டாம் க்ரூஸ் நடிப்பில் கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி உலமெங்கும் வெளியாகவுள்ளது.
படத்திற்கு படம் வித்தியாசமான சாகசங்களை மேற்கொள்ளும் ஹாலிவுட்டின் சாகச ஹீரோ டாம் க்ரூஸ் இந்த ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தில் கார், பைக், விமானம் என பல சாகசங்களை செய்துள்ளார்.
இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை ஆங்கிலத்திலும் மற்றும் பல பிராந்திய மொழிகளிலும் வெளியிடுகிறது. தமிழில் இந்தப் படம் ‘இம்பாசிபிள் : முரட்டு தேசம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
‘மிஷன் இம்பாசிபிள்-5’ படத்தின் ஹீரோவான டாம் க்ரூஸின் சாகசங்களைப் பற்றி இயக்குநர் கிரிஸ் மெக்குவாரி கூறும்பொழுது, “மிஷன் இம்பாசிபிள் தொடரின் முந்தைய பாகங்கள் வெவ்வேறுவிதமான ஆச்சர்யம் ஊட்டும் சாகசங்களை காட்சியாய் கொண்டு இருந்தது. கதாநாயகன் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் என்ற கேரக்டர் எதற்கும் துணிந்தவன் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் A-400 ரக விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடியே அவர் நடித்திருக்கும் சண்டை காட்சி ரசிகர்களை கண்டிப்பாக உறைய வைக்கும். இருப்பினும் டாம் க்ரூஸ் யாரும் தன்னை எளிதில் மதிப்பிட விடமாட்டார். மிஷன் இம்பாசிபிள் : முரட்டு தேசம்’ படத்தில் எல்லாவற்றையும் கடந்து தன் மூச்சை அடக்கி கொண்டு நீருக்கு அடியில் பல மணி துளிகள் நடித்துள்ளார்…” என்றார்.
“நான் இதற்கு முன்னர் பல படங்களில் ஆழ் கடலில் நீந்தி நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்ததுபோல மூச்சை அடக்கி அடக்கி கொண்டு 200 அடி ஆழத்தில் நடித்தது இல்லை. நீருக்கு அடியில் இப்படி நடிப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. எனினும் எனது தீவிர பயிற்சி இத்தகைய காட்சியில் நடிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. மற்ற காட்சிகளைக் காட்டிலும் இக்காட்சியில் நடித்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனது உடலைப் பற்றிய நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள இந்த பயிற்சி எனகு உதவியது..” என்கிறார் ஹீரோ டாம் க்ரூஸ்.









