நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளரான ‘அரசு பிலிம்ஸ்’ கோபி, பண மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர், நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றைக்கு புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், “கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார். பட வெளியீட்டிற்கு முன்பே லாபத்துடன், தொகையை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.
ஆரம்பத்தில் நான் தயங்கவே படம் நல்ல கதையம்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் ‘களவாணி-2’ படத்தை அவர் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவருக்கு வங்கி கணக்கிலும், ரொக்கமாகவும் ரூபாய் 5 கோடியை கொடுத்தேன். இதற்காக 28-12-2014 அன்று அக்ரிமென்ட் போடப்பட்டது. மேலும் வாய்மொழியாக நெகட்டிவ் ரைட்ஸ் கொடுப்பதாக நம்பிக்கை ஊட்டியதன் பேரிலும் அவருக்குப் பணத்தை கொடுத்தேன்.
இதனையடுத்து ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி நல்ல லாபம் எடுத்த போதிலும், தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகிறார்.
பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து 1.30 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அப்போது நடிகர் விமல் “இதைப் படத்திற்கான லாபத் தொகையாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
6 மாதங்களுக்குப் பிறகு அசல் தொகையான ரூபாய் 5 கோடியைத் திருப்பித் தருவதாக விமல் கூறினார். அதன் பிறகு பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுப்பதில் காலதாமதம் செய்து வந்தார். அவர் முன்னரே வழங்கியிருந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்ப வந்துவிட்டது.
பின்பு பின்பு கொரானா தொற்று பாதிப்பு ஏற்படவே சினிமாத் துறை முடங்கி விட்டதால் சினிமாத் துறை முழுவதுமாக இயங்கவில்லை. அதனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
நான் அவரின் வார்த்தையை நம்பி நான் வேறு எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் திடீரென்று பொய்யான காரணங்களைக் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் என் மீது நடிகர் விமல் புகார் கொடுத்தார்.
அந்த புகாருக்கு முன் ஜாமீன் மனுவினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது எங்களிடம் பேச்சுவார்த்தை ஏற்பட்டு அந்த பேச்சுவார்த்தையில் ரூபாய் 3 கோடியைத் தருவதாக நடிகர் விமல் ஒப்புக் கொண்டு எழுத்துப்பூர்வமாக பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் இன்றைய தேதிவரை ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் என்னை மோசடி செய்து ஏமாற்றி வருகிறார் விமல்.
மேலும் தற்பொழுது சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பல கோடி ரூபாய் முன் தொகையாக வாங்கிய பிறகும் என்னிடம் ஒப்புக் கொண்ட தொகையைக்கூட கொடுக்காமல் என்னை நம்பிக்கை மோசடி செய்து என்னை ஏமாற்றி வருகிறார்.
மேலும், நடிகர் விமல் இதுபோல பல பேரிடம் மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. நான் அவரை அணுகி பணத்தை கேட்டபோது என்னிடம் பணத்தை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே நம்பிக்கை மோசடி மூலம் 5 கோடி ரூபாயை மோசடி செய்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி” கோரியுள்ளார்.
இதையடுத்து இன்று மதியமே சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞருடன் வந்த நடிகர் விமல் தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாருக்கு பதில் மனுவை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அப்போது பேசிய நடிகர் விமல், “நான் 5 கோடி ரூபாய் பணத்தை வாங்கவே இல்லை. கோபி மற்றும் அவரது நண்பரான சிங்காரவேலன் இருவரும்தான் என்னை ஏமாற்றி இப்படியொரு சூழ்ச்சி வலையில் என்னை சிக்க வைத்துள்ளனர்.
‘மன்னர் வகையறா’ படத்தை கணேஷ் என்பவர்தான் தயாரித்து வந்தார். ஆனால், அவரால் தொடர்ந்து தயாரிக்க முடியாத நிலையில், என் பேரில் தயாரிப்பதாக போட்டால் ஃபைனான்ஸ் கிடைக்கும் என்றார். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.
ஆனால், நான் யாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை கடந்த சில ஆண்டுகளாகவே தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்த நிலையில்தான் அவர் மீது புகார் அளித்திருந்தேன்.
உண்மையில் இந்தப் பிரச்சினையில் ஏமாந்தவன் நான்தான். இதை வெளியே சொன்னால் பிரச்சனை ஆகிவிடும். அதனால் இந்த விஷயத்தை பேசியே தீர்த்துக் கொள்ளலாம் என சிங்காரவேலன் சொன்னதை கேட்டு நான்தான் ஏமாந்து போனேன்.
போலி ஆவணங்களை தயாரித்து இப்படியொரு மோசடியில் இருவரும் சேர்ந்து பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ளார்கள்…” என்று நடிகர் விமல் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால்தான் யார் சொல்வது உண்மை என்பது தெரிய வரும்.