இன்னும் தரமான பாடல்களைத் தருவேன் – நா.முத்துக்குமார் உறுதியளிக்கிறார்..!

இன்னும் தரமான பாடல்களைத் தருவேன் – நா.முத்துக்குமார் உறுதியளிக்கிறார்..!

இயக்குநர் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதை அறிவீர்கள். அதே படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமாருக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

இத்தருணத்தில் பெரிதும் மகிழ்ந்திருக்கும் நா.முத்துக்குமார்  தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம்.

உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள்  அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள்.

‘தங்க மீன்கள்’ திரைப்படத்தில் நான் எழுதிய ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக ‘2013-ம் ஆண்டிற்கான  சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது’ எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Thanga-Meengal-Movie-first-look-poster

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.

தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் ‘தங்க மீன்கள்’ இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத் தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீசங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

மீண்டும்  உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.

அன்புடன்

நா.முத்துக்குமார்

Baby Sadhana in Thanga Meengal Tamil Movie Stills

ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள் :

பல்லவி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் !

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்!  – அதில்

ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்

பாஷைகள் எதுவும் தேவையில்லை!

சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்

மலையின் அழகோ தாங்கவில்லை!

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி

அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

சரணம் – 1

தூரத்து மரங்கள் பார்க்குதடி !

தேவதை இவளா? கேட்குதடி !

தன்னிலை மறந்தே பூக்குதடி!

காற்றினில் வாசம் தூக்குதடி!

அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?

உனது புன்னகை போதுமடி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி !

 சரணம் – 2

உன் முகம் பார்த்தால் தோன்றுதடி !

வானத்து நிலவு சின்னதடி!

மேகத்தில் ஒளிந்தே பார்க்குதடி!

உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி!

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து

வீட்டிற்கு அனுப்பு நல்லபடி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

 

Our Score