தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித் தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநர்கள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக் களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் ‘லோனர்ஸ்’ போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன.
இவரைப் பற்றிய இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கி வருகிறார் என்பதுதான்.
‘மின் மினி’ என்ற இந்தப் படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா Anchor Bay Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்த ‘மின் மினி’ படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஹலிதாவின் முந்தைய படமான ‘பூவரசம் பீப்பீ’ படத்தில் பிரவீனும், கௌரவும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா போன்ற திறமையான தொழில் நுட்ப வல்லுநர்கள் இக்குழுவில் பணியாற்றுகின்றனர்.
இந்த ‘மின்மினி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
இயற்கைச் சீற்றங்கள், நிதிச் சிக்கல்கள் போன்றவற்றால் சில படங்கள் முடங்கியுள்ளன, இடை நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,
ஆனால் இந்த ‘மின்மினி’ திரைப்படம் அப்படியல்லாமல் மிகவும் தீவிரமான திட்டமிடலுடன் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம். இதன் கதை முற்றிலும் இயற்கையானது மிகவும் யதார்த்தமானது.
படத்தின் கதைப்படி குழந்தைகளாக நடித்தவர்கள் இளம் வயதினராக மாறிய பிறகு நடக்கும் கதைதான் இந்த ‘மின்மினி’ படமாம். அதனாலேயே தற்போது 7 ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தில் நடித்த குழந்தைகள், இளம் வயதினராக மாறும்வரையிலும் பொறுமையுடன் காத்திருந்து இந்தப் படத்தின் அடு்த்தக் கட்ட படப்பிடிப்பை தற்போது துவக்கியிருக்கிறார் இயக்குநர் ஹலீதா ஷமீம்.
அவரது இந்த புது முயற்சி கோலிவுட்டில் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியத் திரைத் துறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்கள் இந்த திரைப்படத்திற்கான அவரது முழுமையான உழைப்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பிரமிப்பில் உள்ளனர்.










