அமேஸான் பிரைம் என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் ‘மிர்சாபூர்’.
அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் எக்செல் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இத்தொடரை தயாரித்திருந்தன.
இந்தத் தொடரில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேண்டு, ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல் மற்றும் ஹர்ஷிதா சேகர் கவுர் போன்ற பல பிரபலமான தொலைக்காட்சி நடிகர்கள் நடித்திருந்தார்கள். கரண் அன்ஸுமான் மற்றும் குர்மீத் சிங் இருவரும் இத்தொடரை இயக்கியிருக்கிறார்கள்.
அமேசான் பிரைம் மூலமாக வெளியிடப்பட்ட இந்த வெப் சீரீஸ் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றிலும் நிகழும் அரசியல் கொடுமைகளைப் பார்க்கும்போது நமது தமிழகம் எவ்வளவோ பரவாயில்லையே என்று சொல்லத் தோன்றும். அப்படியொரு கதையைத்தான் இந்த மிர்சாபூர் சொல்கிறது. பேசுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல் மாவட்டத்தில் இருக்கும் மிர்சாபூர் என்னும் ஊரைக் களமாகக் கொண்ட தொடர் இது.
ஜாதி அரசியல், நேர்மையில்லாத அரசுகள், துப்பாக்கி கலாச்சாரம், ரவுடியிஸம், அரசியல், என்று அத்தனை ஜனநாயக விரோதச் செயல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த மிர்சாபூர். கார்பெட் எனப்படும் விரிப்புகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது இந்த மாவட்டம்.
இந்த ஊரின் மிகப் பெரிய புள்ளி பாரம்பரியமான திரிபாதி குடும்பத்தைச் சேர்ந்த அகண்டா ஆனந்த் திரிபாதி. வெளிப்பார்வைக்கு விரிப்புகள் தயாரிப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் அனைத்து சட்ட விரோத செயல்களையும் செய்து வருகிறார்.
சட்டத்திற்குப் புறம்பான துப்பாக்கி வியாபாரமும், போதைப் பொருள் வியாபாரமும்தான் இவருடைய முக்கிய தொழில். இவரால் அழிக்கப்பட்டவர்களும், ஊரைவிட்டு விரட்டப்பட்டவர்களும் அதிகம். ஆனால் அமைதியானவர்.. இவர் செய்யும் அடாவடிகள் வெளியில் தெரியாமலேயே இருப்பதால் இவரை ‘காலின் பையா’ என ஊரார் அழைக்கிறார்கள்.
திரிபாதியின் குடும்பம் எப்படி மூன்றாவது தலைமுறையாக மிர்சாபூரை தனது செல்வாக்கால் ஆள்கிறது என்பதைத்தான் இத்தொடரில் அதிரடியான, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு கல்யாண ஊர்வலத்தில் திரிபாதி குடும்பத்தின் இளைய வாரிசான முன்னா விளையாட்டாகச் சுட்டதில் குண்டு பாய்ந்து மணமகன் இறந்துவிட, அதிலிருந்துதான் தொடர் விறுவிறுப்பாக நகர ஆரம்பிக்கிறது.
திரிபாதியுடன் பண்டிட் எனும் வழக்கறிஞரின் மகன்களான பப்ளூ மற்றும் குட்டு எவ்வாறு இணைகிறார்கள்..? இதில் திரிபாதியின் மகனுக்கும், பண்டிட் சகோதரர்களுக்கு இடையே உள்ள தகராறு.. மிர்சாபூரை அடையத் துடிக்கும் திரிபாதியின் விரோதி ரதிபிரசாத், திரிபாதியின் மனைவி பீனா மற்றும் அவளுடைய கள்ளக் காதல்கள், இவைகளுக்கிடையில் ரொம்ப நல்லவராக முகம் காட்டி கடைசியில் தனது வில்லத்தனத்தைக் காட்டும் குடும்பப் பெரியவரான சத்யானந்த் என்று அனைத்துக் கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அனுராக் கஷ்யாப்பின் ‘Gangs of Wasseypur’ படத்தில் நடித்த பங்கஜ் திரிபாதி, தற்போதைய திரிபாதி குடும்பத்தின் டானாக நடித்திருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் குப்தா சகோதரிகளும் நமது கவனத்தை ஈர்க்கிறார்கள். அதிலும் கோலு குப்தாவாக நடித்திருக்கும் ஸ்வேதா திரிபாதி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயப்பட்ட முகம்தான். சென்ற ஆண்டு வெளிவந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் கதாநாயகி இவர்தான். கோலு எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஸ்வேதாவும் தனது நடிப்பால் அசர வைக்கிறார். அவரது அறிமுகக் காட்சியே அசத்தலானது.
காவல் துறைக்கு அடங்காத ரவுடிகள், துப்பாக்கியால் சுடும் கூலிப்படை பெண்கள், நட்பிற்காக எதையும் செய்யத் துணியும் நண்பர்கள் என ‘மிர்சாபூர்’ காட்டும் மனிதர்கள் வியக்க வைக்கிறார்கள். அதைக் கேட்பதைவிடப் பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
ஆனாலும், வெப் சீரிஸுக்கே உரித்தான பல அடல்ட் காட்சிகள்.. சரளமான கெட்ட வார்த்தைகள் புழக்கம்… தத்ரூபமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் என்று சிறுவர், சிறுமியர்கள் பார்க்கக் கூடாதவைகள் அதிகமாக இத்தொடரில் இருப்பதால் குடும்பத்துடன் இதனை பார்ப்பதைத் தவிர்க்கவும்.
இப்போது இந்தத் தொடரின் 2-வது சீஸன் வரும் அக்டோபர் 23-ம் தேதியன்று திரையிட இருப்பதாக அமேஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவேண்டு, ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல், ஹர்ஷிதா சேகர் கவுர், அமித் சியால், அஞ்சும் ஷர்மா, ஷீபா சத்தா, மனு ரிஷி சதா மற்றும் ராஜேஷ் தைலாங் ஆகிய நட்சத்திர குழு நடிகர்கள், அதிரடியான இத்தொடரில் திரும்பவும் வருகிறார்கள். தொடரின் 2-வது பாகத்தில் விஜய் வர்மா, பிரியான்ஷு பெயினுலி, இஷா தல்வார் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் இது குறித்து பேசுகையில், “மிர்சாபூர் உண்மையிலேயே எங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தொடர். இந்த நிகழ்ச்சி இந்திய பார்வையாளர்களுக்கு கதை சொல்லும்விதத்தில் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்தியது – அதன் கதாபாத்திரங்கள் பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சீசன் 2-ன் விறுவிறுப்பான கதை நம் பார்வையாளர்களை மீண்டும் மெய்மறக்க வைக்கும் என்று நம்புகிறோம்…” என்றார்.
எக்செல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி பேசும்போது, “எங்களுக்கு கிடைக்கும் இந்த அதிக அளவிலான அன்பு, எக்செல் என்டர்டெயின்மென்டை இன்னும் பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கருத்துக்களைக் கொண்ட நிகழ்ச்சிகளைத் தர ஊக்குவிக்கிறது. அந்த முயற்சியின் ஒரு படிதான் இந்த தொடர்…” என்றார்.
“இந்தியாவின் உள்நாட்டிலிருந்து விறுவிறுப்பான மற்றும் சொல்லப்படாத கதைகளை கொண்டு வருவது எங்கள் மிகப் பெரிய வெற்றியாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ‘மிர்சாபூர் சீசன் 1’ பெற்ற அனைத்து பாராட்டுகளும் மனதைக் கவரும் விதமாக உள்ளது. இது தொடரின் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டதிலிருந்து கிடைத்த அன்பும் பாராட்டும் மிகப் பெரியது. இதை முக்கியமாக எடுத்துக் கொண்டு, அதன் அடுத்த பாகத்தில் பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கிறோம்” என்றார் படைப்பாளர் புனீத் கிருஷ்ணா.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப்காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் கிடைக்கிறது.