தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா விஜயன் ‘நீல நிறச் சூரியன்’ என்ற இந்தப் படத்தில் தானே கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கிறார்.
பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மாலா மணியன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ், கிட்டி, வின்னர் ராமச்சந்திரன், பிரசன்னா பாலச்சந்திரன், கே.வி.என்.மணிமேகலை, மஷாந்த் நடராஜன், ஹரிதா, செம்மலர் அன்னம், கவுசல்யா சரவணராஜா, விஸ்வநாத் சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளையும் மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்.
ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்தும், நம் சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது?.. அந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளைக் கடந்து நிஜ வாழ்க்கையில் எப்படி அவர்கள் சாதிக்கிறார்கள்? தங்களை முன்னிறுத்துகிறார்கள்? என்பதை எந்தவிதமான நாடகத் தன்மையும் இல்லாமல் உண்மைக்கு மிக அருகாமையில் வரும் வகையில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் திருநங்கையான சம்யுக்தா விஜயன்.
இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் இது என்பதுதான்.
அது மட்டுமில்லாமல், IFFI-23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாகவும் இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப் பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.
உலகம் முழுவதுமே ஒரு புரியாத புதிராக இப்போதும் பார்க்கப்படும் ஒரு விஷயம் திருநங்கைகள் உருவாகும் கதைதான். பிறப்பால் ஆணாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஹார்மோன் கோளாறால் தங்களை பெண்களாகவே பாவிக்கத் துவங்கி நாளடைவில் பெண்களாகவே உருமாறிவிடுவார்கள்.
மருத்துவ ரீதியாக ஆபரேஷன் செய்தோ அல்லது செய்யாமலோ பெண்களைப் போலவே உடையணிந்து, சிகையலங்காரம் செய்து தோற்றத்தில் பெண்ணாகவும், உடலால் ஆணாகவும் இருப்பவர்களும் அதிகம்.
இவர்களுடைய இந்த உருமாற்றத்தை அவருடைய குடும்பத்தினர் அவ்வளவு சீக்கிரம் ஏற்பதில்லை. அப்படியே குடும்பத்தினர் ஏற்றாலும் சுற்றியிருக்கும் சமூகம் அவர்களைப் பார்க்கும்விதமும், நடத்தும்விதமும் ஏற்க முடியாததாக இருக்கும்.
அப்படி ஒரு சூழலுக்குள் தள்ளப்படும் இந்தக் கதையின் நாயகனான அரவிந்த், தான் விரும்பிய பானுவாக உருமாற்றம் அடைவது எப்படி? அதை அவனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்த சமூகம் எப்படி பார்க்கிறது..? இவர்களைத் தாண்டி பானுவாக அவனா(ளா)ல் தன்னால் நிலை நிறுத்திக் கொள்ள முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘நீல நிறச் சூரியன்’ படத்தின் கதைச் சுருக்கம்.
அரவிந்த் மற்றும் பானு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் உண்மையான திருநங்கையான சம்யுக்தா விஜயன், முதன்மை வேடத்தில் நடித்து, படத்தை இயக்கியும் உள்ளார்.
சம்யுக்தாவே ஒரு திருநங்கைதான் என்பதால் மிக எளிதாக அவர்களுக்கே உரித்தான உடல் மொழியையும், தோற்றத்தையும் கொடுக்க முடிந்திருக்கிறது. நிஜத்தில் ‘சந்தோஷ்’ என்ற நிஜப் பெயரில் பிறந்து வளர்ந்து இப்போது ‘சம்யுக்தா’வாக வலம் வரும் இயக்குநர், தன்னுடைய பிரதிபலிப்பை, எண்ணவோட்டத்தை தனது நேர்த்தியான நடிப்பின் மூலமாய் காண்பித்திருக்கிறார்.
தன் உடல் குறைபாட்டை தன் அம்மா, அப்பாவிடம் சொல்லாமலேயே தனக்குள் பூட்டி வைத்துக் கொண்டு தினம்தினம் அவதிப்படும் தனது பதற்றத்தை தனது நேர்த்தியான நடிப்பின் மூலமாக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் சக்யுக்தா விஜயன்.
பானுவாக உருமாறிய பின்பு அவரைச் சுற்றியுள்ளவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பிரின்ஸிபால், வைஸ் பிரின்ஸிபால் என்று அனைவருமே ஒரு கட்டத்தில் அவரை டீஸ் செய்யும்போது அதைத் தைரியமாக எதிர்கொண்டு அவர் செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் பக்குவமானவை.
பள்ளியில் தன்னால் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக தொலைதூரம் சென்று கதவே இல்லாத பாத்ரூமை பயன்படுத்த ஒப்புக் கொள்வதும், ரிஜிஸ்தரர் அலுவலகத்தின் வாசலில் தன் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கும்படி ஒரு பெண் சொல்லும்போது “முடியாது” என்று மறுப்பதும், தன்னைப் போலவே குணமுள்ள ஒரு பையனுக்கு தக்க அறிவுரை சொல்வதும், தன்னை பெண்ணாக அங்கீகரிக்கும்படி அரசு அலுவலகத்தில் கெஞ்சும்போதும் திருநங்கைகளுக்கான பிரச்சினைகள் என்னென்ன என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலமாக நமக்கும் அடையாளம் காட்டியிருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் சம்யுக்தா!
அரவிந்தின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் மற்றும் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம் இருவரின் நடிப்பும் மிக இயல்பு. அதிலும் பொறியியல் கல்லூரியில் தன் சீனியர்கள் தன்னை ராகிங் செய்ததை பானு அம்மாவிடம் சொல்லி அழும்போது, கீதா கைலாசத்தின் நடிப்பு அழகோ அழகு,
அரவிந்தின் சித்தப்பாவாக நடித்து மிரட்டியிருக்கிறார். பிரசன்னா பாலச்சந்திரன். அதேபோல் பள்ளியின் துணை தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் கே.வி.என்.மணிமேகலை, தலைமை ஆசிரியராக நடித்தவரும் மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு திருநங்கையாக கார்த்திருக்கும் கார்த்திக் வேடத்தில் நடித்திருக்கும் மசாந்த் நட்ராஜனின் தயக்கப் பேச்சும், உறுதியும் நடிப்பில் தெரிகிறது. பானுவுக்கு உற்ற துணையாய் இருந்து தைரியத்தைக் கொடுக்கும் ஹரிதா, கார்த்திக்கின் அப்பாவான வின்னர் ராமச்சந்திரன் என்று மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஒரு சில காட்சிகளில் என்றாலும் அவர்களின் கேரக்டரை ஆழமாகப் பதிவு செய்துள்ளனர்.
“நீ பொம்பளையா இருந்து என்ன சாதிக்கப் போற.. இப்ப பாரு.. என்னையவே எடுத்துக்க.. கல்யாணமாகி 7 வருஷமாகியும் எனக்குக் குழந்தை இல்லைன்னு எல்லாரும் கரிச்சுக் கொட்டுறாங்க..” என்று செம்மலர் அன்னம் எழுப்பியிருக்கும் கேள்வி மிக, மிக முக்கியமானது.
படத்திற்கு ஒளிப்பதிவு, இசை மற்றும் படத் தொகுப்பு இந்த மூன்றையும் ஒரு சேர செய்திருக்கும் ஸ்டீவ் பெஞ்சமின் மூன்றிலுமே அசத்தியிருக்கிறார். பின்னணி இசை சோகத்தைக் கொஞ்சம் கூட்டியிருக்கிறது. மேக்கப் கலைஞருக்கும் ஒரு ‘ஜே‘ போட்டு வாழ்த்துவிடுவோம். பானுவை உண்மையான ஹீரோயின் போலவே காண்பித்திருக்கிறார்கள்.
நம் சமூகமே வெறுத்து ஒதுக்கும் வேற்று பாலினத்தவர்களின் மன வலியை அப்படியே ராவாக சொல்லாமல், தியேட்டர் ரசிகர்களுக்கு ஏற்ற திரை மொழியில், சிறப்பான இயக்கத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சம்யுக்தா விஜயன்.
உடல் சார்ந்த ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைப் போலவே, அதே ஹார்மோன் குறைப்பாட்டால் நடக்கும் இந்தப் பாலின மாறுதலை இந்த சமூகத்தினர் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கும் இயக்குநர் சம்யுக்தா விஜயன், அதற்கான புரிதலுடன் கூடிய திரைக்கதை காட்சிகளை வைத்து பார்வையாளர்களை சிந்திக்க வைத்திருக்கிறார்.
சம்யுக்தா சொல்ல வந்த விஷயத்தை ஏற்கெனவே பல குறும் படங்கள், ஆவணப் படங்களில் நாம் பார்த்திருந்தாலும் ஒரு மெயின் ஸ்டிரீம் வடிவத்தில் திரைப்படமாக அழுத்தமானப் பதிவாக இந்தப் படத்தைத் தனித்த அடையாளமாகக் காண்பித்திருக்கிறார். அந்த வகையில் இத்திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான படமாகும்.
அனைவரும் குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. இன்றைய தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வை இத்திரைப்படம் நிச்சயமாகக் கொடுக்கும்.!
RATING : 4 / 5









