வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரத்தில் மிரட்டியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’.
இந்த ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் குழுவிலும் தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் கை கோர்த்துள்ளனர்.
இப்படத்தின் துள்ளலான பாடல்களுக்கும், பிரம்மாண்ட பின்னணி இசைக்கும் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
கோபி அமர்நாத் தனது கேமரா மூலம் அசாத்திய ஒளியமைப்பில் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.
இந்த ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படத்தை குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் சரியான அளவில் கலந்த ஒரு பக்கா மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக (Mythological Fantasy Entertainer) தயாராகியுள்ளது.
சூப்பர் ஸ்டாரினி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்து நன்கு கல்லா கட்டிய வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், அந்தப் படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜியுடன் முரண்பட்டதால் அவரைத் தவிர்த்துவிட்டு அதே பெயரில் தயாரித்திருக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி கதை எழுதி, இயக்கியிருக்கிறார்.
படத்தின் தலைப்பு ‘மூக்குத்தி அம்மன்’ என்று இருந்தாலும் முதல் பாகத்திற்கும், இந்த இரண்டாம் பாகத்திற்கும் தலைப்பு தவிர வேறு எந்த வகையிலும் ஒற்றுமை இல்லை.
சென்னையில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சக்தி என்ற நயன்தாரா கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர். அதே சமயம் சோம்பேறியும்கூட! அதிகமான வேலைப்பளுவை சமாளிக்க முடியாமல் கோவில் திருவிழாவில் சாமி வந்தது போல் ஆடி வேலையில் ஓ.பி. அடிக்கும் அளவுக்கு வித்தகர்.
இவருக்கு தினம் தோறும் இரவில் தூங்கும்பொழுது கனவு வருகிறது. அந்த கனவில் பயமுறுத்தக் கூடிய தோற்றத்தில் வரும் ஒரு உருவம் “மயிலாஞ்சிக்கு போ” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. தினம், தினம் இந்தக் கனவினை கண்டு அல்லல்படும் நயன்தாரா கூடவே அவருடைய அம்மாவான ஊர்வசியையும் சேர்த்து இம்சை தருகிறார்.
இந்த நேரத்தில் நிதின் சத்யா ஒரு சிறு குழந்தையை நரபலி கொடுக்கப் போகும் சமயத்தில் அதை தடுத்து நிறுத்தி, குழந்தையை காப்பாற்றியதால் நயன்தாராவுக்கு நேரடியாக போலீஸ் கமிஷனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலமாக அவர் தனக்கு மயிலாஞ்சியில் போஸ்டிங் கொடுக்கும்படி கேட்க அதுவும் கிடைக்கிறது. மயிலாஞ்சிக்கு தன்னுடைய அம்மா ஊர்வசியோடு வருகிறார் நயன்தாரா.
அந்த ஊரில் 2000 வருடம் பழமையான மூக்குத்தி அம்மன் கோவில் இருக்கிறது. ஆனால் அந்தக் கோவிலில் மூன்று தெய்வங்கள் இருக்கின்றன. இப்போது அதில் இரண்டு தெய்வங்கள் மட்டும் இருக்க, நடுவில் இருக்கும் ஒரு தெய்வத்தின் சிலை மட்டுமே இல்லை.
இதே நேரம் வானில் இருக்கும் ஒன்பது கோள்களும் 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி சந்திக்கின்ற அந்த தருணத்தில் உலகத்தை அழிக்க சக்தி படைத்த சாத்தானின் மகள் ஒருவரும் வருவார். அதே போல் அதே உலகத்தை அந்த சாத்தானின் மகளிடம் இருந்து காப்பாற்ற மூக்குத்தி அம்மனும் உருவெடுத்து வருவார் இது நடக்கப் போகிறது என்பதை அறிகிறார் பழுத்த ஆன்மீகவாதியான ஒய் ஜி மகேந்திரா.
அப்போது இந்த விஷயம் தெரிந்து வரும் போஜி மகேந்திராவின் சீடரான சுனில் அவரை கொலை செய்கிறார். ஆனால் அந்த இடத்திலிருந்து தப்பித்து போக வழி இல்லாமல் மாட்டிக் கொண்டு சிறைக்கும் வந்து விடுகிறார் சுனில்.
அந்த நேரத்தில் ஒரு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதால் இப்போது அமைச்சராக இருக்கும் பழ. கருப்பையாவின் மகன் துனியா விஜய்யும் அதே சிறைக்கு வருகிறார். அப்போது துனியா விஜய்யிடம் மூன்று நாட்கள் மட்டும் தான் வெளியில் சென்று விட்டு வந்துவிட்டால், அவருக்கு பெரும் உதவி செய்ததாக வாக்களிக்கிறார் சுனில். இதனால் தனது செல்வாக்கை வைத்து சுனிலை வெளியே அனுப்புகிறார் துனியா விஜய்.
நயன்தாரா மைலாஞ்சி வந்த நேரத்தில் சாத்தானின் மகளான ரெஜினாவுக்கு உயிர் கிடைக்கிறது. அவரும் மீண்டு எழுந்து பூர்வ ஜென்மத்தில் தன்னுடைய கணவராக இருந்த துனியா விஜய்யைத் தேடி கண்டுபிடித்து அவரை அழைத்து வருகிறார்.
இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த மூக்குத்தி அம்மனை அழிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். மூக்குத்தி அம்மன் நயன்தாரா வடிவத்தில் இருந்தாலும் இன்னமும் அந்த அவதாரத்தை எடுக்காமல் இருக்கிறார்.
சுனில் ஒரு பக்கம் நயன்தாராவை தேடி காட்டுக்குள் வர அவரும் துனியா விஜய், ரெஜினா உடன் இணைந்து மூக்குத்தி அம்மனை அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
இவர்களில் யாருடைய திட்டம் ஜெயித்தது..? மூக்குத்தி அம்மன் என்ன ஆனார்? சாத்தானின் பிள்ளைகளான ரெஜினா, துனியா விஜய், சுனில் மூவரின் நிலை என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
வயது 40-ஐ நெருங்கிவிட்டாலும் இன்னமும் அழகு குறையாமல் கட்டுடல் கலையாமல், மிடில் ஏஜ் பெண்களுக்கு ஏற்ற கவர்ச்சியான முகத்தோற்றத்தில் இருக்கிறார் நயன்தாரா. அவரை மட்டுமே நம்பி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண பயந்த குணம் கொண்ட சக்தி என்ற கான்ஸ்டபிளாக அறிமுகமாகும் நயன்ஸ், இடைவேளைக்கு பின்புதான் அம்மனாக அவதாரம் எடுக்கிறார். அதுவரையிலும் படத்தை நகர்த்துவதற்கு தேவையான திரைக்கதையில் தன்னுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
நயன்தாரா அம்மன் அவதாரம் எடுத்த பின்புதான் அவரது நடிப்பின் நீள, அகலங்கள் உயர்ந்திருக்கின்றன. ஒரு கம்பீரமும், பெருமையும், இறுமாப்பும், சூலத்தை ஏந்தி கொண்டு கையில் நிற்கும் மகசூராவர்த்தினையை நினைவுபடுத்தும் அவருடைய அந்தத் தோற்றம் கம்பீரமாக கையெடுத்து கும்பிட வைத்து இருக்கிறது.
சண்டைக் காட்சிகளிலும் முடிந்த அளவுக்கு கிராபிக்ஸ் துணையோடு தன்னுடைய அம்மன் வல்லமையை காண்பித்திருக்கிறார் மாரியாத்தா நயன்தாரா.
சாத்தானின் மகள் அவதாரத்தில் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் ரெஜினா கேசண்ட்ரா, நயன்தாராவுக்கு வில்லியாக ஓரளவுக்கு பொருந்தி இருக்கிறார். இதற்கு அவருடைய மெலிந்த உடல் தோற்றமும் ஒரு காரணம்.
முந்தைய பிறவியில் நயன்தாராவால் தோற்கடிக்கப்பட்டதால் பழிக்கு பழி வாங்குவேன் என்று அடிக்கடி இவர் சொல்லுவதும் அதற்காக அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு சண்டை காட்சிகளிலும் தன் உடல் வலிமையும் காட்டியிருக்கிறார் ரெஜினா.
கன்னடத்து ஹீரோவான துனியா விஜய், ரெஜினாவின் காதலராக வில்லனாக நடித்திருக்கிறார் இவருடைய கதாபாத்திரமும் 2000 வருடங்களுக்கு முன்பு உருவாகி இப்போதுவரையில் தொடர்ந்து வருவதால் கதாபாத்திரங்களுக்கு இடையேயான லாஜிக் மீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கதாசிரியர் சுந்தர் சி. இவருடைய நடிப்பு அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது ஆனால் வில்லத்தனத்தை இன்னமும் அதிகமாக காட்டி இருக்கலாம்.
மைலாஞ்சியின் பண்ணையாராக நடித்திருக்கும் யோகி பாபு அறிமுக காட்சியில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்து இருந்தாலும் திரைக்கதைக்கு உதவுவதற்காக கடைசிவரையிலும் படத்தில் இருக்கிறார்.
நயன்தாராவின் அம்மா ஊர்வசி தன்னுடைய லொட லொட பேச்சிலும் ஆத்திர அவசரமான ஆக்சன் காட்சிகளிலும் கவனிக்க வைத்திருக்கிறார். யோகி பாபுவின் வருங்கால மாமனாராக லொள்ளு சபா சாமிநாதன், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், மைனா நந்தினி என்ற ஒரு சிலர் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
கேமியோ ரோலில் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பூவும், சினேகாவும் இரண்டு அம்மன்களாக வந்து மூத்த அம்மனான மூக்குத்தி அம்மனுக்கு துணை குடுத்து சாத்தானே மகளை அளிப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள். குஷ்பூ, சினேகாவின் அழகு தியேட்டருக்கு வந்திருக்கும் வயோதிக வாலிபர்களுக்கு பழசையெல்லாம் கிளறி விட்டிருக்கும்.
அம்மன்களின் மோதல் என்பதால் மாயாஜாலத்தில் கட்டப்பட வேண்டிய காட்சிகள் நிறைய இருப்பதாலும் அதற்கு ஏற்றவாறு கதைக் களனும் இருந்ததால் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் தன்னால் முடிந்த அளவுக்கான சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.
சில காட்சிகளை கிரீன் மேட்டிலும், பல காட்சிகளை வெளிப்புறத்திலும் படம் எடுத்திருந்தாலும் மேங்கிக்கில் வித்தியாசம் எதுவும் தெரியாதபடி கச்சிதமாக தந்திருக்கிறார். படத்தில் இருக்கும் நடிகைகள் அத்தனை பேரையும் மிக அழகாக காட்டி இருப்பது ஒலிப்பதிவாளரின் திறமையை காட்டுகிறது.
ஒளிப்பதிவாளர், சண்டைக் காட்சி இயக்குநர், கிராபிக்ஸ் வடிவமைப்பு குழுவினர், படத் தொகுப்பாளர் அனைவரும் ஒன்றிணைந்து சண்டை காட்சிகளையும் மாயாஜால காட்சிகளையும் அழகுபட தந்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கொடுத்த பட்ஜெட்டுக்கு இதைத்தான் செய்ய முடியும் என்பது ஊர் உலகத்துக்கு தெரிந்த விஷயம் அதனால் ஒரு தமிழ் படத்தில் இந்த அளவுக்கு கிராபிக்ஸ் தொழில் நுட்பம் கொடுத்திருப்பது மிகப் பெரிய விஷயம் என்பதால் இதில் குறை கூற ஏதுமில்லை. 2000 வருடங்களுக்கு முந்தைய காட்சி அமைப்புகளைகூட எவ்வளவு சுருக்கமாக தர முடியுமோ அவ்வளவு சுருக்கமாக, ஆனால் புரிவது போல அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அம்மன் பாடலில் தெரிகிறார். பின்னணி இசையில் கடைசி வரையிலும் வேகவேகமான திரைக்கதைக்கு பொருத்தமான இசையை வழங்கி இருக்கிறார்.
படத் தொகுப்பாளரும் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார். எந்தக் காட்சியும் மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடிக்கப்படவில்லை. அவ்வளவு இறுக்கமான திரைக்கதையில் அடுத்தடுத்து வேகம் வேகமாக நகருகின்ற வகையில் காட்சிகளை தொகுத்து அளித்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒரு சாதாரண பெண் திடீரென்று அம்மனாக உருமாறி நல்லதை நிலைநாட்டும் கதை என்பதால் அதற்கு பொருத்தமான திரைக்கதையிலும், தமிழ் சினிமாவுக்கு ஏற்றவாறு வடிவமக்கப்பட்ட கதாபாத்திரத் தேர்வுகளையும் செய்து இயக்குநர் சுந்தர்.சி கச்சிதமாக இந்தப் படத்தை உருவாக்கி தந்திருக்கிறார்.
அவரைப் பொறுத்தமட்டில் கமர்சியல் திரைப்படங்களில் லாஜிக் பார்க்க தேவையில்லை என்பார். இந்தப் படத்திலும் லாஜிக் பார்க்க தேவையில்லை என்பதால் மாயஜாலமாகவும், கடவுள் நம்பிக்கையுமாக இந்தப் படம் வந்திருப்பதால் அம்மன்களின் ஆக்ரோசத்தை பார்க்க விரும்புபவர்கள் இந்தப் படத்தை அவசியம் பார்ப்பார்கள்.
இடையிடையே சுந்தர்சியின் டிரேடு மார்க்கு காமெடி திரைக்கதையும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. அதிலும் யோகி பாபு மனைவியாக போகிறவரை கடத்துகின்ற காட்சி அப்பட்டமாக இதற்கு முந்தைய சுந்தர்.சி படங்களில் காப்பிதான். அதேபோல் யோகிபாபு இடை இடையே செய்கின்ற காமெடிகளும் படத்தின் மெயின் கதைக்கு ஒட்டாமல் தனியே துருத்தி நிற்கிறது.
இந்தக் காமெடி காட்சிகளையும் யோகி பாபு சம்பந்தப்பட்ட விஷயங்களை நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அம்மன், சாத்தான் மோதலாக சீரியஸாக இந்தப் படத்தை எடுத்திருந்தால் என்னமோ இதைவிட நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் நமக்குள்ளும் தோன்றுகிறது.
முதலீடாக பல கோடிகளை வாரி இறைத்து தொழில் நுட்பத்தில் மிகச் சிறந்தவைகளை கொண்டு வந்திருக்கும் தமிழ் படம் என்பதால் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படத்தை தியேட்டரில் குடும்பத்தோடு பார்த்து மகிழலாம்.
RATING : 3.5 / 5









