சைட்டோ ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.யசோதா தயாரித்துள்ள திரைப்படம் ‘என்னோடு நீ இருந்தால்’.
இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடித்துள்ளார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகிணி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி, ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நாக.சரவணன், இசை -கே.கே., படத் தொகுப்பு – ராஜ் கீர்த்தி, கலை – எஸ்.சுப்பிரமணி, நடனம் – கேசவன், சண்டை பயிற்சி – ஜி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த், எழுத்து, பாடல்கள், இயக்கம் – மு.ரா.சத்யா, தயாரிப்பு – எஸ்.யசோதா.
கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர் போல் ஹீீரோவாக நடித்து, பாடல்களை எழுதி, இசையமைத்து, நடித்து, தயாரித்து, அதனை இயக்கவும் செய்திருக்கும் இந்தப் படத்தின் ஹீரோவான மு.ரா. சத்யா அவர்களைப் போன்ற அஷ்டாவதனியாக தமிழ்ச் சினிமாவில் களமிறங்குகிறார்.
படம் பற்றி இயக்குநரும், ஹீரோவுமான மு.ரா.சத்யா பேசும்போது, “நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. திரைப்படங்களை பார்த்து பார்த்து கற்றுக் கொண்டதும், என்னுடைய கேள்வி ஞானம், மற்றும் சினிமா பற்றி நிறைய படித்ததையும் வைத்துதான் இயக்குநராகி இருக்கிறேன்.
அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். ஆன்மீகம் பற்றிய புத்தகம், போதை ஒழிப்பு புத்தகம், தன்னம்பிக்கை பற்றிய புத்தகங்களை எழுதி இருக்கிறேன். நான் ஒரு புத்தக புழு.
இந்த ‘என்னோடு நீ இருந்தால்’ படம் ஒரு ரொமான்டிக் கலந்த திரில்லர் கதை. ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் கிஷோர், கோடீஸ்வர பெண்ணான பூஜாவை காதலிக்கிறான். திடீர்ரென்று ஒரு நாள் பூஜா காணமல் போகிறாள். கிஷோர் அவளை தேடி அலைகிறான்.
இதற்கிடையே அவனைச் சுற்றி பல்வேறு திகைப்பூட்டும் திகில் நிறைந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை விறுவிறுப்போடு, மென்மையான காதலை கலந்து சொல்கிறது ‘என்னோடு நீ இருந்தால்’ திரைப்படம்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ளன. மேலும் படத்தில் வெறும் காதலை மட்டும் கூறாமல், இன்றைய கால கட்டத்தில் சமூகத்திற்கு தேவையான பெரிய விழிப்புணர்வையும் கொடுக்க உள்ளோம். படப்பிடிப்பினை முழுக்க, முழுக்க சென்னையிலேயே நடத்தியிருக்கிறோம். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது…” என்றார்.









