இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லஷ்மண்குமார் தயாரித்துள்ளார்.
படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஸ்முருதி வெங்கட், பகவதி பெருமாள், ஹரீஷ் பெராடி, விவேக் பிரசன்னா, தமிழ், நாகிநீடு, ராஜ் அய்யப்பா, ஜோ மல்லூரி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ஜியென் கிருஷ்ணகுமார், இசை – சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு – எஸ்.யுவா, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – வீரமணி கணேசன், பாடல்கள் – விவேகா, ஒலி வடிவமைப்பு – அருண் எஸ்.மணி, உடைகள் – நந்தா, உடை வடிவமைப்பு – திவ்யா நாகராஜன், நிகிதா நிரஞ்சன், ஒலி கலவை – விஷ்ணு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, கே.வி.துரை, தயாரிப்பு – எஸ்.லஷ்மண்குமார், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன்.
நாயகனான ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்னும் 1 மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த நிலைமையில் ஒரு நாள் அவரது வருங்கால மனைவியுடன் காரில் செல்லும்போது அந்தக் காரின் பின் சீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் பதுங்கியிருக்கிறார்.
தவித்துப் போன பாலாஜி இதை தன் வருங்கால மனைவியிடம் சொல்லாமல் தவிர்க்கிறார். கடைசியில் பாலாஜியின் வீட்டுக்கு காரிலேயே வந்துவிடும் ஐஸ்வர்யா தான் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதாகச் சொல்லி அவரிடத்தில் உதவி கேட்கிறார். செல்போனை சார்ஜ் செய்ய உதவும் பொருட்டு ஐஸ்வர்யாவைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்கிறார் பாலாஜி.
ஆனால் அதன் பின்பு சில நிமிடங்களில் அவர் மயக்கமாகிறார். அவர் கண் திறந்து பார்க்கும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பாத்ரூமில் இறந்து கிடக்கிறார். பாலாஜி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக போலீஸ் வீடு தேடி வருகிறது.
அந்தப் போலீஸ் டீமில் கான்ஸ்டபிளாக இருக்கும் பாலாஜியின் நண்பரான விவேக் பிரசன்னா, பாத்ரூமில் ஐஸ்வர்யாவின் உடலைப் பார்த்தும் இன்ஸ்பெக்டரிடம் அதைப் பற்றி சொல்லாமல் போய்விடுகிறார்.
ஆனால் அதன் பின்பு பாலாஜியை போனில் அழைத்து வறுத்தெடுக்கிறார் பிரசன்னா. உடனடியாக ஐஸ்வர்யாவின் உடலை டிஸ்போஸ் செய்யும்படி ஐடியா கொடுக்கிறார்.
இதையடுத்து ஐஸ்வர்யாவின் உடலை ஒரு சூட்கேஸில் அடக்கிக் கொண்டு தன் சொந்த ஊரான செஞ்சிக்கு வேனில் பயணமாகிறார் பாலாஜி. அந்த வேன் பெர்மிட் இல்லாததால் வழியில் போலீஸிடம் மாட்டிக் கொள்ள அந்த பிண சூட்கேஸை வேனிலேயே விட்டுவிட்டு பாலாஜி தப்பித்து ஓடுகிறார்.
ஆனால் மறுநாள் காலையில் அந்த ஊர் சுடுகாட்டில் ஒரு அனாதைப் பிணத்தை யாருக்கும் தெரியாமல் எரித்ததாகச் சொல்லி பரபரப்பு எழ.. அந்த வேன் டிரைவரும் தற்கொலை செய்து கொள்ள… டி.எஸ்.பி. தமிழ் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கத் துவங்குகிறார்.
இந்த நேரத்தில் “இந்த வழக்கில் இருந்து இதோடு ஒதுங்கிப் போகாவிட்டால் நல்லதில்லை” என்று பாலாஜிக்கு போன் மூலமாக மிரட்டல்கள் வர.. கோபமடையும் பாலாஜியே களத்தில் குதிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் யார்..? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்…? என்பதைக் கண்டறிய முனைகிறார்.
பாலாஜி அதைக் கண்டுபிடித்தாரா..? இல்லையா..? ஏன் இந்தக் கொலை..? பாலாஜியின் நிலைமை கடைசியில் என்னவானது..? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்திற்கு ‘ரன் பாலாஜி ரன்’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் படம் முழுவதும் பாலாஜிதான் ஓடிக் கொண்டேயிருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி. வழக்கமான காமெடியனாக இல்லாமல், சீரியஸ் ரோலில் நடித்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட நடிப்பை ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார். படம் நெடுகிலும் இறுகிப் போன முகத்துடன், டென்ஷனான தோற்றத்திலேயே வலம் வரும் பாலாஜிக்கு இது நிச்சயமாகப் புதுமையான அனுபவமாகத்தான் இருக்கும். நமக்கும் பிடித்திருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் சிறிது நேரமே என்றாலும் தனது கேரக்டருக்கேற்ற நடிப்பினை காண்பித்திருக்கிறார். இஷா தல்வார் 3 சீன்களில் காட்சி தருகிறார். ராதிகா சரத்குமார் இந்த சின்னக் கதாப்பாத்திரத்தில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.
ஸ்மிருதி வெங்கட், பகவதி பெருமாள், ஹரீஷ் பெராடி, விவேக் பிரசன்னா போன்றவர்கள் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். விவேக் பிரசன்னாவின் படபடப்பான பேச்சு, குற்றத்திற்கு அவரும் ஒரு உடந்தையோ என்று முதலில் சந்தேகப்பட வைத்திருக்கிறது.
ஜார்ஜ் மரியான் வேனில் செய்யும் கலாட்டா பலே. அதிலும் இவரும் புகழும் வேனுக்குள் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள் படத்தின் தன்மையை அப்போதைக்கு மாற்றியமைத்துள்ளது. தன் செல்போனில் இருக்கும் பலான புகைப்படத்தை டி.எஸ்.பி. தமிழ் பார்த்தவுடன் ஜார்ஜ் காட்டும் ரியாக்ஷனுக்கு தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது.
டி.எஸ்.பி. தமிழ் தன் மேலதிகாரிகள் கேஸை மூடும்படி நிர்ப்பந்திப்பதினால் தானே இறங்கி விசாரிக்கத் துவங்குவது லாஜிக் மீறல் என்றாலும், படத்தின் திரைக்கதையை நகர்த்த இதுதான் மிகவும் உதவியிருக்கிறது.
ஒரு த்ரில்லர் படத்துக்கு முக்கியமான தேவையான பர, பரவென்ற த்ரில்லிங் இசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். யுவாவின் ஒளிப்பதிவில் கலர் டோனும், கேமிரா கோணங்களும் சஸ்பென்ஸ், திரில்லிங்கை தொடர்ந்து கொடுத்துள்ளன.
நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் மெரிட்டில் இடம் பிடித்துப் பயிலும் ஏழை மாணவிகளை ஏதோ ஒரு ரூபத்தில் சாகடித்துவிட்டு, அவர்களின் இடத்தில் பணக்காரர்களின் பிள்ளைகள் எப்படி இடம் பிடிக்கிறார்கள் என்ற புதுக் கதையை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் மலையாள இயக்குநரான ஜெயன் கிருஷ்ணகுமார் வித்தியாசமான கதை, திரைக்கதையில் கொஞ்சமான வசனங்களை வைத்து சஸ்பென்ஸை கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்திருக்கிறார். இதுவே அவருக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான்.
நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் கொலையாளி அவராக இருக்குமோ, அல்லது இவராக இருக்குமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு காட்சிகளை கட்டமைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் மருத்துவக் கல்லூரி சீட்டு விவகாரம்தான் இதற்கான அடிப்படை காரணம் என்பதை படத்தின் இறுதியில் சொல்லியிருப்பதால் அது நம் மனதில் ஒட்டாமலேயே போய்விட்டது. இந்தக் காரணத்தை இடைவேளை நேரத்திலாவது சொல்லிவிட்டு திரைக்கதையை நகர்த்தியிருந்தால் நாமும் உணர்வுப்பூர்வமாக ஐஸ்வர்யா மற்றும் ஸ்மிருதி வெங்கட்டுக்காக பரிதாபப்பட்டிருப்போம்..!
ரன் பேபி ரன் – ஓட்டமான திரைக்கதையில் ஒரு திரில்லர் படம்..!
RATING : 3.5 / 5