எங்க போனாலும் பிரச்சினையைக் கிளப்புறாங்கப்பா இந்த பெண் நாட்டாமைகள்.
‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்கிற புகழ் பெற்ற வசனம் இடம் பெற்ற ஜீ தமிழ் டிவியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை போலவே ஜீ தெலுங்கு சேனலிலும் ‘Bathuku Jataka Bandi’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை கீதா நாட்டாமையாக இருந்து தீர்ப்பு சொல்லி வருகிறார். இவர் சமீபத்தில் சொன்ன ஒரு தீர்ப்பு ஆந்திராவில் மாற்றுப் பாலினத்தவர்களை கொதிப்படைய வைத்து போராட்டம் நடத்தவும் வைத்திருக்கிறது.
ஆந்திராவில் 20 வயது இளம் பெண் ஒருவர், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த இளைஞருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
அந்தப் பெண்ணின் குடும்பம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இந்த காதல் ஜோடியை பிரிக்க முடியவில்லை. இந்தப் பஞ்சாயத்துதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறது.
துவக்கத்தில் இருந்தே கடுகடு முகத்தோடு பஞ்சாயத்து செய்த நாட்டாமை கீதா, அந்த மாற்றுப் பாலினத்து இளைஞரை நிகழ்ச்சியின் கடைசிவரையிலும் பெண்ணாக நினைத்தே அழைத்திருக்கிறார்.
அந்தப் பெண்ணை ஒரு கட்டத்தில் மிரட்டியவர், “செருப்பைக் கழட்டி அடிப்பேன்..” என்று கோபத்தில் கத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் “இவ கைய, காலை கட்டி வீட்ல படுக்க வைங்க. யாராவது ஒரு பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க…” என்று யோசனையும் சொல்லியிருக்கிறார்.
இவர்களின் காதல் முறைகேடானது என்பதைச் சொல்லும் கீதா.. “எப்படி நீங்க ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சுக்குவீங்க..?” என்று அர்த்தமுள்ள கேள்வியையும் கேட்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 31-ம் தேதி ஒளிபரப்பானவுடன் மூன்றாம் பாலினத்தவருக்கான ஆதரவு இயக்கங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு கடும் கோபமாகி போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
“இது மாதிரியான ஒரு பிரச்சினையில் தீர்வு சொல்ல நடிகை கீதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது..? இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்…” என்று கோரி காவல்துறையில் மனுவும் கொடுத்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி நிறுவனமோ வழக்கம்போல இதனால் டி.ஆர்.பி. எவ்வளவு கூடும் என்று எதிர்பார்ப்பு கலந்த சந்தோஷத்தில் திளைக்கிறது..!