full screen background image

நெடு நீர் – சினிமா விமர்சனம்

நெடு நீர் – சினிமா விமர்சனம்

கெவின் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எஸ்.பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராஜ் கிருஷ்(கருப்பு), இந்துஜா(அமுதா) மா.சத்யா முருகன்(அண்ணாச்சி), மதுரை மோகன் (சத்தியமூர்த்தி), எஸ்.கே.மின்னல் ராஜா (மண்டமாரி) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கே.கே.பத்மநாபன், ஒளிப்பதிவு – லெனின் சந்திரசேகரன், இசை – ஹிதேஷ் முருகவேல், படத் தொகுப்பு – எம்.எஸ்.ஆர்.ராஜவேல், கலை இயக்கம் – கல்லை தேவா, நடன  இயக்கம் – ராகவா அர்ஜூன், சண்டை இயக்கம் – ஹரிமுருகன், உடைகள் – நாகூர் கனி, பாடல்கள் – பழனி பாரதி, மெய்யழகன், பத்திரிகை தொடர்பு – வெங்கட்.

ஒரு பதின்ம பருவ சிறுவனும், அவனது தோழியான சிறுமியும் சந்தர்ப்ப சூழலால் ஊரைவிட்டு தப்பியோடுகின்றனர். தொடர்ந்து பயணிக்கும்போது நடுவழியில் அவர்கள் இருவரும் பிரிய நேர்கிறது.

அந்த சிறுவன் எட்டாண்டுகள் கழித்து இளைஞனாகி ஒரு ஆபத்தான சூழலில் உள்ளூர் தாதாவான அண்ணாச்சியை சாவில் இருந்து காப்பாற்றுகிறான். மனம் நெகிழ்ந்து போன அண்ணாச்சி, அவனை தன் மகனாகத் தத்தெடுத்துக் கொள்கிறார்.

அண்ணாச்சிக்காக பல்வேறு குற்றச் செயல்களை தொடர்ந்து செய்யும் நாயகனான கருப்பு, ஒரு கட்டத்தில் அண்ணாச்சியின் மைத்துனர் மீதே கை வைத்துவிட அண்ணாச்சியாலேயே வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.

தொடர்ந்து அண்ணாச்சிக்கு மாற்றாக அவர் செய்து வரும் கள்ளக் கடத்தல் தொழிலை செய்யத் துவங்க முதல்முறையிலேயே போலீஸில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறான் கருப்பு. ஜெயிலில் அண்ணாச்சியை போட வேண்டும் என்று ஆசை காட்டும் ஒருவனை கொலை செய்துவிட்டு கொலையாளியாகவும் மாறுகிறான் கருப்பு.

வெளியில் வந்தவுடன் எதிரிகளால் தாக்கப்பட இந்த நேரத்தில்தான் 8 வருடங்களுக்கு முன்பு தான் தொலைத்த பால்ய காலத்து தோழியை சந்திக்கிறான் கருப்பு. மீண்டும் அவர்களது நட்பு வளர, அது காதலாகிறது.

இந்தக் காதல் கல்யாணத்தில் நிற்கும்போது எப்போதோ செய்த ஒரு கொலையின் பழி நீக்கும் சம்பவத்தில் கருப்பு சிக்க நேர்கிறது. இந்த சிக்கலில் இருந்து கருப்பு தப்பித்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை. அதில் தப்பித்தானா.. இல்லையா.. அண்ணாச்சி என்னவானார்.. என்பதெல்லாம் படத்தின் மீதமான திரைக்கதை.

முழுக்க, முழுக்க கடலூர் துறைமுகப் பகுதிகளிலேயே இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கிறார்கள். துறைமுகத்தை மையப்படுத்திதான் கதையும் அமைந்துள்ளது.

நாயகனாக நடித்திருக்கும் ராஜ் கிரீஷூக்கு இது முதல் படம் என்றாலும் சரியான இயக்குநரிடம் சிக்கியிருப்பதால் வெகுவாக ரசிக்கப்படும் அளவுக்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

கருப்புவாக சண்டை காட்சிகளில் காட்டும் லாவகமும், அண்ணாச்சியிடம் காட்டும் பக்தியும், காதலியிடம் காட்டும் அன்பும், பாசமும் வாழ்வதற்கு ஆசையுள்ள ஒரு சராசரி இளைஞனாகத்தான் இந்த ராஜ் கிரீஷ் நம் கண் முன்னே காட்டப்பட்டிருக்கிறார்.

அண்ணாச்சியாக நடித்தவரும் மிகச் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். தனது இறுக்கமான முகத்திலேயே உயிர் பயத்தைக் காட்டும்போதும், தன்னைக் காப்பாற்றியவனை அரவணைக்கும்போதும், தன் மகனே ஆனாலும் துரோகம் செய்தவனை விரட்டியடிப்பதும்.. துரத்திவிட்டவன் என்றாலும் அவனது உயிருக்கு ஆபத்து என்றவுடன் ஓடி வந்து காப்பாற்றுவதுமாய் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அண்ணாச்சியாய் நடித்திருக்கும் சத்யா முருகன்.

காதலியாய் நடித்திருக்கும் இந்துஜா முற்றிலும் புதிய முகம். சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் காட்டப்பட வேண்டியவர். ஆனால் நாயகியாகவே நடித்துள்ளார். சினிமா நடிப்பென்று இல்லாமல் வெகு இயல்பாக தனக்கு வந்ததை நடிப்பாகக் காண்பித்திருக்கிறார் பாராட்டுக்கள்.

அண்ணாச்சியின் உதவியாளராக நடித்திருக்கும் அந்த மீசை பெரியவரும் ஒரு கணம் நம்மை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். அவருடைய இறுதிக் காட்சியில் அவர் காட்டும் ஆக்சன்களும், வலியில்லாமல் சாகணும் என்ற விருப்பமும் நம்மை என்னவோ செய்கிறது. இப்படி படம் நெடுகிலும் அனைத்துக் கதாப்பாத்திரங்களுமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் இது சின்ன பட்ஜெட் படம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு மட்டுமே சுமார் ரகம். மற்றபடி நடன இயக்கம், சண்டை இயக்கமெல்லாம் ஏ ஒன் ரகமாகப் பதிவாகியுள்ளது.

நான்கு பாடல்களுமே ஜில்லென்ற ரகம். காதில் நுழைந்து இதயத்தைத் தொடும் வரிகள். கூடவே பாடவும் வைக்கின்றன. பாடல் காட்சிகளோ அதற்கும் மேல்.. அத்தனை மாண்டேஜ் காட்சிகளும் மிகச் சிறப்பு.

‘காதலியே காதலியே’, ‘நேற்று பார்த்த நம் காதல்’ ஆகிய மெலடிகள் காதலர்களையும், காதலிகளையும் நினைத்துப் பார்க்க வைக்கின்றன. ‘லைபே ஒரு லெஸனு.. பயப்படாம லிஸனு’.. பாடல் கானா வரிசையில் இடம் பிடித்துவிட்டது. ‘ஏராளம் தாராளம் என் அழகு’ பாடலில், நடனமும், படமாக்கலும் அழகோ அழகு..!

ஒட்டு மொத்தமாய் படம் ஒருவித போதையைத் தருகிறது. இயக்கத்தில் சிறப்பு என்றே சொல்ல வைக்கிறது. மெயின் ஸ்டிரீம் படங்களுடன் போட்டி போடுவதைப் போன்ற கச்சிதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். பெரிய பட்ஜெட் நாயகர்கள் நடித்திருந்தால் படம் நிச்சயமாக வேற லெவலுக்குப் பேசப்பட்டிருக்கும்..!

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்..!

RATING : 3.5 / 5

Our Score