நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று காலை திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது.
திருமணத்துக்காக பிரம்மாண்டமான விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்திருந்தனர்.
இன்று காலை 10.20 மணிக்கு 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு, விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
இத்திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று நடந்த திருமண விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, குஷ்பூ, விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கிருத்திகா உதயநிதி, அட்லி, நெல்சன், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கவின், மலையாள நடிகர் திலீப் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா – விக்னேஷ் சிவனை வாழ்த்தினர்.
அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் ஷாலினியின் சகோதரி ஷாம்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் Dr.ஐசரி k கணேஷ், போனி கபூர், Lyca தமிழ்க்குமரன், கல்பாத்தி s.அகோரம், ஞானவேல்ராஜா, 2D ராஜசேகர் பாண்டியன், டிரைடன் ஆர்ட்ஸ் ரவி, லலித் குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சாந்தி பிலிம்ஸ் அருண், ஏஆர்.ரகுமான், ஏஆர்ஆர்.அமீன், அனிருத், ரவி ராகவேந்திரா, லக்ஷ்மி ராகவேந்திரா, கௌதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்த்தன், அனு வர்த்தன், சிவா, அட்லி, ஹரி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், பிரீதா ஹரி, ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ். வெற்றி, வேல்ராஜ், தினேஷ் கிருஷ்ணன், தரண்குமார், கலா மாஸ்டர், சதீஷ், பாடலாசிரியர் தாமரை மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் நேரில் வந்திருந்து தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விழாவை சிறப்பித்தார்.
பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப்பும் இத்திருமணத்தில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது. தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக் கூடாது என கூறியுள்ளனர்.
திருமண விழா உரிமையைப் பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படமோ அல்லது திருமண காட்சிகளோ வெளியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
நயன்தாராவை 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் இன்று தனது திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாவில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘கடவுளுக்கு நன்றி! ஒவ்வொரு நல்ல உள்ளமும், ஒவ்வொரு நல்ல தருணமும், ஒவ்வொரு நல்ல தற்செயல் நிகழ்வும், ஒவ்வொரு நல்ல ஆசீர்வாதமும், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனையும் ! நல்ல வெளிப்பாடுகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்! தற்போது இவை அனைத்தையும் நயன்தாராவுக்கு சமர்ப்பிக்கிறேன். என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை தொடங்கவும் ஆவலாக காத்திருக்கிறேன்…” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் தங்களது திருமணத்தையொட்டி சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளிக்கவும், நயன்தாரா-விக்கி ஜோடி ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று முன் தினம் மாலை மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.















