சினிமா பார்ப்பது. அதுவும் திரையரங்குகளிலேயே பார்ப்பது.

தற்போது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியிடும் முறையை 8 ஏரியாக்களாக பிரித்து வெளியிடுகின்றனர். அதில் எம்.ஆர்.ஏரியா என்பது மதுரை, ராமநாதபுரம் பகுதிகளைக் குறிக்கும்.

கம்பம் – தேனி – பழனி – திண்டுக்கல் – மதுரை – மானாமதுரை – இராமநாதபுரம் –சிவகங்கை – காரைக்குடி – விருதுநகர் – சிவகாசி - இராஜபாளையம் ஆகிய இந்த ஊர்கள் அனைத்தும் இந்த எம்.ஆர்.ஏரியாவில்தான் அடங்கும்.

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் வாழ்நாள் முழுவதும் மிகக் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்கள் பார்க்கும் திட்டத்தை, இந்த எம்.ஆர். எனப்படும் மதுரை, இராமநாதபுரம் ஏரியாவில்தான் முதலில் அறிமுகப்படுத்தவுள்ளது.

மிக, மிக குறைந்தக் கட்டணத்தில் திரைப்படங்களை பார்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

ஒரு தனி நபர் 499 ரூபாயை மட்டும் செலுத்தி நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் கார்டு ஒன்றை பெற்றிடுங்கள். நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் வெளியிடும் முதல் 13 திரைப்படங்களை கட்டணம் எதுவும் செலுத்தாமல் தியேட்டருக்குச் சென்று பாருங்கள்.

அதன் பின்பு வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் திரையரங்கு நுழைவுக் கட்டணமாக 19 ரூபாய் மட்டுமே உங்களிடம் வசூலிக்கப்படும்.

இந்த ஸ்மார்ட் கார்டினை நீங்கள் வாங்கும் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகள்வரையிலும் நீங்கள் பயன்படுத்தலாம். அதன் பின்னர் மீண்டும் புதுப்பித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகள் மட்டுமே சலுகை விலையில் வழங்கப்படும். பார்க்கிங் மற்றும் கேண்டீன் கட்டணங்களுக்கு அவரவரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த புதிய திட்டத்தின் அறிமுகச் சலுகையாக 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தனி நபராக தங்களை இணைத்துக் கொள்பவர்கள் 299 ரூபாயை மட்டுமே செலுத்தினால் போதுமானது.  தம்பதிகள் மற்றும் இருவராக இணைபவர்கள் 499 ரூபாயை செலுத்தினால் போதுமானதாகும்.

எங்களது நிறுவனத்தின் மிக, மிக குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை பார்க்கும் திட்டத்தின் கீழ், 2009-ம் ஆண்டு குறைந்த முதலீட்டில் உருவாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் 2017-ம் ஆண்டு மே மாதம் வெளியிடவுள்ளது.

இந்தப் படம்தான் இந்த 19 ரூபாய் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் முதல் படமாக இருக்கும். இதன் பிறகு எங்களது நிறுவனத்தின் மிக, மிக குறைந்த கட்டணத்தில் திரைப்படம் பார்க்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படத் துவங்கும்.

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் நல்ல தரமான திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதுடன், மற்ற தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்தும் சிறந்த படங்களை வாங்கி வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

அதேபோல், நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிடப் போகும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல தரமான, நல்ல வசதிகள் கொண்ட தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் வெளியிடும் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு சாட்டிலைட் சேனல்களிலும் நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வெப்சைட், மற்றும் யூடியூப் லின்க்குகளிலும் வெளியிடப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் மூலம் எங்களின் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு இல்லாமல் படம் பார்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

இந்தப் புதிய முயற்சி வெற்றி பெறுமா என்று நீங்கள் கேட்டால் எங்களின் பதில், உங்களின் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக இத்திட்டம் மாபெரும் வெற்றி பெறும்.." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இணையத்தள முகவரி - www.nextlevelcinemas.com

தொடர்புக்கு ஈ-மெயில் முகவரி - contact@nextlevelcinemas.com