பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ – சிறந்த படமாக தேர்வு..!

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ – சிறந்த படமாக தேர்வு..!

தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்த் எஸ்.சாய் தயாரித்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படமான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், 'மயக்கம் என்ன' சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து  மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பின்னணி இசையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் ஏற்கெனவே ஸ்வீடனில் வருடந்தோறும் நடைபெறும் கோட்பெர்க் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்டது. அதேபோல் புனேவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், கேரளாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

director vasanth-film festival

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசினைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சென்ற வாரம் பெங்களூரில் நடைபெற்ற 11-வது சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியப் பிரிவில் இத்திரைப்படமும் போட்டியிட்டது.

முடிவில் கலந்து கொண்ட படங்களில் சிறந்த திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான பரிசினை படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான இயக்குநர் சாய் எஸ்.வசந்த் பெற்றுக் கொண்டார்.