அவர் இயக்கப் போகிறார்.. இவர் இயக்கப் போகிறார்.. என்கிற ஆரூடங்கள்.. யூகங்கள்.. ஜோதிடங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது.
அந்த அதிர்ஷ்டக்கார இயக்குநர் நெல்சன் திலீப்குமார். 2018-ம் ஆண்டில் நயன்தாரா, யோகிபாபுவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்னும் காமெடி கலந்த ஒரு ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர்.
அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் தற்போது நடந்து வரும் நேரத்தில் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யின் 65-வது படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சம்பளப் பிரச்சினை காரணமாகவும், கதையில் மாற்றத்தை தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை ஏற்காமலும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டதால் அடுத்த இயக்குநரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

இடையில் பேரரசுவும், சூர்யாவும்கூட லைனில் வந்தார்கள். ஆனால் கதை தயாராக புவுண்ட் பைலாக இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால் நெல்சன் திலீப்குமார் சன் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அவர் சொன்னக் கதை சன் பிக்சர்ஸுக்கு பிடித்துப் போனதால் அவர் விஜய்யை சந்திக்க வைக்கப்பட்டார். விஜய்க்கும் அவர் சொன்ன கதை பிடித்துப் போக.. அறிவிப்புக்காக இத்தனை நாட்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார் நெல்சன்.
இன்றைக்கு சினிமாக்காரர்களுக்கே பிடித்தமான வியாழக்கிழமை. சன் பிக்சர்ஸ் இந்த நாளை இழக்க விரும்பாமல், அவர்களின் விருப்பப்படியே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், தளபதி விஜய், இவர்களுடன் நெல்சனும் இருக்கும்படியான ஒரு வீடியோவை வெளியிட்டுத் தகவலைச் சொல்லிவிட்டது..!
அடுத்த நொடியே டிவிட்டரும், முகநூலும் அதிரிபுதிரியாகிவிட்டது. கூகிள் சர்ச்சில் நெல்சன் திலீப்குமாரை தேடுபவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே போகிறது..! விஜய் ரசிகர்கள் ஹேஸ்டேக்கை சர்வதேச அளவுக்குக் கொண்டு போக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து சில நாட்களுக்கு மாஸ்டரை மறந்து இந்த நெல்சனை தூக்கிப் பிடிப்பார்கள் விஜய்யின் ரசிகர்கள்..!
ஜெயிச்சுக் காட்டுங்க நெல்சன்..! வாழ்த்துகள்..!!!