full screen background image

இன்று நேற்று நாளை – சினிமா விமர்சனம்

இன்று நேற்று நாளை – சினிமா விமர்சனம்

வித்தியாசமான படங்களை கொடுப்பதையே குலத் தொழிலாகச் செய்து வரும் தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த வித்தியாசமான படைப்பு இந்தப் படம்.

கரணம் தப்பினால் மரணம் போன்ற கதை. ஒரு நிமிடம் செல்போனை நோண்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் படமே நமக்குப் புரியாது. அந்த அளவுக்கு காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்டுகளும், எதிர்பாராத ஆச்சரியங்களும் அடங்கியது.

இந்த நேரத்தில் இது நடக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கான்செப்ட்டில் ஏற்கெனவே ‘12-பி’ படத்தில் துவங்கி ‘ஒரு கன்னியும் நாலு களவாணிகளும்’ வரையிலும் பல படங்கள் வந்துவிட்டன. அந்த கான்செப்ட்டின் ஒண்ணுவிட்ட அக்கா மகன் போன்றது இந்தப் படத்தின் கதைக் கரு.

டைம் மெஷின். இதில் ஏறி அமர்ந்தால் முன் காலத்திற்கும் செல்லலாம். பார்க்கலாம்.. இந்த மெஷினில் ஏறி டிராவல் செய்யும்போது ஏற்படும் ஒரு சின்ன பிரச்சினைதான் படத்தின் மையக் கரு.

படம் 2065-ல் துவங்கி அதிலேயே முடிகிறது. 2065-ல் விஞ்ஞானியாக இருக்கும் ஆர்யா ஒரு டைம் மெஷினை கண்டறிகிறார். இதனை சோதனைக்குள்ளாக்க விரும்புகிறார். நேரம் மற்றும் வருடம், தேதியை கொடுத்து அதனை இயக்கிவிட.. அது மிகச் சரியாக 2015 பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒரு இடத்தில் வந்து நிற்கிறது.

அதே 2015-ல் வேஸ்ட்டான பிளாஸ்டிக் கப்புகளை மறுபடியும சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் என்கிற திட்டத்தோடு வங்கி லோன் கேட்டு அலைகிறார் விஷ்ணு விஷால். கிடைக்கவில்லை. இவருடைய ஜோஸியக்கார நண்பரான கருணாகரன் ஜோஸியம் சொல்வதுபோல நடித்து ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த வெட்டி வேலைக்கு நடுவில் விஷ்ணு விஷால் மிகப் பெரிய பிஸினஸ்மேன் ஜெயபிரகாஷின் மகளான மியாவை காதலித்து வருகிறார். “அப்பா நீ என்ன வேலை செய்றன்னு கேட்டா என்ன சொல்றது..?” என்கிறார் காதலி. “நான் அப்படித்தான். இஷ்டம்னா இருந்து காதலி. இல்லைன்னா போயிக்கிட்டே இரு..” என்று சொல்லிவிட்டு தன் வழியிலேயே போகிறார் விஷ்ணு விஷால்.

மியா தன் காதலை அப்பாவிடம் சொல்லும்போது பேச்சுவாக்கில் விஷ்ணு ஷேர் மார்க்கெட்டில் கில்லி என்று பொய் சொல்ல.. இதை நம்பி  ஜெயபிரகாஷ் தனது கம்பெனியின் போர்டு மீட்டிங்கிற்கு விஷ்ணு விஷாலை அழைத்து ஷேர் மார்க்கெட் பற்றி பேச வைக்க.. எதிர்பாராத இந்த அழைப்பினால் சொதப்பி விடுகிறார் விஷ்ணு. இந்த சோகத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று தாகசாந்தி செய்து புண்பட்ட மனதை சாந்தியடைச் செய்து வீடு திரும்பும்போது ஒரு ஆக்ஸிடெண்ட்.

டைம் மிஷின் வந்து நிற்கும் இடமும் அதேதான். தற்செயலான விபத்தினால் காயப்பட்டு கிடக்கிறார்கள் விஷ்ணுவிஷால், கருணாகரன், மற்றும் விஞ்ஞானி பார்த்தசாரதி மூவரும். டைம் மெஷினை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார் பார்த்தசாரதி. இதனை யார் பொறுப்பில் எடுப்பது என்று இருவரும் சண்டையிட்டு கடைசியில் சமாதானமாகி மறுநாள் காலை வருவதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தால் பார்த்தசாரதி கரண்ட் ஷாக்கினால் கோமாவுக்கு போயிருக்க.. அந்த டைம் மெஷினை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள் வெட்டி ஆபீஸர்களான நண்பர்கள் இருவரும்..

இதனை வைத்து காணாமல் போனவைகளை தங்களால் கண்டுபிடித்துத் தர முடியும் என்று சொல்லி நன்றாகவே கல்லா கட்டுகிறார்கள். வாழ்க்கை சுகமாக போக.. வி.எஸ்.ராகவனின் மெடலை கண்டுபிடித்துக் கொடுக்க போன இடத்தில் தற்செயலாக வேறொரு காலத்தில் ஆட்டத்தைக் கலைக்கக் கூடாது என்கிற விதிமுறையை மீறி ஒரு செயலை செய்யப் போக அது இவர்களது வாழ்க்கையையும் சேர்த்தே பாதிக்கிறது.

அது என்ன என்பதும், இதனை எப்படி இவர்கள் நிவர்த்தி செய்தார்கள் என்பதும்தான் சுவாரஸ்யமான மிச்சம் மீதிக் கதை.

படத்தின் சுவாரஸ்யமே அடுக்கடுக்கான டிவிஸ்ட்டுகளை கொண்ட திரைக்கதைதான். ஒரு காட்சியின் மூலம் அடுத்தக் காட்சிக்கான துவக்கத்தைக் கொடுப்பது போல அமைந்திருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை, திரைக்கதை பற்றி அறிந்து கொள்ள, படிக்க விரும்புவர்களுக்கு நிச்சயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டியது.

ஜோஸியக்காரர்களுக்கு நடக்கும் நுழைவுத் தேர்வு.. கருணாகரன் ஜோஸியம் சொல்லும் முறை.. விஷ்ணு விஷாலின் கண்டுபிடிப்பு மேனேஜரால் கேலிக்குள்ளாக்கப்படும் காட்சி, ஜெயபிரகாஷிடம் வில்லனின் அடியாள் வந்து பேசுவது.. வில்லன் சாய் ரவியின் அதி பயங்கர வில்லத்தனம்.. புகைப்படத்தை பார்த்து தனது மகளின் காதலை அறிந்து கொள்வது.. விஞ்ஞானி பார்த்தசாரதியின் அரிய கண்டுபிடிப்பான காரின் உருவாக்கம்.. ஜெயபிரகாஷை கொல்ல முயலும் காட்சிகள்.. ஜெயபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. என்று படத்தின் பல காட்சிகளே திரைக்கதையை சுவையாக்கியிருக்கின்றன.

எத்தனையோ ரவுடியிஸ படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும், இந்தப் படம் புதிதாக இருப்பது போல தோன்றியிருப்பதற்கு இயக்குநரின் சிறப்பான இயக்கமும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

திருப்பத்தில் ஒரு திருப்பமாக ஒரு வசனத்தைக்கூட மிஸ் பண்ணிவிடாமல் பார்த்தால் இந்த டைம் மெஷின் பற்றிய கதை எளிதாகப் புரியும். இல்லாவிட்டால் கஷ்டம்தான். டைம் மெஷின் சேதமடைந்த பின்பு “போகலாம். ஆனால் திரும்ப வர முடியாது..” என்கிற சிச்சுவேஷனுக்கு அப்புறமும் விஷ்ணு விஷாலின் கல்யாண நிகழ்ச்சி எப்படி என்றுதான் பலரும் புரியாமல் விழிக்கிறார்கள். இதற்கான சரியான காரணம் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கேட்டாமல் விட்டதினால் பலருக்கும் புரியவில்லை.

இந்தக் காதல், கல்யாண விஷயம்தான் எல்லா படங்களையும் போலவே கொஞ்சம் எரிச்சலாக்குகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் காதலை மறைப்பது.. ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்து அதன் மூலமாக காட்சிகளை நகர்த்துவது என்று ஓடுவது..? தமிழ்ச் சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் படமாகவே இருந்தாலும் குடும்ப பிக்ஷனையும் சேர்த்துதான் ஓட்ட வேண்டியிருக்கிறது..!

விஷ்ணு விஷால் அலட்டல் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார். ‘நடிப்புன்னா என்ன என்று கேட்கவே வேண்டாம். இதுதான் என் நடிப்பு’ என்று சொல்லிவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கிறார். நாயகி மியாவும் இதே போலத்தான். ‘அமரகாவிய’த்தில் இருந்த நடிப்புக்கான ஸ்கோப் இதில் அதிகமில்லை என்றாலும், இவருடைய மரண காட்சி ரசிகர்களுக்கு பெரிய சோகத்தைக் கொடுக்கிறது. இதுவே இவருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. உண்மையாகவே நடித்திருப்பவர்கள் வில்லனாக நடித்தவரும், கருணாகரனும், ஜெயபிரகாஷும்தான். கருணாகரனின் மெல்லிய நகைச்சுவை இழையோடும் வசனங்களுக்கு தியேட்டர்களில் பலத்த கரகோஷம்..

வசந்த்தின் ஒளிப்பதிவுக்கு ஒரு சல்யூட். பெரும்பான்மையான இரவு நேர காட்சிகளில் இயக்கத்திற்கு இடையூறு செய்யாமல் பின்னணியில் இருந்திருக்கிறார்.‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையமைப்பில் பாடல்கள் பரவாயில்லை ரகம். இந்தப் படத்தில் பாடல்களே இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

படத்தின் முடிவில் அடுத்த பாகம் வந்தாலும், வரலாம் என்பதுபோல்  முடித்திருக்கிறார்கள். அதுவும் நடந்தால் நல்லதுதான்..!

நடிகர்களை நம்பாமல் தனது கதையையும், திரைக்கதையும் மட்டுமே நம்பி ஒரு படத்தை எடுத்து ஜெயித்துக் காட்டியிருக்கும் இயக்குநர் ரவிக்குமாருக்கு நமது பாராட்டுக்கள்.  

தனது முதல் படத்திலேயே முத்திரை குத்துவது போல ஒரு சிறப்பான படத்தை மீடியம் பட்ஜெட்டில் எடுத்துக் காண்பித்திருக்கிறார். இப்படியொரு கதையை படமாக்க துணிந்த தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும், இணை தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கும் நமது பாராட்டுக்கள்..! 

எப்போதும் தனது படங்களுக்கு 35 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடத்த அனுமதி தர மாட்டார் தயாரிப்பாளர் சி.வி.குமார். ஆனால் இந்தப் படத்திற்கு மட்டும் 45 நாட்களும், கூடுதலாக சி.ஜி., கிராபிக்ஸ் வேலைகளுக்கான செலவையும் அனுமதித்திருக்கிறார். அதற்கான பலனும் இப்போது கிடைத்திருக்கிறது. இதேபோல் மற்ற படங்களுக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார் அள்ளித் தந்தால் அந்த இயக்குநர்களும் சந்தோஷப்படுவார்கள்.

அவசியம் பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ணிராதீங்க..

Our Score