போடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து அஷ்வின் நாராயணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாயா’. இந்தப் படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதியன்று ரிலீஸாகவுள்ளது. இராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி, இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
சூப்பர் நேச்சுரல் டைப் படமான இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆரி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இசை – ரோன் ஏதன் யோகன், ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன், படத் தொகுப்பு – சுரேஷ், கலை இயக்கம் – தா.ராமலிங்கம், உடைகள் வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர்.
இந்தப் படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் நாராயணன் பேசும்போது, “நான் இந்தப் படத்தின் கதையை எழுதும்போது யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை. காரணம், யாரையாவது நினைத்து கதை எழுதிவிட்டு கடைசியாக அவர்கள் படத்தில் நடிக்க இயலாமல் போனால், என்னால் அதில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கலாகிவிடும் என்பதால்தான்.
படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டவுடன் ‘கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை, ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகமாக இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தார்.
உடனேயே எங்கள் மனதுக்கு நயன்தாராதான் நினைவுக்கு வந்தார். அவர் நடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது, உடனே தயாரிப்பாளர் நயன்தாராவிடம் கதை சொல்ல சொன்னார். நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள்ளும் ஒரு சின்ன பயம் இருந்தது. நயன்தாராவிடம் நான் கதையை சொல்லி முடித்ததும் உடனேயே, ‘எனக்குக் கதை பிடிச்சிருக்கு. கண்டிப்பாக நடிக்கிறேன்’ என்று கூறினார்.
இந்தப் படத்தை படமாக்க மொத்தக் குழுவும் ஒரு வருடம் கடுமையாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உழைத்திருக்கிறோம். நான் ஒரு வருடம் அவர்கள் எல்லோரையும் அதிக அளவில் தொல்லை செய்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதை பொறுத்துக் கொண்டு அவர்கள் முழு சுதந்திரத்தோடு கடுமையாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கி ஒத்துழைப்பு கொடுத்தனர்.
முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா படத்தை லோ லைட்டில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிக தத்ருபமாக படம் பிடித்துள்ளார். இந்தப் படத்தில் நிறைய ஓவியம் சார்ந்த கதை சொல்லாடல் இருக்கும். படத்தில் ஆரி ஓவியராக நடித்துள்ளார். அவர் பிரபலமான பத்ரிக்கைகளுக்கு ஓவியம்வரையும் கலைஞராக நடித்திருக்கிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்துதான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும்.
முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் டிரெயிலர் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது இந்தப் படத்தில்தான் இதுவே தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். ‘மாயா’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வெளிவரவுள்ளது…” என்றார்.
படம் பற்றி நடிகர் ஆரி பேசும்போது, “இந்தப் படத்தில் முதலில் நடிகர் நானிதான் நடிப்பதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த கதையை கேட்டதும், ‘நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன்’ என்று கூறினேன். அதற்கு முக்கியக் காரணம் படத்தின் கதை. சில படங்களில்தான் படத்தில் நடிக்கும் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். அந்த சில படங்களைபோல், இந்த படத்திலும் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.
இந்தப் படத்தை வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சார், படத்தைப் பார்த்துவிட்டு, ‘நான் வெளியிட்ட பேய் படங்களிலேயே சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும்’ என்று கூறினார். இதுவே இந்தப் படத்தின் வெற்றியை சொல்லும் அச்சாரமாக கருதுகிறோம்..” என்றார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் படங்கள் எதுவும் சோடை போகாதென்பது திரையுலகமே அறிந்தது. இந்தப் படமும் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பலாம்..!