full screen background image

நெடுநல்வாடை – சினிமா விமர்சனம்

நெடுநல்வாடை – சினிமா விமர்சனம்

நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள் மாணவர்களான 50 பேர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ‘பூ’ ராமு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – பி-ஸ்டார் புரொடக்சன்ஸ், இயக்குநர் – செல்வக்கண்ணன், இசை – ஜோஸ் ஃபிராங்க்ளின், ஒளிப்பதிவு – வினோத் ரத்தினசாமி, பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, சண்டை இயக்கம் – ராம்போ விமல், நடன இயக்கம் – தினா, சதீஷ் போஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன்.

2000-ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வக்கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் தற்போது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள்.

காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் செல்வக்கண்ணன்.

இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு தங்களுடைய நண்பர் செல்வக்கண்ணனின் இயக்குநர் ஆசையை பரிமாற ஆரம்பித்தார்கள். உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை செல்வக்கண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்புடன்தான் இந்த ‘நெடுநல்வாடை’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான உண்மையான பாசத்தையும், நேசத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது இந்த ‘நெடுநல்வாடை’ திரைப்படம்.

நமது தமிழ்ச் சமூகத்தில் மகன் வழிப் பேரன், பேத்திகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமையும்,  அங்கீகாரமும் மகள் வழி உறவுகளுக்கு கிடைப்பதில்லை என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

எப்போது பார்த்தாலும், காதல், காதல்.. காதல்.. என்று காதலுக்காகவே நேர்ந்துவிட்டதை போன்று படங்களை வரிசையாக கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகில் அந்தப் பாவத்தைப் போக்குவதற்காக காதலிப்பது எதற்காக என்ற ஒற்றைக் கேள்வியை முன் வைத்தும், வாழ்க்கைக்காகத்தான் காதல்.. குடும்பத்திற்காகத்தான் காதல்.. என்கிற கருத்தை அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது.

இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளிகள்போல், துரோகம் இழைத்தவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அதை மறுத்து பெண்கள் தரப்பில் இருக்கும் யதார்த்தத்தையும், நியாயத்தையும் இத்திரைப்படம் பேசுகிறது.

கதை 1990-களில் நடக்கிறது. திருநெல்வேலி அருகேயிருக்கும் சிங்கிலிப்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்த விவசாயி ‘செல்லையா’ என்னும் ‘பூ’ ராமு. மனைவி இறந்துபோன நிலையில் மகன் ‘கொம்பையா’ என்னும் மைம் கோபி குடும்பத்துடன் அதே ஊரில் வசித்து வருகிறார். கரும்புத் தோட்டம் வைத்திருக்கிறார். கரும்பில் இருந்து மண்டவெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவருடைய மகள் ‘பேச்சியம்மாள்’ என்னும் செந்தி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டில் இருந்து வெளியேறி வேறொரு ஜாதியைச் சேர்ந்த நபரோடு காதல் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் 1 ஆண், 1 பெண் என்று 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவருடைய கணவர் குடியால் அழிந்து, கூடவே சீட்டாடி காசையும் அழித்துவிட்டு, செந்தியை அப்பன் வீட்டுக்குத் துரத்தி விடுகிறார்.

செந்தி சாவதற்குத் துணிவில்லாமல் தனது மகள், மகனுடன் அப்பா வீட்டிக்கு திரும்பி வருகிறார். இது பிடிக்காத கொம்பையா, செந்தியை வீட்டை விட்டு துரத்தச் சொல்கிறார். ஆனால் “அவ என் மக.. அவங்க என்னோட பேரன், பேத்தி.. என்கூடத்தான் இருப்பாங்க..” என்று சொல்லி மகளையும், பேரன், பேத்தியையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார் ‘பூ’ ராமு.

செந்தியும் அப்பாவுக்குத் துணையாக தோட்ட வேலைகளைச் செய்து வருகிறார். கொம்பையா தன் சகோதரியையும், அவளது பிள்ளைகளையும் ஏற்காத மன நிலையிலையே இருந்து வருகிறார்.

செந்தியின் மகனான இளங்கோவை தாத்தா ராமு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். அவனும் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து தேர்வாகிறான். இடையில் அதே ஊரில் சற்று வசதியாக வாழும் குடும்பத்தில் இருக்கும் அமுதா என்னும் இளங்கோவின் பள்ளிக் கால தோழியான அஞ்சலி நாயர், இளங்கோவை காதலிக்கிறார்.

இந்தக் காதலை முதலில் ஏற்காத இளங்கோ மறுத்துப் பார்க்கிறார். முடியாது என்றும் சொல்கிறார். ஆனால் பின்பு ஒரு சமயத்தில் அந்த வயதுக்கேற்ற தடுமாற்றமான மனதுடன் காதலில் வீழ்ந்துவிடுகிறார். இது தெரிய வந்தவுடன் தாத்தா ராமு, தன் பேரனை அழைத்துக் கண்டிக்கிறார்.

“நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி உங்கம்மாவையும், தங்கச்சியையும் காப்பாத்துவேன்னுதான் உன்னைப் படிக்க வைச்சேன். உங்கம்மாவும் உன்னைத்தான் நம்பியிருக்கா.. இந்த வயசுல காதலெல்லாம் வேணாம்ப்பா…” என்று அறிவுரை சொல்ல.. காதலை மறப்பதாக வாக்குறுதி அளிக்கிறார் இளங்கோ.

ஆனால் அதனை கைவிட முடியாத அளவுக்கு அமுதாவின் வீட்டில் சில பிரச்சினைகள் எழ.. ஊரில் இருந்தால்தானே பிரச்சினை என்றெண்ணி சென்னைக்கு வேலை தேடி செல்கிறார் இளங்கோ. ஆனால் அங்கேயும் காதல் கடிதம் மூலமாகத் தொடர.. இது தெரிந்து அமுதாவின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.

இதையறியும் இளங்கோ திரும்பி வந்து தன் தாத்தாவிடம் அமுதாவை தனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி சொல்கிறான். அவனது இரக்கமான குரலைக் கேட்டு மனம் தளரும் தாத்தா, அமுதாவின் வீடு தேடிப் போய் பெண் கேட்க.. அது முடியாமல் போய் அவமானத்துடன் வீடு திரும்புகிறார் தாத்தா.

மறுநாள் நிச்சயத்தார்த்தம் என்கிற நிலையில் இன்றைக்கு ஏதாவது செய்தால்தான் காதல் கை கூடும் என்ற நிலைமை இளங்கோவுக்கு. அதே நேரம் இந்தப் பிரச்சினையால் தனது குடும்பத்திற்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்று நினைக்கிறார் தாத்தா.. காதலர்கள் ஓடிப் போக திட்டம் போடுகிறார்கள்.

ஆனால் அத்திட்டம் நிறைவேறியதா..? இல்லையா..? இறுதியில் என்னாகிறது..? என்பதுதான் இந்த ‘நெடுநல்வாடை’யின் திரைக்கதை.

‘நெடுநல்வாடை’ என்பது சங்கத் தமிழ் இலக்கியத்  தொகுப்பான பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றின் பெயராகும்.

சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றிருக்கும் கடைச் சங்கக் கால பாண்டிய மன்னர்களில் புகழ் பெற்றவரான இரண்டாம் நெடுஞ்செழியன் என்னும் மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு  மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவரான நக்கீரரால்  இயற்றப்பட்டதே இந்த ‘நெடுநல்வாடை’ என்னும் நூல்.

இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வாடைக் காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு)வாடையாகவும், போர் புரியச் சென்றதால் தலைவியை விட்டுப் பிரிந்திருந்தாலும், போரில் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்ததைக் குறிப்பதால்தான் ‘இது நீண்ட நல்ல வாடை’ என்னும் பொருளில்  ‘நெடுநல்வாடை’  என இந்த நூல் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

நாயகன் இளங்கோ தன் காதல் நிறைவேறாத கோபத்தில் ஊருக்கே வராமல் 8 ஆண்டுகளாக அரபு தேசத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. காதலியோ வேறொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் ஊருக்கு வந்து போகும் போதெல்லாம் தன் காதலனைப் பற்றி விசாரிப்பதாகவும் இருப்பதாக திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால் இந்தக் கதைக்கு, இந்தத் தலைப்பு மிக, மிக பொருத்தமானதுதான்..!

படத்தில் நாயகன், நாயகி என்று வியாபார நோக்கில் இளங்கோ, அஞ்சலி நாயரைச் சுட்டிக் காட்டி சொன்னாலும் உண்மையான கதாநாயகன் ‘செல்லையா’ என்னும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கும் ‘பூ’ ராமுதான்.

முற்றிலும் புதுமுகங்கள் மட்டுமே நடித்துள்ள இந்தப் படத்தில், படம் முழுவதையும் தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் தாத்தாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராமு.

அவருடைய வயதான தோற்றமும், கன்னங்கரிய அழகும், உடல் வாகுவும் ஒரு தாத்தாவை உணர்த்துகின்றன. கடுமையான உழைப்பை காட்டினால்தான் முன்னேற முடியும் என்பதை பேரனுக்கு உணர்த்தும்விதத்தில் இவருடைய உழைப்பை படத்திலும் காட்டி பேரன்-தாத்தா காட்சிகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

தமிழ்ச் சினிமாவில் இந்தக் கேரக்டருக்கு இவரை விட்டால் வேறு யாரும் இல்லப்பா என்று சொல்லும் அளவுக்கு, மிக யதார்த்தமான, செல்லையா தாத்தாவாக வாழ்ந்திருக்கிறார் மனிதர்.

“எப்போ பார்த்தாலும் மாமா ஏன் முறைச்சுக்கிட்டேயிருக்கார்.  என்கிட்ட நல்லா பேசவே மாட்டாரே?” என்ற பேரனின் கேள்விக்கு, “நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி அவனை ஜெயிச்சுக் காட்டு.. தானா வந்து பேசுவான்…” என்று தாத்தா சொல்லும் அந்த வார்த்தைகள்தான் படத்தில் மிக முக்கியமான வசனம்.

“இது என் பொண்ணு.. இது என் பேரன், பேத்தி.. இவுக எங்கேயும் போக மாட்டாங்க. இங்கதான்.. என்கூடத்தான் இருப்பாங்க…” என்று தாத்தாவான ராமு உறுதியாகச் சொல்லும் இடத்தில் இருந்துதான் படமே துவங்குகிறது. இந்தக் காட்சியிலேயே பார்வையாளர்களை தன் பக்கம் வசப்படுத்திவிட்டார் தாத்தா ராமு.

மகளிடம் கருணை காட்டி, பேரன், பேத்தியிடம் பாசத்தையும், செல்லத்தையும் காட்டும் அதே நேரத்தில் படிப்பிலும் கவனம் இருக்கணும் என்று கண்டிக்கவும் செய்து ஒரு தாத்தாவாக வாழ்ந்திருக்கும் ‘பூ’ ராமு படம் பார்க்கும் அத்தனை பேரையும் அவரவர் தாத்தாக்களை நினைக்க வைத்துவிட்டார். இவருடைய கேரியரில் இந்த ‘நெடுநல்வாடை’ மிக முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்..!

நாயகன் இளங்கோ. முகத் தோற்றத்திலேயே சிக்கல்கள் நிறைந்த குடும்பத்தில் இருப்பவன் என்பதைக் குறியீடாய் சொல்பவனை போலவே இருக்கிறார். சிரிக்கவே தெரியாமல் கடைசிவரையிலும் இறுக்கமாய் நடித்து முடித்திருக்கிறார்.

அமுதாவின் காதலை ஏற்பதா.. வேண்டாமா.. என்கிற குழப்பத்தை மிக அழகாக நடிப்பில் காண்பித்திருக்கிறார். இதேபோல் தாத்தாவுக்கு அடங்கிய பேரனாகவும், மாமானை எதிர்த்துப் பேச முடியாத கையறு நிலையில் இருக்கும் தனது குடும்பச் சூழலையும் உணர்த்தும் நடிப்பில் இளங்கோ சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கடைசியில் தனது குடும்ப நலனுக்காக காதலையே தியாகம் செய்துவிட்டு போனாலும், தாத்தாவை அந்திமக் காலத்தில் பார்க்க ஓடோடி வந்து நிற்கும் அந்த துடிப்பையும் பெரிதும் ரசிக்க முடிகிறது.

இளங்கோவை போல எண்ணற்ற இளைஞர்கள் தங்களது குடும்பத்திற்காக தங்களுடைய காதல், காதலி, திருமணம் இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தியாகியாகியிருக்கிறார்கள். அந்தத் தியாகிகளுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பணமாகக் கூட சொல்லலாம்.

அமுதாவாக நடித்திருக்கும் புதுமுகம் அஞ்சலி நாயர் நடிப்பில் அலற வைத்திருக்கிறார். கேரள வனப்பு அவரது உடலில் தெரிந்தாலும், அழகான நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அவர் காட்டும் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் தியேட்டருக்கு வந்த சில்வண்டு இளைஞர்கள் கிளீன் போல்டாகிவிட்டார்கள். தெனாவெட்டு பேச்சையும், அதற்கேற்ற முகத் தோற்றத்தையும் வைத்து அவர் பேசும் பேச்சும், காட்டும் நடிப்பும்.. ‘ஆத்தாடி’ என்று நம்மையே சொல்ல வைத்திருக்கிறது.

நெல்லை வட்டார பேச்சு வழக்கினை எப்படி மனதில் வைத்து தெள்ளத் தெளிவாக பேசினாரோ தெரியவில்லை. இவருக்கு டப்பிங் பேசிய கலைஞரையும் வெகுவாகப் பாராட்டியே தீர வேண்டும். அற்புதமான நடிப்பு இந்த அஞ்சலியிடம் இருந்து கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்து முடித்த கையோடு விமான பணிப்பெண் வேலைக்கு போய்விட்டாராம் இந்த அஞ்சலி நாயர். தேடிப் பிடித்து இழுத்துட்டு வாங்கப்பா.. வந்து திரையுலகில் கோலோச்சினால் நாலு தேசிய விருதாவது வாங்கலாம்..! ஒரே படம் என்றாலும் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லிப் பெருமைப்படும் அளவுக்கு இத்திரைப்படம் அஞ்சலி நாயருக்கு வாய்த்திருக்கிறது. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

கைவிடப்பட்ட பெண்ணாக செந்தி ஒரு பக்கம் பதற வைத்திருக்கிறார். கிணற்றின் அருகில் நின்று கொண்டு தனது பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்க்கும் அந்தக் காட்சியில், நிஜமாகவே நமது வயிற்றில் ‘பக்’ என்ற அதிர்ச்சி கோளத்தை ஏற்படுத்திவிட்டார் செந்தி.

தனது அண்ணனின் வருடக்கணக்கான வெறுப்பினையும் சுமந்து கொண்டு தந்தையுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில், எப்போதும் ஒரு சோக வடுவுடன் இருக்கும் கேரக்டரை செந்தி சிறப்பாக செய்திருக்கிறார்.

எப்போதும் கடுகடுவென்ற முகம்.. எரித்துவிடுவதைப் போன்ற பார்வையில் ‘மைம்’ கோபி தனது கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார். இதேபோல் சித்தப்பா கேரக்டரில் நடித்திருக்கும் ஐந்து கோவிலான்.. அமுதாவின் அம்மாவாக நடித்தவர்.. அண்ணன் ‘மருது பாண்டி’யாக நடித்திருக்கும் அஜய் நட்ராஜ் என்று படத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ச்சியான படங்களில் வறண்டு கிடக்கும் பூமி, வெயிலில் காய்ந்து கிடக்கும் வயக்காட்டு நிலங்கள்.. தண்ணீருக்கு ஏங்கும் பயிர்கள் என்றே காட்டிக் வரும் நேரத்தில், பச்சைப் பசேல் வயல் வெளிகளுடன் இப்போதும் விவசாயத்துடன் ஒட்டி உறவு முறையாடி வரும் பகுதியை படத்தில் பளிச்சென்று காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமிக்கு நமது பாராட்டுக்கள்.

உடலைச் சுடும் வெயிலிலும், வேர்வை பொங்கும் உழைப்பிலும் படத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார். இயக்குநரின் திறமையால் கேமிரா கோணங்கள் சிறப்பாக இருப்பதும் ஒளிப்பதிவின் புகழுக்கு ஒரு முக்கியக் காரணம்.

பாடல் காட்சிகளில் வரிகளுக்கேற்ற காட்சிகளை வடிவமைத்திருந்தாலும் அவைகளை படமாக்கியவிதம்தான் அந்தக் காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளினின் இசையில் வாத்தியங்கள் பின்னுக்குப் போக பாடல் வரிகள் முன்னுக்கு வந்து நம்மையும் கூடவே பாடவும் வைக்கின்றன. ‘கருவா தேவா’வும், ‘ஏதோ ஆகிப் போச்சு’வும் செம மெலடி. ‘ஒரே ஒரு கண் பார்வை’ ஏங்க வைப்பதை போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘தங்கக் காவடி’ இடைவேளைக்கு பின்பு சோர்வாயிருந்த நேரத்தில் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது.

படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே தாளம் போட வைக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.. இதேபோல் பின்னணி இசையும் சிறப்புதான்.

காசி விஸ்வநாத்தின் படத் தொகுப்பில் முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்கிறது. இரண்டாம் பாதி காட்சிக்கு காட்சி சோகத்தை கவ்வியபடியே செல்வதால், நிரம்ப நேரம் ஆகிறதோ என்கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.  

திருநெல்வேலி சுற்று வட்டார மக்களின் வாழ்வியலை, அவர்களின் கதையை, உணர்வுகளை, உழைப்பினை மிக அழுத்தமாக இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் அந்த மண்ணின் மைந்தரான இயக்குநர் செல்வக்கண்ணன்.

நெல்லை வட்டார மொழி, காட்சிக்குக் காட்சி மிக தெளிவாக குறைவில்லாமல் ஒலிக்கிறது. வசனம் எழுதிய செல்வக்கண்ணனுக்கு இதற்காகவும் ஒரு பாராட்டு.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் காதலைப் பற்றியும், காதலினால் பிரியும் குடும்பங்களைப் பற்றியுமே பேசுகின்றன. இதேபோல் கதையாக இருந்தாலும் இந்த ‘நெடுநல்வாடை’ அவைகளில் இருந்து முற்றிலும் தனியாக, தனித்தன்மையுடன் தெரிகிறது.

காதலையும், குடும்பத்தையும் ஒரே சேர சொல்லும்விதமாக வந்திருக்கும் இத்திரைப்படத்தின் கதை, அநேகமாக நம் வாழ்நாளில் நம்மை கடந்து சென்ற ஒரு விஷயமாக இருக்கிறது என்பதுதான் சுவையான விஷயம்.

பாதிப் படம் வரையிலும் தெரிந்து கொண்டிருந்த கொம்பையா கதாபாத்திரம் கடைசியில் காணாமல் போனதும், கொள்ளிபோடக் கூட வராமல் போனதும் ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த ஒரு விஷயத்தை மட்டுமே இயக்குநர் படத்தில் சொல்லாமல்விட்டுவிட்டார்.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் படத்தை இழுக்கின்றன.  குறிப்பாக ‘தங்கக் காவடி’ பாடல் காட்சி தேவையே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. இருந்தும், படத்தின் முடிவை அறிய அத்தனை ரசிகர்களையும் துடிக்க வைத்திருப்பதிலேயே இயக்குநரின் வெற்றியை நம்மால் உணர முடிகிறது.

காதல் என்ற போர்வையில் காமத்தை வலிந்து திணித்து தமிழ்ச் சமூகத்தை சீர்கேடாக்கிக் கொண்டிருக்கும் சில திரைப்படங்களின் மத்தியில் இது போன்ற குடும்ப நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும் அக்கறை கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களை நாம் மனமுவந்து வரவேற்க வேண்டும்..!

நெடுநல்வாடை – அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்..!

Our Score