வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு.
அப்படி ‘சாட்டை’ படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என பெயர் பெற்றவர்.
அவரை சந்தித்த போது.. “இயக்குநர் பிரபு சாலமன் ஸார், தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் ஸார்.. இருவரும் இணைந்து ‘மைனா’வுக்கு பிறகு எடுக்கிற படம்.. அன்பழகன்னு புது இயக்குனர். சமுத்திரகனி, தம்பி ராமய்யான்னு நட்சத்திர நடிகர்கள். இத்தனை ஜாம்பவான்கள் ஓடுகிற ரேசில் நானும் ஓடினேன்.
இந்தப் படத்தின் மூலம் எனக்கு நல்ல நடிகைன்னு பெயர் கிடைச்சது. எவ்வளவோ நடிகர், நடிகைகள் அடையாளம் தெரியாமல் போகும்போது. என்னை பாராட்டி எழுதிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோருக்குமே நன்றி. அத்துடன் ‘சாட்டை’ படத்தின் யூனிட் எல்லோருக்கும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன்.
இதன் பின்பு நிறைய படங்களில் நடிக்கக் கேட்டார்கள். ஆனால், அப்போது நான் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. இப்போதுதான் படிப்பை முடித்தேன். அதன் பின்பு நான் நடித்த ‘மொசக்குட்டி’, ‘அகத்திணை’ ஆகிய படங்கள் ரிலீஸாகி விட்டன. இப்போது விஜய் சேதுபதியுடன் ‘மெல்லிசை’, தினேஷுடன் ‘அண்ணனுக்கு ஜே’, ‘புரவி எண்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன்.
இப்போதுகூட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என ஐந்து மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் பூரிஜெகன்நாத்தின் தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ. வினோத் விஜயன் இயக்கம் செய்கிறார். ராஜீவ் ரவி காமிராமேன். இப்படி எல்லோருமே ஜாம்பவான்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
பொறுமையா இருந்தா சாதிக்கலாம்கிற தேவவாக்கின் மகிமையை உணர்ந்தவள் நான். எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்க நான் தயாரில்லை. ஆனால் நடித்ததில் எத்தனை படம் நல்ல படம்ன்னு கணக்கு பார்ப்பவள் நான். எனக்கு இன்னும் வயசு இருக்கு. ஆதனால் பொறுமையாக நின்று சாதிப்பேன்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மகிமா.