full screen background image

“ஒரு படம் ஹிட்டுன்னா அடுத்து சி.எம். ஆசையா..?” – நடிகர்களுக்கு குட்டு வைத்த மோகன்பாபு

“ஒரு படம் ஹிட்டுன்னா அடுத்து சி.எம். ஆசையா..?” – நடிகர்களுக்கு குட்டு வைத்த மோகன்பாபு

நேற்று காலை நடைபெற்ற ‘உயிரே உயிரே’ திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மோகன்பாபு, நடிகர்களின் முதலமைச்சர் ஆசையைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். ஆனால் யாரை குறி வைத்தார் என்றுதான் தெரியவில்லை.

Uyire Uyire Audio & Trailer Launch Stills (15)

நடிகர் மோகன் பாபு பேச வந்தவுடன், மேடையில் இருந்த அனில் கபூரிடம் தான் தமிழில்தான் பேசப் போவதாகச் சொல்லி அதற்காக அவரிடம் ‘ஸாரி’யும் கேட்டுக் கொண்டார்.

மோகன்பாபு தன் பேச்சில், “இந்த தமிழ் மண் என் தாய். நான் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடித்து பி.டி. மாஸ்டராக தி.நகர் பள்ளியில் ஆசிரியனாக வேளைக்கு சேர்ந்தேன்.

பிறகு ஒரு வருடத்தில் அந்த வேலை பிடிக்காமல் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். இதே பாண்டிபஜாரில்தான் தங்கியிருந்தேன். சினிமாவில் சேர்ந்தவுடன் முதல் ஆறு மாதங்களுக்கு 50 ருபாய்தான் சம்பளம் வாங்கினேன். அப்போ அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய? சாப்பிடவே போதலையே என்று இயக்குநரிடம் சொல்லி வருத்தப்பட்டேன். ‘இதுதான் சினிமாவில் உன்னுடைய முதல் சம்பாத்தியம். இதிலிருந்துதான் ஆரம்பிக்கணும். ஒரு லட்சியத்தோட உழை. நிச்சயம் மேல வருவாய்’ என்றார் இயக்குநர்.

அப்படி இந்த சென்னையில் ஆரம்பித்த வாழ்கைதான் ஏன் வாழ்க்கை. இதன் பின்பு பல சினிமாக்களில் வில்லனாக, ஹீரோவாக என்று நடித்துவிட்டேன். தமிழில்தான் முதன்முதலில் முகம் காட்டினேன். பின்புதான் தெலுங்குக்கு சென்றேன். இப்படி என்னை வாழ வைத்ததும் இந்த்த் தமிழ்நாடுதான்..” என்று ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழியும் கலந்த தன் பேச்சில் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார் மோகன்பாபு.

இப்படியே விட்டிருந்தால் நல்லாத்தான் இருந்திருக்கும். பின்பு மைக் ஸ்டேண்ட் அருகிலேயே அமர்ந்திருந்த சுமலதா, ராதிகா, பிரியாவைப் பார்த்துவிட்டும் அவர்களிடத்தில் பேசியபடியே மைக்கிலும் பேசினார் பாபுகாரு.

“நம்ம காலம் போல இப்போ இல்லை. அப்போ நாம எல்லாரும் ஒரு குடும்பமா இருந்தோம். பழகுனோம். இப்பவும் ஒருத்தருக்கொருத்தர் அதே அன்போட இருக்கோம். ஆனால் இப்ப அப்படியா இருக்கு..? இந்த யங் ஜனரேஷன்ல எல்லாரும் வர்றாங்க. போறாங்க. அவ்வளவுதான்.

ஒரு படம் ஹிட்டாயிருச்சுன்னா உடனேயே முதலமைச்சர் ஆயிரணும்னு அந்த ஹீரோவுக்கு ஆசை வருது. உடனே தனது அடுத்த படத்துக்கு டயலாக் எழுதுறவரை கூப்பிட்டு ‘நான் முதலமைச்சர் ஆகுற  மாதிரி வசனம் எழுது’ன்னு சொல்லிடுறாங்க. முதலமைச்சர் பதவி என்பது அவ்வளவு ஈசியா போச்சா இவங்களுக்கு. கலைத்துறையில் இருந்து முதலமைச்சரானவங்களெல்லாம் எத்தனை கஷ்டப்பட்டு அந்த நிலைமைக்கு உயர்ந்தாங்கன்னு இவங்களுக்கு தெரியுமா.?”  என்றார்.

இப்போ மோகன்பாபுகாரு, தமிழ் நடிகர்களை பற்றி சொன்னாரா.. அல்லது தெலுங்கு நடிகர்களை பற்றி சொன்னாரா..? என்பது யோசிக்க வேண்டிய கேள்வி.

Our Score