“நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும்” – இயக்குநர் சுந்தர்.சி-யின் பெருமிதம்..!

“நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும்” – இயக்குநர் சுந்தர்.சி-யின் பெருமிதம்..!

அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி தயாரித்து வரும் திரைப்படம் ‘நட்பே துணை’.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில், நாயகன் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, நாயகி அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன் மற்றும் தயாரிப்பாளர் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1N6A0122

இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் உத்தமன் பேசும்போது, “பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று. சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம்…” என்றார்.

1N6A0146

கதாநாயகி அனகா பேசும்போது, “தமிழில் இது என்னுடைய முதல் படம். படத்தில் ஒரு ஹாக்கி வீராங்கனையாக நடித்திருக்கிறேன். ஆதியுடன் நடித்ததில் மகிழ்ச்சி. இசையைத் தாண்டி அவர் நல்ல நடிகரும்கூட என்பதை ‘மீசைய முறுக்கு’ படம் நிரூபித்தது…” என்றார்.

Director - PARTIBAN DESINGU

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு பேசும்போது, “இப்படத்தின் கதைக் கருவாக ஹாக்கி விளையாட்டினை தேர்ந்தெடுத்திருக்கிறோம். புதுமையான களமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாண்டிசேரியைத் தேர்ந்தெடுத்தோம்.

படத்தில் நடித்த நடிகர், நடிகையருக்கு ஹாக்கி பயிற்சிக்காக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3,000 ரூபாய் கட்டணம் கொடுத்து பயிற்சியளித்தோம். சாதாரண களத்தில் விளையாடுவதைவிட ஹாக்கி டர்ஃபில் விளையாடுவது மிகவும் கடினம். நிஜ வீரர்களுக்கே தொடர்ந்து விளையாடுவது இயலாது.

அப்படி இருக்கையில் இவர்கள் அனைவரும் நாள் முழுக்க இடைவிடாமல் நடித்தார்கள். தினமும் ஒருவர் மயங்கி விழுவார். ஆதிக்கு கழுத்தில் அடிபட்டும் மனம் தளராமல் சிறிது இடைவெளியில் மீண்டும் நடித்து முடித்தார். மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களுடைய சொந்த படமாக நினைத்து பணியாற்றினார்கள். 

பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் என்றாலே மது அருந்துவார்கள், புகைபிடிப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் நிலவும். ஆனால் இப்படத்தைப் பார்த்தால் பாண்டிச்சேரியில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் நிச்சயமாக பெருமைப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்களை உயர்வாகக் காட்டியிருக்கிறோம்..” என்றார்.

hiphop thamizha

நாயகன் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது, அதிக வாய் பேசிய என்னை ‘ஆம்பள’யில் அறிமுகப்படுத்தி, ‘மீசைய முறுக்கு’ படத்தில் என் கனவை நனவாக்கி ‘நட்பே துணை’யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.

இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார். ‘மீசைய முறுக்கு’ படத்தில் இருந்த மொத்தக் குழுவும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.

தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள். 

பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார்.

ஒருநாள் ‘ஹாக்கி ஸ்டிக்’ என்று கூறுவதற்கு பதில் ‘பேட்’ என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக  பயிற்சி மேற்கொண்டார். இப்படத்தின் கடைசி 35 நிமிடங்களில் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும்.

‘மீசைய முறுக்கு’ படத்தின் வெளியீட்டிருக்காக கோயம்புத்தூருக்கு சென்றபோது ‘எரும சாணி’ விஜய்யின் அறிமுகம் கிடைத்தது. கரு.பழனியப்பன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும்.

இந்தப் படத்தில் மது, புகை இல்லாமல் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்கக் கூடிய படமாக இது இருக்கும்…” என்றார். 

1N6A0105

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “இணையத்தளத்தில் பார்த்திருக்கும் பலரை இன்றுதான் நேரில் பார்க்கிறேன்.  ‘எரும சாணி’ விஜய்யை எனக்கு பிடிக்கும். நகைச்சுவையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரை கதாநாயகனாக உருவாகிவிடுவார்கள். சிறிது காலத்திற்கு நகைச்சுவையில் வெற்றி பெற்று, அதன் பிறகு நாயகனாகலாம்.

ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும்போது நாயகி அனகா தெருவோரத்தில் தீவிரமாக ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினேன்.

என் மனைவியிடம் ‘மீசைய முறுக்கு’ படம் வெற்றியடைந்தால் ஆதிக்கு வெளி வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே வெளி வாய்ப்புகள் வந்தன.

ஒரு நாள் படப்பிடிப்பிற்காக நான் ஹைதராபாத்தில் இருந்தபோது, ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ‘ஒரு கதை இருக்கிறது. கேளுங்கள்’ என்றார். கதையைக் கேட்கும்போதே மிகவும் பிடித்திருந்தது. என்னால்தான் கருத்து சொல்லக் கூடிய படங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆனால் ஆதியாவது இதைச் செய்ததால் இப்படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய நல்ல படம் எதுவும் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றி நல்லவிதமாகக் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன்…” என்றார்.

இறுதியாக, கலைமாமணி விருது பெற்ற பத்திரிகையாளர் மணவை பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு படக் குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Our Score