‘ஏலே’ திரைப்படம் ஸ்டார் விஜய் டிவியில் வெளியாகிறது..!

‘ஏலே’ திரைப்படம் ஸ்டார் விஜய் டிவியில் வெளியாகிறது..!

‘ஏலே’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது என்று அந்தப் படத்தைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமுத்திரக்கனி, மணிகண்டன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஏலே’ படத்தை பெண் இயக்குநரான ஹலீதா ஷமீம் இயக்கியிருக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படம் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால் படம் தியேட்டருக்கு வந்து 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும் என்று உத்தரவாதக் கடிதத்தைக் கொடுத்தால்தான் ‘ஏலே’ படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கெடுபிடி செய்ததால் ஏலே படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் பெரும் முயற்சி செய்தது. ஆனாலும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது முடிவில் உறுதியாக இருக்க.. தயாரிப்பாளரின் முடிவுதான் இறுதியானது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து கோபமான தயாரிப்பாளர் சசிகாந்த்.. “எதுக்கு ஓடிடியில் வெளியிட வேண்டும்..? நேரடியாக நான் தொலைக்காட்சியிலேயே படத்தை வெளியிடுகிறேன்…” என்று சொல்லி படத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு உடனடியாக விற்பனை செய்துவிட்டார்.

இப்போது ‘ஏலே’ திரைப்படம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

படத் தயாரிப்பின் முறைகள் நாளுக்கு நாள் தமிழ்த் திரையுலகத்தில் மாறிக் கொண்டே போகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது.

Our Score