full screen background image

ஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்

ஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ‘நேரம்’, ‘பிரேமம்’, ‘அமர காவியம்’, ‘வெற்றிவேல்’ ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்த அனந்த் நாக், கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளாக அஞ்சு குரியன் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் சதீஷ், பலோமா மோனப்பா, முத்துராமன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நாயகி அஞ்சு குரியன் சென்ற வருடம் வெளியான ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர். மற்றொரு நடிகையான சம்யுக்தா மேனன் இந்தப் படத்தின் மூலம்தான் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனு சரண் படத் தொகுப்பை கவனிக்க, ஜெயக்குமார் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். விஷ்வகிரண் நம்பி மற்றும் ஸ்ரீசெல்வி ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள்.

படத்திற்கு கதை திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே.சி.சுந்தரம். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் ‘உன்னாலே உன்னாலே’ மற்றும் ‘தாம் தூம்’ ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைத்தான் சொல்ல வந்திருக்கிறது இத்திரைப்படம். 

நாயகன் அனந்த் நாக் ஒரு பெரிய ஐ.டி. நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய நண்பர் சதீஷ். இவருக்குத் திருமணமாகிவிட்டது. அனந்த் நாக் ஒரு திருமணத்தில், நாயகி அஞ்சு குரியனை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவர் மீது காதல் கொள்கிறார்.

அஞ்சுவும் அனந்த் நாக்கும் பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காதலிக்கத் துவங்குகிறார்கள். இருவர் வீட்டிலும் பிரச்சினையில்லை என்று சொல்லிவிட்டதால் நிச்சயத்தார்த்தமும் நடைபெறுகிறது.

ஆனால் திடீரென்று அனந்த் நாக்கின் கண்ணில் புகைப்படக் கலைஞராகத் தென்படுகிறார் சம்யுக்த மேனன். இவர் லிபரல் டைப். எப்போதும் அரைக்கால் டவுசரும், பனியனுமாகவே வலம் வருகிறார். புகைப்படக் கலைஞராகவும் இருப்பதால் இது தனக்கு சவகரியமாக இருக்கிறது என்கிறார்.

இவர் மீது அளவில்லாத ஆசை வைக்கிறார் ஹீரோ. சம்யுக்தாவும் இதனை ஏற்றுக் கொள்ள காதல் உணர்வு படுக்கைவரையிலும் பாய்கிறது. இதனால் நிச்சயிக்கப்பட்ட அஞ்சு குரியனுடனான காதலையும், உறவைத் துண்டித்துக் கொள்கிறார் அனந்த் நாக்.

ஆனால் சம்யுக்தாவுடனான காதலும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அதுவும் சொற்ப ஆயுளில் முடிவடைகிறது. தன்னைப் பற்றியே கவலைப்பட வேண்டும் என்று நாயகன் நினைக்கிறார். நாயகியோ தனக்கென்று ஒரு உலகம் இருக்கிறது என்கிறார். இது இருவருக்குள்ளும் ஒத்துப் போகாத சூழலை ஏற்படுத்த.. நாயகன் மீண்டும் தனி மரமாகிறார்.

அடுத்து அவர் என்ன செய்கிறார். வேறொரு பெண்ணை காதலிக்கப் போகிறாரா.. அல்லது மீண்டும் அஞ்சு குரியனிடம் ஓடுகிறாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

அனந்த் நாக் காதலிக்கத் தகுதியான ஆளாகவும், இரண்டுங்கெட்டான் மன நிலை வாய்த்த கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்கிறார். அஞ்சு குரியன் அவரைக் காதலிப்பதை நியாயப்படுத்துவது போலவேதான் திரைக்கதையில் தெரிகிறார்.

அடுத்தடுத்து தனது புரிதல் இல்லாத புத்தியை வெளிப்படுத்தும் காட்சிகளில்தான் “ஐய்ய.. இப்படியொரு ஆளா?” என்று நம்மைக் கேட்க வைப்பதுபோல நடித்திருக்கிறார். நிறையவே தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அனந்த் நாக். அதிலும் சம்யுக்தாவுடன் மோதிக் கொண்டேயிருக்கும் காட்சிகளில் குறையில்லாத நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்புத் தன்மை கொடுக்கும் வல்லமை இல்லாதது ஒரு குறைதான்.

நாயகிகளில் அஞ்சு குரியனுக்கு ஒரு ‘ஜே’ போடலாம். அத்தனை அழகான நடிப்பை தன் முகத்திலேயே காட்டியிருக்கிறார். காதலரிடமிருந்து போனை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகட்டும்.. சின்ன சின்ன சண்டைகளை போட்டு அனந்த் நாக்கை தவிக்க வைப்பதும், பள்ளியில் ஒரு முரட்டு மாணவனுக்கு முட்டுக் கொடுக்கும் காட்சிகளிலும் இவருடைய நடிப்பே பிரதானம்.

தனது தோழியிடம் தனது காதல் போகும் பாதை பற்றி அலசி, ஆராயும் காட்சிகளிலெல்லாம் “நல்லபடியா முடியும்மா” என்று பார்ப்போரையும் சொல்ல வைத்திருக்கிறார் அஞ்சு.

இவருக்கு நேரெதிர் கேரக்டர் சம்யுக்த மேனன். இந்தக் காலத்திய ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’ கேரக்டர். காதலிப்பதையே ஏதோ ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவதுபோல நினைத்து ‘முந்தா நேத்துதான் ஒருத்தன்கூட பிரேக்கப் ஆச்சு’ என்று அலட்சியமாக சொல்லும்போதே, இவர் அனந்த் நாக்குக்கு பொருத்தமான ஆள்தான் என்று சொல்ல வைக்கிறார்.

மூக்கில் இருக்கும் வளையம் மட்டுமே அவரது அழகுக்கு இடைஞ்சலாக இருக்கிறதே தவிர, இவரும் ஒரு போட்டோஜெனிக் முகம்தான். நடிப்பையும் குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

இடையிடையே சிச்சுவேஷனுக்கேற்றாற்போல் காமெடி செய்ய சதீஷ் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் சிரிப்புதான் வரவேயில்லை.

சம்யுக்தா தன் அப்பாவிடம் போனில் பேசும்போது, “ஏற்கனவே இருந்தவனோட நேத்து பிரேக் அப் ஆயிடுச்சுப்பா. இன்னைக்கு இன்னொருத்தன் கிடைச்சிருக்கான். இப்போவரைக்கும் அவன்கூடத்தான் பேசிட்டிருந்தேன். இவன் எனக்கு கரெக்ட்டா செட் ஆவான்னு தோணுதுப்பா…” என்கிறார். இதைக் கேட்டு அந்த பாசமிக்க அப்பாவோ “குட்” என்கிறார். இந்த ஒரு காட்சியில்தான் தியேட்டரே அதிரும் கை தட்டல் கிடைக்கிறது.

அனந்த் நாக்கின் அப்பாவான முத்துராமன் தனது மகனின் போக்கைக் கண்டிக்கத் தெரியாமல் அவருடன் பேசாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறாராம். இயக்குநரின் திரைக்கதை திறமைக்கு இதுவும் ஒரு சான்று..!

படத்தில் இதைத் தவிர மற்றவைகள் அனைத்தும் அம்சமாக இருக்கின்றன. ஒளிப்பதிவு, பின்னணி இசை, உடை வடிவமைப்பு, லொகேஷன்கள் என்று மற்றவைகளில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார்.

டிமேல் எட்வர்ட்ஸின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் மட்டுமில்லாமல் படம் முழுவதிலுமே ஒளியின் அழகு தெரிகிறது. அதிலும் கோவா காட்சிகளில் சொல்லவே வேண்டாம். கோவாவுக்கு ஒரு முறை போய்விட்டுத்தான் வருவோமே என்றெண்ணத்தை தோற்றுவிக்கிறது ஒளிப்பதிவு.

பாடல்கள் ஓகே ரகம்தான். இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரைக் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. இப்போது எந்தப் பாடல்தான் திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறது..? ‘கண்களின் ஓரமாய்’ பாடலை பாடிய பாடகிக்கு ஒரு ‘ஜே’ போடலாம். இந்தப் பாடல் காட்சியை பதிவாக்கியவிதமும், லொகேஷனும், அருமையோ அருமை. ‘காயாத கானகத்தே’ பாடல் இசைக் கச்சேரிகளில் பாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  

எதற்காக காதலிக்கிறோம் என்கிற நோக்கமே இல்லாமல் சும்மா டைம் பாஸூக்காக காதலிப்பவர்களை பற்றியே சமீப காலமாக படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று.

இப்போதைய காலக்கட்டத்தில் இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் ஒரு குழப்ப நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது. அவர்களது இளமைக் காலத்தில் ஏற்படும் காதல் தொடர்பான உறவுகளுக்குள் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தயங்குகிறார்கள். அல்லது பயப்படுகிறார்கள். பட்டென்று உறவை ரத்து செய்துவிட்டு, அதே வேகத்தில். புதிய உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்படியே காதலை தேடிக் கொண்டே போனால் முடிவு என்ன என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தக் குழப்பம் இயக்குநருக்குள்ளும் இருக்கிறது போலும். இதனால் அவரும் ஒரு நிலையில்லாமல் தள்ளாடும்வகையில் இந்தப் படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் தங்களுக்குள் ஸ்பார்க் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் காதலர்கள். ஆனால், அந்த ஸ்பார்க் எது..? எப்படியிருக்கும்..? என்ன மாதிரியான விளைவை அது தங்களுக்குள் ஏற்படுத்தும்..? என்கிற சுய அறிவே இல்லாமல் ஏனோதானோ என்று யோசித்து முடிவெடுத்து கடைசியில் தங்களுக்குத் தாங்களே சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதுதான் இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரே ஆளை பார்த்து, நேசித்து, காதலித்து அவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கும் எண்ணமே, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறது. ‘இவள் இல்லாவிட்டால் வேறு ஒருத்தி..’ ‘இவன் இல்லாவிட்டால் வேறு ஒருவன்..’ என்று காதலர்கள் ஜம்ப் செய்து கொண்டேயிருந்தால் இதில் ‘காதல்’ என்பது எங்கே இருக்கிறது..?

அஞ்சு குரியனுடன் காதல் என்பது வந்த பிறகு, காதலர்களாக ஆன பிறகு.. எதற்காக, எங்கேயிருந்து அந்த ஸ்பார்க் வர வேண்டும்..? ஸ்பார்க் இல்லாமலேயே அவர்களுக்குள் காதல் எப்படி வந்தது..? காதல் இல்லையெனில் எதற்காக நிச்சயத்தார்த்தம்வரையிலும் போக வேண்டும்…? இதற்கெல்லாம் பதிலே சொல்லாமல்தான் அனந்த் நாக் அடுத்து சம்யுக்தாவை பார்த்தவுடன் அவர்தான் தனக்கு பொருத்தமானவர் என்கிறார். இது குழப்பமாக இல்லையா..?

இதுதான் இப்படியென்றால்.. அடுத்து சம்யுக்தாவுடன் பார்த்தவுடன் காதலாகி.. அஞ்சு குரியனுடனான காதலை முறித்துக் கொண்டு, நிச்சயத்தார்த்ததை ரத்து செய்துவிட்டு.. தனது அப்பா, அம்மாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காதலிக்கத் துவங்கி என்ன பலனடைந்தார்..? என்ன சாதித்தார்..? காதல் என்ற உணர்வையும், காதலி என்ற உணர்வாலும் என்னதான் செய்தார்..? எதற்கும் இங்கே பதில் இல்லை.

ஆனால் படுக்கை கசங்கி கிழிந்துபோகும்வரையிலும் கட்டில் விளையாட்டை இருவரும் செய்திருக்கிறார்கள். இதற்கு இருவருக்கும் மனசு வருகிறது. இதில் தெளிவாக இறங்கிய நாயகன் பின்பு எதற்காக சம்யுக்தாவிடம் சண்டையிட வேண்டும்..? ஏன் பிரேக் அப் செய்ய வேண்டும்..? காதலி என்றாலும் அவருக்கென்று தனியாக ஒரு புரொபஷனல் வாழ்க்கை இருக்கிறதே.. அதனை அவர் எப்படி துறப்பார்..? வேலைக்கே போகக் கூடாது என்கிற நிபந்தனையிலா நாயகன், சம்யுக்தாவுடன் படுக்கையில் வீழ்ந்தார்..?  

காதல் என்றால் என்னவென்றே தெரியாத மன நிலையில் இருப்பவர் காதலித்தால் என்ன நடக்குமோ அதைத்தான் இந்த எபிஸோடில் இயக்குநர் காட்டியிருக்கிறார்.

இது போன்ற கல்யாணத்திற்கு முன்பேயே ‘காதல்’ என்ற போர்வையில் உடலுறவு கொள்வது சமூகத்திற்குக் கேடானது.. ஆபத்தானது என்பதை இயக்குநரும் சொல்லவில்லை. அந்த நாயகன், நாயகியரும் சொல்லவில்லை. பின்பு எதை வைத்து இதனை ‘காதல்’ என்று எடுத்துக் கொள்வது..?

இதுதான் குழப்பம் என்றால் கோவாவில் பார்த்த மாத்திரத்திலேயே அனந்த் நாக் டிரெயினரை டச் செய்கிறார். காதலிக்க முயல்கிறார். பார்த்தவுடனேயே.. அவரது பெயர் என்ன.. என்ன செய்கிறார்.. நம்முடைய குணத்திற்கு ஏற்ற ஆளா.. கல்யாணம்வரைக்கும் கொண்டு போக முடியுமா என்பதையெல்லாம் யோசிக்காமல் பார்த்த மாத்திரத்திலேயே ‘காதல்’ என்று சொல்லிக் கேட்பதெல்லாம் படு மொக்கைத்தனம்.

ஆக மொத்தத்தில் இந்தப் படத்தில் நாயகனுக்குள் இருப்பது காதலே இல்லை. இப்போதைக்கு அவரது படுக்கைக்கு ஆள் தேவை என்பது மட்டும்தான். இதை இயக்குநர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல் அதற்கு ‘காதல்’ என்று முலாம் பூசி மெழுகியிருக்கிறார்.

படத்தின் முடிவில் நாயகன் அனந்த் நாக் நான்காவதாக ஒரு பெண்ணுடன் காபி சாப்பிட போகும்போது தியேட்டரில் கை தட்டல் கிளம்புகிறது.. இதுதான் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய உண்மையான, கிண்டலான பாராட்டு..!.

Our Score