இந்தப் படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் விஷால். சுனைனா, ரமணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், முனீஸ்காந்த், ‘தலைவாசல்’ விஜய், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், பாலகிருஷ்ணா தோட்டா, இசை – யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, கார்த்திக் நேத்ரா, துரை, உடைகள் – வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெயின், படத் தொகுப்பு – N.B.Srikhanth, வசனம் – பொன்.பார்த்திபன், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், அஜய், கதை, திரைக்கதை, இயக்கம் – ஆர்.வினோத் குமார்.
“பாஸ் நீங்க நடிக்க வேண்டாம்; அடிச்சா மட்டும் போதும்” என்று பைனான்ஸியர்களும், பைனான்ஸியர்களால் தயாரிப்பாளர்களாக ஆக்கப்படுபவர்களஉம் விஷாலிடம் ஸ்ட்ராங்காகச் சொல்லியிருக்கிறார்கள்போல…!
அவரும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி தனக்கு நடிக்க வரும் என்பதையே மறந்து படத்திற்குப் படம் 100, 200 பைட்டர்களையாவது அடித்துக் கொண்டே இருக்கிறார். இந்த ‘லத்தி’யிலும் அதே கதைதான்.
அதே சமயம் விஷாலுக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். இதற்கு முந்தைய படங்களில் நாம் பார்த்த விஷாலுக்கும், இந்தப் படத்தில் இருக்கும் விஷாலுக்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன.
போலீஸ் ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என்று பல்வேறு காவல்துறையினரின் கதாபாத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில்தான் முதல்முறையாக கான்ஸ்டபிள் ஒருவரின் வாழ்க்கைக் கதையைப் பார்க்கிறோம்.
‘முருகானந்தம்’ என்ற விஷால் சென்னையில் நீலாங்கரை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். அழகான மனைவி சுனைனா. ஒரே மகன் மாஸ்டர் ராகவ். பையன் பள்ளியில் படிக்கிறான். மனைவி நர்ஸாக வேலை செய்கிறார்.
போலீஸ் பணியில் அதிக ஈர்ப்புடன் இருக்கும் விஷாலுக்கு ‘லத்தி’யை சுழற்றிவதில் அலாதி இன்பம். ஒரு முறை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கும் ஒருவனை லாக்கப்பில் வைத்து நையப்புடைக்கிறார் விஷால். உண்மையில் அந்தச் சம்பவத்தில் அவன் சம்பந்தப்படவில்லை என்பது பின்புதான் தெரிய வருகிறது.
விஷாலால் தாக்கப்பட்ட அந்த இளைஞன் மனித உரிமை கமிஷனில் முறையிட.. விஷால் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனித உரிமை கமிஷன் உத்தரவிடுகிறது. இதனால் விஷால் சஸ்பென்டாகிறார்.
சஸ்பெண்டாகி 6 மாதங்களாகிவிட்டதால் மீண்டும் டூட்டியில் சேர்வதற்காக மிகுந்த பிரயத்தனப்படுகிறார் விஷால். கடைசியில் உதவி ஆணையரான ‘தலைவாசல்’ விஜய்யின் சிபாரிசில் சென்னை அடையாறு உதவி ஆணையரான பிரபுவின் உதவியோடு, அதே நீலாங்கரை ஸ்டேஷனில் மீண்டும் பணியில் சேர்கிறார் விஷால்.
இந்த நேரத்தில் மாநிலத்திலேயே பெரிய தாதாவான சுறாவின் மகனான வெள்ளையன் பிரபுவின் மகளிடத்தில் அசிங்கமாக நடந்து கொள்கிறான். வெள்ளையனுக்கும் அமைச்சரின் மகளுக்கும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் போலீஸ் உயரதிகாரி வெள்ளையன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிரபுவைத் தடுக்கிறார்.
இந்த நேரத்தில் வெள்ளையன் தனியாக பிரபுவிடம் மாட்டிக் கொள்ள… பிரபு விஷாலை அழைத்து வெள்ளையனை ‘லத்தி’யால் வெளுக்கும்படி உத்தரவிடுகிறார். விஷாலும் தனக்கு மீண்டும் போஸ்டிங் போட்டுக் கொடுத்தவராச்சே என்ற டிபார்ட்மெண்ட் பாசத்தில் வெள்ளையனை வெளுத்துக் கட்டிவிடுகிறார்.
மறுநாள் குப்பைக் கூளங்களுக்கிடையே நிர்வாணமாகக் கிடக்கும் வெள்ளையன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்கிறான். தன்னை அடித்துத் துவைத்தவனை தானே தன் கையால் கொலை செய்ய வேண்டும் என்று துடியாய் துடிக்கிறான்.
வெள்ளையனின் ஆட்கள் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குள்ளேயே தங்களது பாஸை அடித்தவன் யார் என்று தேடுகிறார்கள். இன்னொரு பக்கம் பிரபு ஓய்வு பெற்றுவிட்டு தனது மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா போய்விடுகிறார். விஷாலோ இது எதுவுமே தெரியாமல் தனது கடமையில் கண்ணும், கருத்துமாய் இருக்கிறார்.
இறுதியில் விஷாலின் கதி என்னவாகிறது..? வெள்ளையன் என்னவானான்..? அவனது சபதம் என்னவானது என்பதுதான் இந்த ‘லத்தி’ படத்தின் சுவையான திரைக்கதை.
விஷாலுக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். இதற்கு முன் நாம் பார்த்திருந்த விஷாலுக்கும், இந்த ‘முருகானந்தம்’ என்ற விஷாலுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் தென்படுகின்றன.
ஒரு அப்பாவி கான்ஸ்டபிளின் குணாதிசயத்தை விஷால் நியாயப்படுத்துகிறார். அதே சமயம் தனது குடும்பத்தின் மீது அக்கறையுள்ளவராகவும் காட்டப்பட்டிருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் விஷாலின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பு பாராட்டக்குரியது. நிச்சயமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது விஷால் நிறையவே அடிபட்டிருக்க வேண்டும். அத்தனையையும் தாங்கிக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார் விஷால்.
மேலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் தன் மகனைத் தேடி அலையும் விஷாலின் அந்த 10 நிமிட நடிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகவும் புதியது. விஷாலின் உணர்ச்சிகரமான அந்த நடிப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சுனைனா அன்பான மனைவியாக அதே சமயம் அறிவுறுத்தும் தோழியாகவும் நடித்திருக்கிறார். விஷாலின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் லிரிஷ் ராகவ்வை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். க்ளைமாக்ஸ் காட்சிகளில் பையனை வைத்து எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை..! தயவு செய்து இனிமேலாவது சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு வன்முறைக் காட்சிகளை படமாக்காதீர்கள் இயக்குநர்களே!!!
வெள்ளையனாக நடித்திருக்கும் ரமணா, தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தோற்றம் முதன்முதலாகக் காட்டப்படும்போது கொடுக்கப்படும் பில்டப்பும், பின்னணி இசையும் அசத்தல்..!
பிரபு, தலைவாசல் விஜய், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், முனிஷ்காந்த் மற்றும் ரமணாவின் அப்பாவாக நடித்திருக்கும் மலையாள நடிகர் என்று படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையைக் காட்டிலும் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோவாக சண்டை இயக்குநர் பீட்டர் ஹெயினை உறுதியாகச் சொல்லலாம். அப்படியொரு மிரட்டலான சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் 80 சதவிகிதம் சண்டை காட்சிகள்தான். ஆனால் அதையும் போரடிக்காதவகையில் திரைக்கதைக்கு ஏற்றாற்போல் அமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
மேலும் பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளில் பீட்டர் ஹெயினின் எண்ணத்தை, இயக்கத்தை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள். இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக இணைந்திருக்கும் படத், தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் தனது சிறப்பான தொகுப்புப் பணியினால் ஹாலிவுட் ஸ்டைல் படம் என்ற பெயரையும் சண்டை காட்சிகளின் மூலமாகப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த ‘லத்தி’ படம் ஒரு நேர்மையான போலீஸ்காரனுக்கும், கொடூரமான வில்லனுக்கும் இடையிலான வழக்கமான போலீஸ் கதைதான். காவல்துறையின் கடைநிலை ஊழியர்களான கான்ஸ்டபிள்கள் படும் கஷ்டங்களை தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இரண்டாம் பாதி முழுக்க, முழுக்க ஆக்ஷன் சீக்வென்ஸ்களுடன் செல்கிறது. ஆனால் அதில் கொஞ்சமும் லாஜிக் இல்லை என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.
எத்தனை பேர் வருவார்கள்.. என்ன ஆயுதம் கொண்டு வருவார்கள் என்பதெல்லாம் தெரியாத நிலையில் அவர்களையெல்லாம் எதிர்கொள்ள அந்தக் கட்டிடத்தில் விஷால் செய்திருக்கும் செட்டப்புகள் ஓவர் கான்பிடெண்ட்டோ என்று சொல்லத் தோன்றுகிறது.
அதேபோல் துப்பாக்கிளை வைத்து ரவுடிகளைத் தீர்த்துக் கட்டுவது என்பது கொஞ்சம் டூ மச்சான திரைக்கதைதான். அந்தக் கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க வைக்கிறார் விஷால். இந்த சப்தம் வெளியில் கேட்காதா என்ன..? ரோட்டில் இருந்து பார்த்தாலே கட்டிடம் முழுமையாகத் தெரியும் என்று சில காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள். அதே கட்டிடத்தில் தீ எரிந்தால் சாலையில் பயணிக்கும் யாரும் பார்க்க மாட்டார்களா என்ன..?
ஸ்டேஷனில் முனீஸ்காந்திடம் சொல்லிவிட்டுத்தானே விஷால் அந்தக் கட்டிடத்திற்கு சென்றிருக்கிறார். சுனைனா விஷாலை காணவில்லை என்று சொன்னவுடனேயே காவலர்கள் டீம் அந்தக் கட்டிடத்திற்கு வந்திருக்கலாமே..? வராமல் சுனைனாவிடம் பொய் சொல்லி அவரைத் திருப்பி அனுப்புவதேன்..?
மனைவி, மகனுடன் நிம்மதியாக வாழ விரும்பும் விஷால் போலீஸ் ஸ்டேஷனின் ஸ்டோர் ரூமில் இருந்து பல ஆயுதங்களைக் கடத்திச் செல்வதெல்லாம் ஏற்புடைய கதையா இயக்குநரே..? மாட்டினால் ஜெயில்தான் என்பது அவருக்குத் தெரியாதா என்ன..?
ஆனாலும் முதல் பாதியில் பார்க்கும் காட்சிகளுக்கு இரண்டாம் பாதியில் வேறு ஒரு சஸ்பென்ஸ் கொடுத்திருக்கும் இயக்குநர் வினோத்தின் திரைக்கதை டிவிஸ்ட் சுவையானதுதான்.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகளும், சஸ்பென்ஸ் அடங்கிய திரைக்கதையும், குடும்பத்தை முன்னிறுத்தும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் சேர்ந்து இந்த ‘லத்தி’ படத்தை சரியான கமர்ஷியல் படம்தான் என்று சொல்ல வைக்கிறது.
RATING : 3.5 / 5









