“சூப்பர் ஸ்டார் ரஜினி படத் தலைப்பு என்னைக் காப்பாற்றும்…” – அறிமுக நடிகை ஐஸ்வர்யா மேனனின் நம்பிக்கை..!

“சூப்பர் ஸ்டார் ரஜினி படத் தலைப்பு என்னைக் காப்பாற்றும்…” – அறிமுக நடிகை ஐஸ்வர்யா மேனனின் நம்பிக்கை..!

"சூப்பர் ஸ்டாரின்  பட தலைப்பு   மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமையாக இருக்கிறது..." என்கிறார் 'வீரா' படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன்.  

கேரளாவில் இருந்து உதயமாகி, ‘வீரா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.  

கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தானாம். 

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது பற்றி பேட்டியளித்த ஐஸ்வர்யா மேனன், "என்னுடைய சிறு வயது முதலே நடிப்பின் மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. ஏற்கெனவே நான் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு தற்போது ‘வீரா’ திரைப்படம் மூலம் நிஜமாகி  இருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. தமிழ் ரசிகர்கள் நிச்சயம் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'வீரா' என்கிற படத்தின் டைட்டிலிலேயே நானும் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாவதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது. அந்த டைட்டிலே இந்தப் படத்தை வெற்றி பெற வைத்து, எனக்கும் நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவே நான் பெரிதும் விரும்புகிறேன்..

இந்த ஒரு படத்தின் மூலமாக நானும் மற்ற ஐஸ்வர்யாக்கள் போல ஒரு ரவுண்டு வருவேன் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.." என்கிறார் புன்னகையுடன்..!