பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் தான் வாங்கிய கோல்டன் குளோப் விருதுகளை அந்த அமைப்பிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
கோல்டன் குளோப் விருதுகளை வழங்கும் அமைப்பான ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்பின் மீது நிற வெறி குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் டாம் குரூஸ் இதனை செய்திருக்கிறார்.
ஹாலிவுட் மற்றும் டிவிக்களில் சிறந்த கலைஞர்களுக்கு வருடா வருடம் ‘கோல்டன் குளோப்’ என்ற விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. 1944-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படுகிறது. 2009-ம் ஆண்டில் நமது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்கூட ‘கோல்டன் குளோப்’ விருதை பெற்றுள்ளார்.

இந்த விருதினை ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்புதான் வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் ஹாலிவுட்டின் பத்திரிகை மற்றும் புகைப்படக் கலைஞர்கள் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக இந்த அமைப்பில் கறுப்பினத்தைச் சேர்ந்த எவரையும் உறுப்பினராக்க அமைப்பு நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என அமைப்பின் உறுப்பினர்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஹாலிவுட் கலைஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் இந்தப் பிரச்சினையில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக தான் இருக்கப் போவதாகச் சொல்லி தான் பெற்றிருந்த மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் அந்த அமைப்பிடமே திருப்பி அளித்துள்ளார்.

இதேபோல் உறுப்பினர் குழுவில் உரிய மாற்றங்களை செய்யாவிட்டால் 2022-ம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்யப் போவதில்லை என என்.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை பூதாகரமாக ஆனதையடுத்து வரும் ஆகஸ்டு மாதத்தில் அனைத்து வகையான இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் குழுவில் சேர்க்கப்படுவார்கள் என இந்த விருது அமைப்பு தெரிவித்துள்ளது.