full screen background image

மைக்கேல் – சினிமா விமர்சனம்

மைக்கேல் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி. ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், அனுசுயா பரத்வாஜ், கெளதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷா, வருண் சந்தீஷ், அய்யப்பா சர்மா,  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – கிரண் கெளசிக், வசனம் – ராஜன் ராதாமணாளன், படத் தொகுப்பு – ஆர்.சத்யநாராயணன், கலை இயக்கம் – காந்தி நாடிகுடிகர், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, டி.ஐ. கலரிஸ்ட் – சுரேஷ் ரவி, ஒலி பொறியாளர்கள் – பிரபாகரன், தினேஷ் குமார், உடைகள் – ரஜினி, பத்திரிகை தொடர்பு – யுவராஜ்.

‘புரியாத புதிர்’, ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்திய திரைப்படமாக இது வெளியாகியுள்ளது.

1990-களில் நடக்கும் கதை இது. தன்னையும், தனது தாயையும் அனாதையாக்கிய தனது தந்தையைத் தேடி கொலை செய்ய மும்பைக்கு வருகிறான் 13 வயது சிறுவனான மைக்கேல். மும்பையில் அப்போது பெரிய டானாக வாழ்ந்து வரும் கெளதம் மேனனைக் காப்பாற்றப் போய் அவரது கடைக்கண் பார்வையில் படுகிறான் மைக்கேல்.

தனது உயிரைக் காப்பாற்றினானே என்ற பாசத்தால் கெளதம் மேனன் தனது அடியாட்களிடம் சொல்லி மைக்கேலை வளர்த்தெடுக்கிறார். இப்போது மைக்கேல் வாலிபனாக இருக்க. தற்போது மீண்டும் ஒரு முறை கெளதம் மேனனை உயிர்ச் சேதத்தில் இருந்து காப்பாற்றுகிறான்.

இதனால் தான் பெற்றெடுத்த மகனைக் காட்டிலும் அதிக பாசமும், உரிமையும், செல்வாக்கையும் கொடுத்து மைக்கேலை தன் அருகில் வைத்துக் கொள்கிறார் கெளதம் மேனன். இதைக் கண்டு உண்மையான மகனுக்குக் கோபம் கொப்பளிக்கிறது.

இந்த நேரத்தில் டெல்லியில் வசித்து வரும் நாயகியான திவ்யான்ஷாவையும், அவளது அப்பாவையும் தீர்த்துக் கட்டும்படி ஒரு அசைண்மெண்ட்டை மைக்கேலிடம் கொடுக்கிறார் கெளதம் மேனன்.

இதற்காக டெல்லி வந்த மைக்கேல் நாயகியின் அழகைப் பார்த்து கிறங்கிப் போகிறார். லவ்வாகிறார். இதனாலேயே காதலிலையும், அவரது அப்பாவையும் மைக்கேல் கொலை செய்யாமல் விட்டுவிட.. மோப்பம் பிடித்து கெளதம் மேனனின் மகன் தன் அடியாட்களுடன் வந்து காதலர்களைப் பிரிக்கிறான்.

நாயகியையும், அவளது அப்பாவையும் கடத்துகிறான். மைக்கேலை கொலை செய்யப் போவதாகச் சொல்லி அவனை துப்பாக்கியால் சூட்டு ஆற்றுக்குள் தூக்கி வீசுகிறான். ஆனாலும் அங்கேயிருந்து தப்பித்து வரும் மைக்கேல் தனது காதலியைத் தேடி வந்து வில்லன் கோஷ்டியுடன் சண்டையிடுகிறான்.

இந்த சண்டையில் கெளதம் மேனனின் மகனும், கூட்டாளிகளும் இறந்துவிட.. கெளதம் மேனன் அதிர்ச்சியாகிறார். மைக்கேல் மீது கொலை வெறியாகும் கெளதம் மேனன் அவனைக் கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். அதே நேரம் மைக்கேலும் கெளதம் மேனனை தீர்த்துக் கட்டத்  தயாராகுகிறார்.

இருவரில் யார் முந்திக் கொண்டது..? மைக்கேல் கெளதம் மேனனை கொலை செய்ய முயல்வது ஏன்..? என்பதுதான் இந்த ‘மைக்கேல்’ படத்தின் திரைக்கதை.

நடிகர் சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் ‘மைக்கேல்’ என்ற முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். முரட்டுத்தனமான உடலுடன், கோபக்கார இளைஞனாக மைக்கேல் கதாபாத்திரத்திற்கு எந்தளவுக்கு வலு சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் சந்தீப் கிஷன்.

ஆனால் டானுக்குரிய நடிப்பும், மேனரிசமும்தான் அவருக்கு வரவில்லை. அதோடு காதலை வெளிப்படுத்தும் சாதாரணதொரு காதலனின் நவரசங்கள்கூட அவரிடத்தில் இருந்து வரவில்லை. ஸ்டைலும் இல்லாமல், ஆக்ரோஷமும் இல்லாமல்.. வெறுமனே சாதாரணமான நடிப்பை வைத்து என்ன செய்வது..? என்ன எழுதுவது..?

நாயகி திவ்யான்ஷா ரசிக்கும்படியான அழகான ஒரு பாடலுடன் அறிமுமாகி அதன் பின்னர் வழக்கமான மசாலா பட நாயகியாக மாறிவிட்டார். இடைவேளைக்கு பின்பு அழுகையுடனேயே கடைசிவரையிலும் வலம் வந்து நமக்கு சோதனையைக் கொடுத்திருக்கிறார்.

பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இயக்குநர் கௌதம் மேனன் இந்த படத்தில் ‘டானாக’ ஜென்டிலான வில்லத்தனத்தைக் காண்பித்திருக்கிறார். மகனிடம் இருக்கும் முட்டாள்தனமான முன் கோபத்தைச் சொல்லிக் காட்டும்போதும், தனது ஆட்களிலும் தனது அடுத்தக் கட்டத் திட்டத்தை சொல்லும்போதும் நிதானமான டானாக கவர்கிறார்.

விஜய் சேதுபதி வழக்கமாக சர்ப்ரைஸ் கேரக்டரில் அசத்துகிறார். சைடு ஹீரோ சப்ஜெக்ட்டில் வந்து ஹீரோவையும், ஹீரோயினையும் காப்பாற்றி அனுப்பி வைக்கிறார். இவரது மனைவியான வரலட்சுமி சரத்குமாரும், கெளதம் மேனனின் மனைவியான அனுசுயா பரத்வாஜூம் கணவர்களின் கேரக்டர்களுக்கு உதவுவதுபோல பிலிம் காட்டியிருக்கிறார்கள்.

கிரன் கௌசிக்கின் ஒளிப்பதிவுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். அனைத்துக் காட்சிகளுக்கும் அதற்கேற்றவாறு லைட்டிங்ஸை செட் செய்து மூடை கிரியேட் செய்திருக்கிறார். பீரியட் பிலிம் என்பதால் அதற்கேற்ற இடங்களைத் தேர்வு செய்து லாஜிக் மீறல் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கேங்ஸ்டர் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான சாம் சி.எஸ்., இந்தப் படத்திலும் குறை வைக்காமல் பின்னணி இசையை இசைத்திருக்கிறார். கெளதம் மேனனுக்கான தீம் மியூஸிக் அலப்பறையாக இருக்கிறது. ஆனால் திவ்யான்ஷாவின் அறிமுகப் பாடலைத் தவிர மற்றவைகளில் அதிகமாக நம் கவனத்தை ஈர்க்கவில்லை.

கலை இயக்கம் செய்திருக்கும் காந்தி நாடிகுடிகர் பழைய மும்பையை காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதி வசித்து வரும் வீட்டின் உள் கட்டமைப்பும், இடமும் அழகு.

துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் தூள் பறத்திக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் ஒலி வடிவமைப்பும், ஒலிப்பதிவும் பாராட்டுக்குரியது. வசனம் எழுதியவரையும் பாராட்டியாக வேண்டும். டானுக்குரிய கெத்தைக் கொடுக்க வேண்டி கெளதம் மேனன் பேசும் பல வசனங்கள் சுவையானது.

ஆனால் ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் பழைய கள், புதிய மொந்தை என்பதை போல, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி காதல் கலந்த ஒரு ஆக்ஷன் கதையைக் கொடுக்க வந்து அதற்குத் தகுதியான நாயகன் இல்லாததால் படத்தை குப்புறத் தள்ளிவிட்டார்.

அழுத்தம் இல்லாத கதை, சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதை,  மெதுவாக நகரும் காட்சிகள், நடிப்பே இல்லாத நாயகன், பார்த்துப் பார்த்து சலித்துப் போன திரைக்கதை என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து  நம் பொறுமையை ரொம்பவே சோதித்து “ஐயோ போதும்டா சாமி” என்ற நம்மை கதற வைத்துள்ளது.

மைக்கேல் – உப்புச் சப்பில்லாத டான் கதை..!

RATING :  2.5 / 5

Our Score