full screen background image

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்

மாதவ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி காபா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ஷில்பா மஞ்சுநாத் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும், பொன்வண்ணன், லிஸி ஆண்டனி, மா.கா.பா. ஆனந்த், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – சாம். சி.எஸ்., ஒளிப்பதிவு – ஏ.கவின் ராஜ், படத் தொகுப்பு – பவன் குமார், கலை இயக்கம் – ஸ்ரீகாந்த், ஒலி வடிவமைப்பு – ஆக்ஸிஜன், தயாரிப்பு நிறுவனம் – மாதவ் மீடியா, தயாரிப்பாளர் – பாலாஜி காபா, எழுத்து, இயக்கம் – ரஞ்சித் ஜெயக்கொடி.

நாயகன் கவுதம் என்னும் ஹரிஷ் கல்யாண் என்ன வேலை செய்கிறார் என்பது தெரியாது. சிகரெட், குடி என்று எந்தப் பழக்கமும் இல்லை. ஆனால் முரடன் முத்து. முரட்டுக் கோபத்துக்குச் சொந்தக்காரர்.

இவருடைய தாய் லிஸி ஆண்டனி இவருடைய சின்ன வயதிலேயே இவரை இவரது அப்பாவான பொன்வண்ணனிடம் கொடுத்துவிட்டு வேறொருவருடன் சென்றுவிட்டார். இப்போது லிஸி சந்தோஷமாக இருக்க.. அம்மா பிரிந்த ஏக்கத்திலேயே கோபக்காரனாக உருவெடுத்திருக்கிறார் ஹரிஷ்.

ஒரு பார்ட்டிக்கு தனது நண்பர்களான மா.கா.பா.ஆனந்த் மற்றும் பால சரவணனுடன் செல்கிறார் ஹரிஷ். சென்ற இடத்தில் நாயகி தாரா என்னும் ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார் ஹரிஷ். அப்போது ஏற்படும் ஒரு சின்னப் பிரச்சினையால் அது பெரும் அடிதடியாகிவிடுகிறது. அந்தத்  தர்மசங்கடமான நேரத்திலும், ஆபத்தான கட்டத்திலும் ஷில்பாவை காப்பாற்றி அழைத்துப் போகிறார் ஹரிஷ்.

இதனால் ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது ஒரு பிரியம் ஏற்படுகிறது. இந்தப் பிரியம் காதலாக மாற.. ஹரிஷ் முதலில் இதனை ஏற்க மறுக்கிறார். பின்பு மெல்ல, மெல்ல ஏற்கிறார். என்றாலும் அவரால் ஷில்பாவை சந்தேகப்படுவதை நிறுத்த முடியவில்லை.

எப்போதும் தனது அம்மாவை நினைத்தாலே கோபப்படும் ஹரிஷ் அனைத்துப் பெண்களுமே ஆசையைக் காட்டி மோசம் செய்துவிடுவார்களோ என்று நினைத்து பயப்படுகிறார். இதனால் ஷில்பாவை சந்தேகக் கண்ணோடயே பார்க்கிறார். வார்த்தைகளாலேயே வதைக்கிறார். முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார். மூர்க்கமான செயல்களால் ஷில்பாவை வேதனைப்படுத்துகிறார்.

பல முறை ‘பிரேக் அப்’ என்று சொல்லிவிட்டுப் போகும் ஷில்பா, மறுநாளே ஹரிஷை மறக்க முடியாமல் திரும்பவும் வந்து கட்டிப் பிடித்துக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.

ஷில்பாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்தவுடன் ஹரிஷ் கோபமாகி வீடு தேடி வந்து ஷில்பாவை திட்டிவிட்டுப் போகிறார். இந்தக் களேபரத்தில் ஷில்பாவின் தந்தையையும் ஹரிஷ் அடித்துவிட, ஷில்பா ஓடி வந்து பெரிய கும்பிடு போட்டு “இத்தோட நம்ம சகவாசம் முடிந்தது.. கிளம்பு ராசா…” என்று சொல்லி ஹரிஷை அனுப்பி வைக்கிறார்.

இதோடு பிரச்சினை முடிந்ததா.. இல்லையா.. என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு முந்தைய படங்களிலெல்லாம் வெறுமனே ‘சாக்லெட் பாயாக’ மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த ஹரிஷுக்கு இது நிச்சயமாக வித்தியாசமான கேரக்டர்தான். எப்போது பார்த்தாலும் கோபத்துடனேயே இருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச். அதற்கு இவருடைய முகமும்கூட ஒத்துழைத்திருக்கிறது.

அடிதடி சண்டையில் மூர்க்கத்தையும், காதலில் ஒரு வெறித்தனத்தையும், நட்பில் எப்போதும் ஒரு சந்தேகத்தையும் தனது நடிப்பில் காண்பித்திருக்கிறார் ஹரிஷ். ஒரு கட்டத்தில் “பைத்தியக்காரப் பய…” என்று படம் பார்ப்பவர்களையும் சொல்ல வைத்துவிட்டார் ஹரிஷ். இதுதான் இயக்குநருக்குக் கிடைத்த வெற்றி. ஒருவேளை இயக்குநர் இதைத்தான் எதிர்பார்த்திருந்தாரோ.. என்னவோ..?

இவருக்கு ஜோடி போட்டு அமைதியாக, அடக்கமாக நடித்து பெயர் வாங்கியிருக்கிறார் ‘தாரா’வாக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத். ‘காளி’ படத்திலேயே வித்தியாசமான முகத் தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த ஷில்பாவை இந்தப் படத்திலும் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.

படத்தில் அதிகமாக நடித்திருப்பவரும் இவரேதான். ஹரிஷை புரிந்து கொள்ள முடியாதவராக.. அதே சமயம் தனது காதலையும் விட்டுக் கொடுக்க முடியாதவராக.. பணக்காரத்தன்மையை இழக்க விரும்பாமல், அதிலிருந்து கீழே இறங்கி வரவும் முடியாமல் தவிக்கும் ஒரு இளம் பெண்ணாக.. ‘ஹாட்ஸ் அப்’ என்று சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார் ஷில்பா.

கண்களில் ஒரு ஏக்கம், உதட்டசைவில் ஒரு வசீகரம், தனது ஒவ்வோர் அசைவிலும் காதலைக் காண்பித்து சொக்க வைக்கிறார் ஷில்பா. ஹரிஷிடம் தனது நிலைமையைச் சொல்லிப் புரிய வைக்க அவர் படும்பாடும், கஷ்டமும் அவரது நடிப்பால் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்கிறது..!

இதற்கு இவருடைய குரல் வளமும் உதவி செய்திருக்கிறது. அட்டகாசமான வசன உச்சரிப்பு. மிகப் பெரிய பாராட்டினை வழங்க வேண்டும். கவர்ச்சியை சுண்டியிழுக்கக் கூடிய வகையில் இருக்கிறது அந்தக் காந்தக் குரல்.

அப்பாவாக பொன்வண்ணன்.. மகன் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் ஓடோடி வந்து காப்பாற்றுவதைத் தவிர வேறு வேலையில்லை இவருக்கு. இடையில் ஒரு முறை மட்டுமே ஹரிஷின் அம்மா அவர்களைவிட்டு விலகியதற்கு “தானேதான் முதல் காரணம்” என்கிறார். இதை முதலிலேயே ஹரிஷிடம் சொல்லி வளர்த்திருக்கலாமே ஸார்..?

பொன்வண்ணன் பதற்றத்துடன் ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்திருக்கிறார். மகனிடம் பேசக்கூட பயந்து கொண்டு அவனது நண்பர்கள் மூலமாக பேசுவதும், செய்வதும் எந்த அப்பனும் படக் கூடாத கஷ்டம்தான்.

ஹரிஷின் தாயாக லிஸி ஆண்டனி.. பாசமாக பேசிவிட்டு மகனிடம் இருந்து விடைபெறும் அந்தக் காட்சியை அனுபவிக்கும் எந்தவொரு மனிதனும் நிச்சயமாக லிஸி மீது கோபப்படத்தான் செய்வான். அவரது நடிப்பு அப்படி ஈர்க்கிறது.

இன்னமும்கூட இரண்டாம் திருமணத்தால் ஏற்படும் சிக்கல்களில் பலவும் குழந்தைகள் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. ஏழை குடும்பத்தில் இருந்து பெரிய பணக்காரக் குடும்பம்வரையிலும் இதுதான் நடக்கிறது.

மா.கா.பா.ஆனந்தின் கேர்ள் பிரெண்ட்டாக சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஜம்ப்பாகியிருக்கும் திவ்யா நடித்திருக்கிறார். இவரது மிக அழகான முகத்தை ஒளிப்பதிவாளர் ஏன் இப்படி டல்லாக்கினார் என்று தெரியவில்லை. ஆனால் நடிப்பு சரளமாக வருகிறது திவ்யாவுக்கு.. அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து பெயரெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

மா.கா.பா.ஆனந்தும், பால சரவணனும்தான் பார்வையாளர்களுக்கு ஆபத்துதவி நண்பர்கள். இவர்களும் இல்லையெனில் தலையில் சம்மட்டியால் அடிப்பதை போல துடித்துப் போயிருப்பார்கள் பார்வையாளர்கள். பல இடங்களில் புன்னகைக்க வைக்கிறது இந்த ஜோடி.

படத்தில் குறிப்பிடத்தக்க வேலையைச் செய்திருப்பவர் இயக்குநரைவிடவும் ஒளிப்பதிவாளர்தான். கவின் ராஜின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பார்ப்போரை ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கிறது. பாடல் காட்சிகளிலும், லடாக் மலைப் பிரதேசக் காட்சிகளிலும் அப்படியே அந்தப் பிரதேசத்தின் பகுதியை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.

படத் தொகுப்பாளர் பவன் ஸ்ரீகுமாரின் வேலை கச்சிதம்தான்.  இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் கவரவில்லை. இன்னொரு முறை கேட்கவும் தோணவில்லை. என்னாச்சு சாம்..?

தமிழ்ச் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு..? எல்லாரும் கொத்து புரோட்டோ போடுவதுபோல காதலை பிய்த்து எடுக்கிறார்கள். ஆனால் உருப்படியாக யாருமே ஒன்றையும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

முரட்டுத்தனமான ரவுடிக்கு எதற்குக் காதல்..? அவனைக் காதலிக்கும் பெண்ணுக்காச்சும் அவனுடன் குடும்பம் நடத்த முடியுமா என்று தோன்ற வேண்டாமா..? நாயகன் என்ன வேலை செய்கிறார்..? அவருக்கு யார் மாதாமாதம் படியளக்கிறார்கள் என்பதையெல்லாம் சொல்லாமல் வெறுமனே நாயகியுடன் சுற்றிக் கொண்டேயிருப்பதுதான் நாயகனின் வேலை என்று காட்டினால் எப்படிங்க இயக்குநரே..?

இப்போதெல்லாம் ரவுடித்தனம் செய்பவர்களைத்தான் இளைஞிகள் காதலிக்கத் துணிகிறார்கள் என்கிற கான்செப்ட்டிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இது போன்ற ரவுடித்தனம் செய்பவர்களை ஹீரோவாக்கும் முயற்சியை என்றைக்கு தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் கைவிடுவார்களோ தெரியவில்லையே..?

இப்போதுதான் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்களும், பேச்சுக்களும் முழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு திரைப்படத்தைக் கொணர்ந்தது நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

படத்தின் பின் பாதியில் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணை கட்டாயப்படுத்துவதும், கொலை செய்ய முயற்சிப்பதும், கொலை செய்தால்கூட பரவாயில்லை என்று படத்தின் இயக்குநரே பைத்தியக்கார வேடத்தில் வந்து சொல்வதையெல்லாம் பார்த்தால் பொள்ளாச்சியில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதுமே அந்தக் கொடூரம் நடந்தால்கூட நமது ஆட்கள் திருந்த மாட்டார்கள் என்பதையே காட்டுகிறது.

சிகரெட், குடியில்லாமல் இருந்த நாயகனை படத்தின் இயக்குநரே பைத்தியக்காரனாக வந்து “கஞ்சா அடிக்க வைத்து, பெண்களே இப்படித்தான்.. இவளுகளையெல்லாம் வெட்டணும்…” என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பதும், கொலை வெறியை ஏற்றிவிடுவதும் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..?

படத்தில் மிகப் பெரிய தவறே.. ஷில்பா தன்னுடைய நிச்சயத்தார்த்தம் நடப்பதற்கு ஒத்துக் கொள்வதுதான். ஒரு பக்கம் தான் காதலிக்கும் நபர் காத்திருக்க.. குடும்பத்தினரின் ஆசைக்காக வேறொரு நபருடன் கல்யாணத்திற்கு தயாராகும் சூழலை எந்தப் பெண்தான் விரும்புவாள்.. அதிலும் மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பெண்.. இது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு போய் முடியும் என்பது தெரியாதா என்ன..?

திரைக்கதை கெட்டதற்குக் காரணம் இந்தக் காட்சியமைப்புகள்தான். இதை மாற்றி நிச்சயம் செய்யும் நேரத்தில் ஹரிஷ் அங்கு வந்து தகராறு செய்வதைப் போல செய்து “இப்படியொரு முரடனுடன்தான் உனக்கு கல்யாண வாழ்க்கை வேண்டுமா?” என்று ஷில்பாவின் பெற்றோர்கள் கேட்டு பிரச்சினை செய்வதை போல திரைக்கதையை மாற்றியிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்.

காதலர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் சகஜம்தான். என்றாலும் அது யாரால், எதற்காக உருவானது என்பதை ஈகோத்தனம் இல்லாமல் இருவருமே புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து போனால்தான் இந்தக் காதல் திருமணம்வரையிலும் வரும். இல்லையேல் சீக்கிரமே காணாமல் போகும். உடனேயே அடுத்தக்  காதலை நோக்கி ஓடினால் இதிலென்ன காதல் இருக்கிறது.. பார்ப்போரையெல்லாம் காதலித்துக் கொண்டேயிருப்பதற்குப் பெயர் காதல் இல்லை. கண்றாவி..!

இந்தப் படத்தைப் பார்க்கும் காதலர்கள் தங்களது காதல் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயலாற்றினால் அவர்கள் கல்யாணத்தையும் தொட்டுவிடலாம்..!

கடைசியில் ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணி’யும் ஜோக்கராகிவிட்டார்கள்..!

Our Score