ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’.
அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் – அருண்குமார், ஒளிப்பதிவு – சூர்யா, இசை – விவேக் – ஜெஸ்வந்த், படத் தொகுப்பு – சசி தக்ஷா, பாடல்கள் – சினேகன், அன்புச் செழியன், கலை இயக்கம் – ஜெயசீலன், ஆடை வடிவமைப்பு – வெண்மதி, பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
எப்போதும் இளமையாக இருக்க சஞ்சீவி மலையில் இருக்கும் ஒரு மூலிகையை உண்ண வேண்டும் என்று இராமாயணத்தில் நாம் படித்திருப்போம். அந்த மூலிகை நமது ஏற்காடு காட்டுப் பகுதியில் இருந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
நாயகன் மைக்கேல் தங்கதுரையும், நாயகி கவிப்ரியாவும் ஒருவரையொருவர் தீவிரமாய் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய கவிப்பிரியா தயாராக இருந்தாலும் “இப்போது என் கையில் காசில்லை. ஒரு வீடு வாங்கிய பின்புதான் திருமணம்…” என்று சொல்லி, காதலன் மைக்கேல் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.
இந்த நேரத்தில் 70,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் கவிப்பிரியாவுக்கு வேலை ஒன்று கிடைக்கிறது. ஆள் அரவமற்ற ஒரு மலைப் பகுதியில் தனி வீட்டில் இருக்கும் உடல் நலமில்லாமல் இருக்கும் ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் வேலைதான் அது.
6 மாதங்கள் வேலை பார்த்தாலே 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என்றெண்ணி கவிப்பிரியா காதலனின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஏற்காடு வருகிறார்.
அந்த இடத்தில் அந்த ஒரு வீட்டைத் தவிர வேறு வீடுகளே இல்லை. செல்போன் டவரும் இல்லாததால் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. பேசுவதாக இருந்தால் நடுக்காட்டுக்கு வந்துதான் பேச வேண்டிய கட்டாயம்.
அதோடு வீட்டிலும் மர்மமான பல ஓவியங்களும், சிற்பங்களும், அலங்கார வேலைப்பாடுகளும் இருக்கிறது. முகம் பார்க்கும் கண்ணாடிகூட இல்லாமல் இருக்கிறது.
இந்த நேரத்தில் கவிப்பிரியாவின் மேக்கப் பொருட்களும், கண்ணாடியும் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்துபோக கவிப்பிரியாவுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இதைத் தொடர்ந்து கவிப்பிரியாவின் செல்போனும் உடைந்துபோக காதலனுடனும் பேச முடியாமல் போகிறது.
இந்த நேரத்தில் கவிப்பிரியாவின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. முகத்தில் சுருக்கங்கள் தோன்றி அவரை மிகவும் வயதனாவராக காண்பிக்கிறது. இது கண்ணாடி இல்லாததால் நாயகிக்கு தெரியவில்லை.
தன்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்பதை மட்டும் உணரும் நாயகி ஒரு கட்டத்தில் அவரது காதலன் மைக்கேலும் அங்கேயே இருப்பதை உணர்கிறார். ஆனால் மைக்கேல் வேவ்வேறு உருவங்களில் வந்து செல்வதால் ஏதோ ஒரு சதி வலையில் தான் சிக்கியிருப்பதை உணர்கிறார்.
அந்த சதி வலைதான் என்ன? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா..? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படத்தின் கதைச் சுருக்கம்.
நாயகன் மைக்கேல் தங்கதுரை முதல் பாதியில் உண்மையான காதலனாகவும், பிற்பாதியில் கொடூர மனம் கொண்ட கொடியவனாக முகம் காட்டியிருக்கிறார். அழுத்தமான நடிப்புக்கான ஸ்கோப் இல்லாததால் இவருக்கென்று சொல்வதற்கும் ஏதுமில்லை.
மகிழ்நிலா என்ற அழகான தமிழ்ப் பெயரைத் தாங்கி நாயகியாக நடித்திருக்கும் நடிகை கவிப்ரியா தனது அழகான முகத்தாலும், இனிமையான புன்சிரிப்பாலும் அனைவரையும் கவர்கிறார்.
ஒரு அனாதையான தனக்கு தான் விரும்பியபடியே ஒரு நல்ல காதலன் கணவனாக கிடைக்க இருக்கும் சந்தோஷத்தை பாடல் காட்சிகளில் அவர் காட்டும்விதமும், அழகும் கொள்ள அழகுதான். அந்தக் குழந்தைத்தனமான முகத்தில் தொடர்ந்து பலவித சிரிப்பானையும், முக பாவனைகளையும், நடிப்பையும் காட்டி நம்மை மனம் குளிர வைத்திருக்கிறார் கவிப்பிரியா.
இதுவரையிலும் நடித்திருக்காத ஒரு வினோதமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. நாயகனாக உருமாறும் தருணத்தில் அவர் காட்டும் வில்லித்தனம் எதிர்பாராதது. சிறப்புதான்..!
கவிப்பிரியா போலவே மைக்கேலால் காதல் கதை சொல்லி ஏமாற்றப்பட்டு வந்து சிக்கிக் கொண்டு அடிமையாகவே மாறியிருக்கும் கலைராணியின் மேக்கப்பும், நடிப்பும் பயமுறுத்தல்..!
ஏற்காடு மலைப் பகுதியையும், அதன் சுற்று வட்டாரங்களையும், அழகான வீட்டையும், அதன் உள் கட்டமைப்பையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி. சஸ்பென்ஸ், திரில்லர் காட்சிகளில் நம்மைக் கொஞ்சம் பயமுறுத்தும்விதமாகவும் செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
இந்த இடம் மற்றும் வீடு, சுற்றுப்புறங்கள், கலைராணி இருக்கும் வீடு ஆகியவை அழகாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநருக்கும் ஒரு ஜே..!
தனது பின்னணி இசையின் மூலமாக திரை ரசிகர்களுக்கு திகில் உணர்வைக் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த், பாடல்களையும் கேட்கும்படியாகத்தான் கொடுத்திருக்கிறார்கள்.
திகில், சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான கதைக் களத்துடன் ஆள் உருமாற்றம் அடையும் வித்தையையும் உள்ளடக்கிய திரைக்கதையை நமக்கு வழங்கிய விதத்தில்தான் இயக்குநரும், படத் தொகுப்பாளரும் கொஞ்சம் தவறிவிட்டார்கள்.
முனிவர், வரம், மரப்பாச்சி சிலை, பூஜை என்பதையெல்லாம் சரியாகச் சொன்னவர்கள், நாயகன் மைக்கேலின் உருமாற்றங்களில் வருபவர்களெல்லாம் யார், யார்.. கடைசியாக வயதான தோற்றத்தில் இருக்கும் நாயகி எப்படி இந்த நிலைமைக்கு வந்தார் என்பதையெல்லாம் கொஞ்சம் புரியும்படி சொல்லியிருந்தால் படத்தை இன்னமும் ஆழமாக ரசித்திருக்கலாம்..!
திரைக்கதையின் நகர்த்தலில் பல தவறுகளும் நினைத்துப் பார்க்க முடியாத லாஜிக் எல்லை மீறல்களும் இருக்கின்றன. இதனாலேயே, துவக்கம் முதல் முடிவுவரையிலும் எடுத்துக் கொண்ட கதைக் கருவுக்குள் அடங்கும்விதமான கதையை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லி, இதையொரு திகில் கலந்த படமாக கொடுத்ததில் இயக்குநர் பாதி வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல முடிகிறது..!
‘ஆரகன்’ – சிவ தரிசனம் முழுமை பெறவில்லை..!
RATING – 3 / 5