ரைசா வில்சன் நாயகியாக நடிக்கும் திரில்லர் படம்..!

ரைசா வில்சன் நாயகியாக நடிக்கும் திரில்லர் படம்..!

‘கொரோனா’ என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர்.

கொரோனா அச்சுறுத்தலால் அவர் தற்போது இயக்கி வந்த ‘சூர்ப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக் கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினரைக் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு.

அது நல்லதொரு த்ரில்லராக உருவானதால், ‘சூர்ப்பனகை’ படத்தின் தயாரிப்பாளரான ராஜ்சேகர் வர்மா “நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்…” என்று கூறவே உடனடியாக இந்தக் கொரோனா லாக் டவுன் பீரியடிலேயே படத்தைத் தொடங்கி முடித்தும் விட்டார்கள்.

இந்தப் படத்தில் ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் ‘கைதி’ படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்ராஜ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – சாபு ஜோஸப், எழுத்து, இயக்கம் – கார்த்திக் ராஜூ, தயாரிப்பு – ராஜ்சேகர் வர்மா.

இந்தப் படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜூ பேசும்போது, “ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்ம வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம் இது. எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்.

இந்தக் கொரோனா லாக் டவுன் பீரியடிலும் குறைவான படக் குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் முறைப்படி அரசிடம் பேசி அனுமதி பெற்றோம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சிறுமலை கிராமம் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்தக் கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக் குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்து சோதிக்கப்பட்டது.

இப்போது முழு படப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது படத் தொகுப்பு வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது…” என்றார் கார்த்திக் ராஜு.

விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. “கண்டிப்பாக அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் திரைப்படம் இருக்கும்…” என்கிறது படக் குழு.

Our Score