full screen background image

நானும் ரெளடிதான் – சினிமா விமர்சனம்

நானும் ரெளடிதான் – சினிமா விமர்சனம்

ஏற்கெனவே வந்த கதைதான். காதலிக்காக கொலை செய்யத் துணியும் காதலன் பற்றிய படம். ஆனால் இப்போதைய காலக்கட்டத்திற்கேற்றவாறு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். கூடவே கொஞ்சம் காம நெடி கலந்த காமெடியும்..!

பாண்டிச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான மீனா குமாரி என்கிற ராதிகாவின் மகன் விஜய் சேதுபதி. சின்ன வயதில் இருந்தே ரவுடியாக வேண்டும் என்று ஆசைப்படுபவர். போலீஸ், ரவுடி இருவரில் போலீஸ்தான் பெரிய தாதா என்கிற நினைப்பில் தானும் ஒரு தாதாவாகிவிட வேண்டும் என்கிற ஆசையில் தனது தாயின் போலீஸ் ஆசைக்கு இணங்குவதுபோல் நடித்தபடியே தாதா வேலையையும் செய்து வருகிறார்.

இன்ஸ்பெக்டர் அழகம்பெருமாளின் மகளான நயன்தாராவை ஒரு நாள் தன் தாயைப் பார்க்க வந்த இடத்தில் சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தவுடனேயே வழக்கமான சினிமாத்தனம்போல் அவர் பின்னாலேயே ஓடுகிறார். விரட்டுகிறார். செல்போனை ரிப்பேருக்குக் கொடுத்துவிட்டு ‘சரி செய்து தருகிறேன்’ என்று சொல்லியே ஏமாற்றுகிறார்.

நயன்தாராவுக்கு காது கேட்காது. ஒரு குண்டு வெடிப்பில் தனது தாயை இழந்தவர். அந்தக் குண்டுவெடிப்பினால்தான் அவருக்கு காது கேட்கும் சக்தியும் பறி போயிருக்கிறது. ஆனால் உதட்டசைவை வைத்து பேசுவதைப் புரிந்து கொண்டு பேசுவார்.

அவரது தாயின் சாவுக்குக் காரணமான குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியது அதே பாண்டிச்சேரியில் இருந்த கிள்ளிவளவனான பார்த்திபன். இப்போது ரவுடிகளின் அடுத்தக் கட்ட பரிமாண வளர்ச்சியான அரசியலிலும் தலையெடுத்து நிற்கிறார்.

நயன்தாராவின் அப்பா இன்னும் சில நாட்களில் ரிட்டையர்டாகப் போகிறார். பாண்டிச்சேரிக்கு மகளுடன் வந்த இடத்தில்.. அப்பாவுக்காக பீர் வாங்க ஒயின்ஷாப்புக்கு போகும் நயன்தாரா, அங்கே கடையின் உள்ளே பார்த்திபன் இருப்பதைப் பார்த்துவிட்டு வந்து அப்பாவிடம் சொல்கிறார்.

அப்பா தனது மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மனைவியின் மரணத்திற்கு பழி வாங்க பார்த்திபனை கொலை செய்யப் போகிறார். ஆனால் குறி தவறுகிறது. பார்த்திபனின் ஆட்கள் அழகம்பெருமாலை கொலை செய்கிறார்கள்.

இந்தக் கொலையை முதலில் விஜய் சேதுபதி நயன்தாராவிடம் சொல்லாமல் விட்டுவிட.. கடைசியில் ராதிகாவால் நயன்தாராவுக்கு தெரிய வருகிறது. விஜய் சேதுபதி இந்த நேரத்தில் நயன்தாராவை காதல் என்று சொல்லி நெருங்கி வர.. “எனது அப்பா, அம்மாவை கொலை செய்த பார்த்திபனை கொலை செய்தால்தான் நான் உன்னைக் காதலிப்பேன். கல்யாணம் செய்து கொள்வேன்…” என்கிறார் நயன்தாரா.

அடுத்து விஜய் சேதுபதி என்ன செய்தார் என்பதுதான் இடைவேளைக்கு பின்னான கதை..!

படம் நல்லாயிருக்கு.. காமெடியா இருக்கு.. விட்டுவிட்டு வரும் காமெடிகள் படத்தை நகர்த்துது.. விஜய் சேதுபதி நல்லா நடிச்சிருக்காரு. நயன்தாரா தனது பெஸ்ட்டான நடிப்பை இதுல காட்டியிருக்காரு. அனிருத்தின் இசை வித்தியாசமா இருக்கு. மொத்தத்துல படம் சூப்பர் என்றெல்லம் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இதில் முக்கால்வாசி உண்மைதான். நயன்தாராவுக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம் என்று சொல்வதில் பொய்யில்லை. இத்தனையாண்டுகளாகியும், இத்தனை வயதாகியும் அழகு கூடிக் கொண்டே செல்கிறது நயனுக்கு.. நயனின் நடிப்பு இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். தனது அப்பாவின் மரணச் செய்தி கேட்டுவிட்டு நடுரோட்டில் அழுதபடியே நடந்து வரும் அந்த நீண்ட ஷாட் அற்புதம் என்றே சொல்லலாம்..!

விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் நீண்ட நாள் கழித்துக் கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. திரைக்கதையைத் தவிர்த்துவிட்டு இவருடைய நடிப்பென்று பார்த்தால் பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பினாலேயே நகைச்சுவையை கொண்டு வந்திருக்கிறார். பல காட்சிகளில் மோசமான திரைக்கதையினால் எரிச்சலை ஏற்படுத்தினாலும் நடிப்பு என்கிற வகையில் அது ஓகேதான்..

ராதிகா வழக்கம்போல.. சொல்லவே தேவையில்லை. உடை மட்டுமே லூஸாக இருந்ததே தவிர.. நடிப்பில் அப்படியேதான்.. போலீஸ் செலக்ஷன் இடத்தில் நின்று கொண்டு தனது மகனுக்காக கேன்வாஸ் செய்யும் இடத்தில் மிக இயல்பாக நகைச்சுவையை தெளித்துக் கொண்டே போகிறார். பக்காவான அம்மா..!

பாலாஜி இந்தப் படத்தில்தான் கொஞ்சம் நிதானமான கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். அது யாருய்யா இந்த ராகுல் தாத்தா என்று கேட்க வைத்திருக்கிறார் அவர். கூகிள் மேப்பில் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லும்போது திரையரங்கம் அதிர்கிறது.. நல்லதொரு கேரக்டர் ஸ்கெட்ச் இந்தத் தாத்தாவுக்கு..!

அதிரடி கலக்கல் பார்த்திபன்தான்.. “நீயெல்லாம் பழைய வில்லன்.. இப்போ நான்தான் இங்க புதிய வில்லன்..” என்று சொல்லி மன்சூரலிகானை ஓரம் கட்டுகிறார். தனது டிரேட் மார்க் குண்டூசி டயலாக்குகளால் பல இடங்களை ரசிக்க வைத்திருக்கிறார். பேபிக்காக தலைவரிடம் சீட்டு கேட்டு போராடும் காட்சியும், பேபியை தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு சீட்டை பெறும் சாமர்த்தியத்திலும் பார்த்திபனை ரசிக்கலாம்..! பார்த்திபனை கொலை செய்ய விஜய் சேதுபதி போடும் ஸ்கெட்ச்சும், அதே நேரம் மன்சூரலிகான் ஆட்கள் செய்யும் இடையூறும் கலகல..

இப்படி படத்தினை பற்றி ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் ‘பார்க்கலாம்’ என்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் சொல்ல வந்தவிதம் மிக கேவலமாக இருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

காதல் என்கிற ஒரு விஷயத்தைத் தவிர வேறு எதுவுமே தமிழ்ச் சினிமா ரசிகனிடத்தில் இல்லை என்றுதான் அனைத்து இயக்குநர்களும் இப்போதும் சிந்திக்கிறார்கள். இதை மீறி அவர்கள் வெளியில் வருவதே இல்லை.

இந்தக் காதல் என்ற உணர்வு பார்த்தவுடன் வருகிறது என்றுதான் அனைவருமே சொல்லிக் கொடுக்கிறார்கள். பார்த்தவுடன் வருவதா காதல்..? இதை காதலித்து மணமுடித்தவர்களுடன் கேட்டு, பேசிப் பார்த்தால் புரியும்..

காதலிக்காக காதலன் என்னவெல்லாம் செய்வான் என்பதையும் இந்த தமிழ்ச் சினிமாதான் சொல்லிக் கொடுத்தது. இப்போதும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லியிருப்பது போல இத்தனை கொடூரமாக இருக்கவே கூடாது..! முட்டாள்தனமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

எந்த மனுஷனாவது பெத்த அப்பன் செத்ததை மகளிடம் சொல்லாமல் ‘அவள் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை’ என்று சொல்வானா..? இது எவ்வளவு பெரிய மனித நேயமற்ற செயல்..? இந்த மனித நேயம்கூட இல்லாதவன் எப்படி ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியும்..? நல்ல மனிதனாக இருந்தால்தானே அவனையொரு நல்ல காதலன்.. உண்மையான காதலன் என்றே சொல்ல முடியும்.. திரைக்கதையின் மகா சொதப்பல் இதுதான்..

பாலாஜி மூலமாக ‘இது தவறு’ என்று திருப்பித் திருப்பி சொன்னாலும் ஹீரோயிஸ சினிமாவில் ஹீரோ என்ன சொல்கிறாரோ அதுதான் திரைப்படம் சொல்ல வரும் நீதி என்பது தமிழ்ச் சினிமாவுலகின் மரபு. அந்த வகையில் இத்திரைப்படம் சொல்லியிருக்கும் இந்த திரைக்கதை கேடுகெட்டத்தனம்..!

இன்னொன்று தான் காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் வந்திருக்கிறாள் என்று தேடி வரும் ஹீரோ, அந்த இடத்தில இடையூறு செய்யும் வில்லனின் கோரிக்கைக்காக ஒரு தடவை அவனை கட்டிப் பிடிக்கும்படி சொல்கிறாராம்..! இப்படி கேட்பதே தவறென்று இயக்குநருக்குத் தோணவில்லையா..? இந்த ஒரு வசனம் ஓராயிரம் கற்பழிப்பு காட்சிகளுக்கு சமமானது.. இதற்கும் ஹீரோ முதலில் சீரியஸாக ஒத்துக் கொண்டு ஹீரோயினிடம் சிபாரிசு வேறு செய்கிறார். கேவலமான காட்சியமைப்பு..!

இப்போதெல்லாம் படங்களில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் குறைந்து கொண்டே வருவதை நினைத்து சந்தோஷப்பட்ட வேளையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் அந்த நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டது. மறுபடியும்  வெட்கக்கேடான ஒரு விஷயத்தை தமிழ்த் திரையுலகில் புகுத்தி வெற்றி பெற வைத்துவிட்டது.

அதையும் இந்தப் படத்திலும் நிறைவேற்றியிருக்கிறார் இயக்குநர். ஹீரோயினுக்கு நிசமாவே காது கேட்காதா என்பதை சோதிக்க வேண்டி ஹீரோ இரண்டு கெட்ட வார்த்தைகளை சொல்லிவிட்டு இதைத் திருப்பிச் சொல்லும்படி கேட்கிறார். இதற்கு ஹீரோயின் நேரடியாக பதில் சொல்லாமல் “ரோஜா, பூமாலை” என்று பதில் சொல்லித் தப்பிக்கிறார். ச்சே.. என்ன அழகாக தமிழை வளர்க்கிறார்கள்..? இயக்குநருக்கு திருஷ்டி சுத்தி போடணும்..!

கிளைமாக்ஸில் ஹீரோயினே வில்லனிடம் ‘போடணும்’ என்று பேசுவது போன்று காட்சியும், வில்லன் அதற்கு நேரடி அர்த்தமே எடுத்து பதில் சொல்வதும்.. உச்சக்கட்ட ஆபாசம்..! ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் வாயில் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் பேச வைத்திருக்கும் இந்த இயக்குநருக்கு இந்தாண்டின் சிறந்த இயக்குநருக்கான விருதினை வழங்க வேண்டும். ஒரு பெண்.. அதிலும் ஒரு மாற்றுத் திறனாளி பெண் கேரக்டர் என்றாவது யோசித்திருக்க வேண்டாமா..?

இந்தப் படத்தின் இயக்குநரும், நயன்தாராவும் திருமணம் செய்து தம்பதிகளாகிவிட்டனர் என்று கோடம்பாக்கம் முழுக்க பேசிக் கொள்கிறார்கள். இது உண்மையெனில் தனது காதலி அல்லது தனது மனைவியை நடிப்புக்காகவே ஆனாலும் இப்படியொரு கேவலமான காட்சியில் தைரியமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் பரந்து பட்ட மனசுக்காக கோடானு கோடி தமிழ் ரசிகர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

டாஸ்மாக் சீன்களையே வைக்காதீங்கப்பா என்று மனித நேய ஆர்வலர்கள் கூப்பாடு போட்டு சொல்லி வரும் இந்த நேரத்திலும், பெத்த அப்பாவுக்காக மகளே டாஸ்மாக்கிற்கு போய் பீர் வாங்கி வரும் காட்சியை தைரியமாக வைத்திருக்கிறார் இயக்குநர். ‘சிறந்த சமூக சிந்தனையாளர்’ என்று ஒரு பட்டத்தையே அவருக்கு இந்த ஒரு காட்சிக்காகவே வழங்கலாம்.

இவைகள்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணங்களாக இயக்குநர் நினைத்தால், இந்தப் படத்தின் மூலம் கிடைக்கின்ற வசூல் மனிதக் கறியை கூறு போட்டு விற்று அந்தக் காசில் வாழ்வதற்கு சமமானது..! இதனாலேயே இந்தப் படத்தை சிறந்த, நல்ல படம் என்று சொல்ல முடியவில்லை. 

வருந்துகிறோம்..!

Our Score