‘நாய் சேகர்’ டைட்டில் வடிவேலுவுக்கு இல்லை..!

‘நாய் சேகர்’ டைட்டில் வடிவேலுவுக்கு இல்லை..!

நாய் சேகர்’ என்ற டைட்டில் வடிவேலுவுக்கு இல்லை என்றாகிவிட்டது.

வைகைப் புயல் வடிவேலு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் படங்களில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கவிருக்கும் முதல் படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கவிருக்கிறார். லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்தப் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்ற தலைப்புதான் வேண்டும் என்று சுராஜ் விரும்புகிறார். நடிகர் வடிவேலுவும் இதை ஆமோதித்தார். ஆனால் இதே தலைப்பில் வேறொரு படம் ஏற்கெனவே துவங்கி படமே முடிந்துவிட்டது.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்துள்ளனர். படத்தில் நகைச்சுவை நடிகரான சதீஷ் நாயகனாகவும், லாஸ்லியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஆனால் இந்த ‘நாய் சேகர்’ தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டது. வடிவேலுவே ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேசியும் படத்தின் பல காட்சிகளும், பல வசனங்களும் இந்த ‘நாய் சேகர்’ என்ற தலைப்புடன் சம்பந்தப்பட்டிருப்பதால் வேறு தலைப்பினை நாங்கள் வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனாலும் வடிவேலு மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஏனெனில் இந்த டைட்டிலே உருவாக்கியதே அவர்தான். அதனால்தான் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்கூட இந்தத் தலைப்பு என்னிடம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் வடிவேலு.

‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர்தான் இந்த நாய் சேகர். இந்தப் படத்தை இயக்கியவர் இதே இயக்குநர் சுராஜ்தான். ஆகவே தான் உருவாக்கிய பெயர் தனக்கே வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் இயக்குநர் சுராஜ்.

மேலும் அவசரம், அவசரமாக வடிவேலு பேய்களுடன் இருப்பதுபோல ஒரு டிஸைன் தயார் செய்து ‘நாய் சேகர்’ டைட்டில் வைத்து வெளியிட்டார்கள் இயக்குநர் சுராஜ் தரப்பினர்.

ஆனால் இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்பாக ‘நாய் சேகர்’ தலைப்பில் தங்களுடைய படத்தின் முதல் கட்ட போஸ்டரையே வெளியிட்டுவிட்டது.

ஆகவே, வடிவேலு-சுராஜ் கூட்டணி வேறு தலைப்பை தேட வேண்டியதுதான்..!

 
Our Score