பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது..!

பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது..!

இரண்டு முறை தேசிய விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.  அவருக்கு வயது 41.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டார். அதற்காக சென்னையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்தன. நேற்று காலை 10.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே அவர் மரணமடைந்தார்.

na.muthukumar

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் தமிழ் திரையுலகத்தில் கால் பதித்தார். முதலில் கவிஞர் அறிவுமதியிடம் சில காலம் உதவியாளராக இருந்தார். பின்பு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்து, 4 வருடங்கள் அவரிடம் பணியாற்றினார்.

இயக்குநர் சீமானின் ’வீர நடை’ திரைப்படத்தில்தான் நா.முத்துக்குமார் பாடலாசிரியராக அறிமுகமானார். முத்துக்குமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 1,500- க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக 2012-ம் ஆண்டில் மட்டும் 103 பாடல்களை எழுதி உள்ளார். கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமானார். 

‘சாமி’, ‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘தீபாவளி’, ‘புதுப்பேட்டை’, ‘ 7 ஜி ரெயின்போ காலனி’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘அங்காடி தெரு’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’, ‘தெய்வத் திருமகள்’, ‘தங்க மீன்கள்’, ‘சைவம்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை. 

‘திருமலை’ படத்தில் இடம் பெற்ற ‘அழகூரில் பூத்தவளே’, ‘வெயில்’ படத்தில் இடம் பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘பல்லெலக்கா’, ‘கஜினி’ படத்தில் இடம் பெற்ற ‘சுட்டும் விழி சுடரே’, ‘அங்காடி தெரு’ படத்தில் இடம் பெற்ற ‘உன் பேரை சொல்லும்போதே’ ‘பையா’ படத்தில் இடம் பெற்ற ‘துளித்துளி மழையாய் வந்தாளே’, ‘காதல்’ படத்தில் இடம் பெற்ற ‘உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்’ போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிமையான பாடல்களை எழுதியவர்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை ‘கஜினி’ படத்திற்காக 2005-ம் ஆண்டு பெற்றார். 4 முறை சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

Na-Muthukumar-wife

இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘சைவம்’ படத்தில் அவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சைவம் படத்தில் இடம்பெற்ற ‘அழகு... அழகு...’ பாடலுக்கும், ‘தங்க மீன்கள்’ படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்றவர்.

முத்துக்குமார் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ (கவிதைத் தொகுப்பு), ‘கிராமம் நகரம் மாநகரம்’, ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ (கவிதைத் தொகுப்பு), ‘அனா ஆவண்ணா’, ‘என்னை சந்திக்க கனவில் வராதே’, ‘சில்க் சிட்டி’, ‘பால காண்டம்’, ‘குழந்தைகள் நிறைந்த வீடு’, ‘வேடிக்கை பார்ப்பவன்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

நா.முத்துக்குமாருக்கு தீபலஷ்மி என்ற மனைவியும் ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதம்) என்ற மகளும் உள்ளனர். 

நா.முத்துக்குமாரின் உடலுக்கு பெரும் திரளான திரையுலகத்தினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

na.muthukumar-2

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சங்கர், பாலா, தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராம், ஜனநாதன், விஜய், ராஜூ முருகன், வெங்கட் பிரபு, நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், பாண்டியராஜன், உதயநிதி ஸ்டாலின், விவேக், கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்கள் அறிவுமதி, சினேகன், விவேகா, யுகபாரதி, இசையமைப்பாளர்கள் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன்ஷங்கர் ராஜா, தினா, பின்னணி பாடகி சைந்தவி, பட அதிபர்கள் கேயார், ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நா.முத்துக்குமாரின் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பிறகு மாலை 6 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி ரோட்டிலுள்ள வேலங்காடு மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த மாதத் துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து சினிமாவின் சாதனயாளர்களை இழந்து வருவதால் தமிழ்த் திரையுலகத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.