full screen background image

மெய் – சினிமா விமர்சனம்

மெய் – சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தொழில் துறையில் தனித்த அடையாளமாய் இருக்கும் டி.வி.எஸ். நிறுவனம், இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறைக்குள் ஒரு தயாரிப்பு நிறுவனமாய் கால் பதித்திருக்கிறது.

டி.வி.எஸ். அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான சுரேஷ் கிருஷ்ணாவின் மகள் ப்ரீத்தம் கிருஷ்ணாவின் கணவர் ஜெய் கிருஷ்ணா, ‘சுந்தரம் புரொடெக்சன்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரனும், ப்ரீத்தம் கிருஷ்ணா-ஜெய் கிருஷ்ணா தம்பதியரின் மகனுமான நிக்கி சுந்தரம் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், சார்லி, கிஷோர், வினோத் கிருஷ்ணன், அஜய் கோஷ், ஈ.ராம்தாஸ், ‘கவிதாலயா’ கிருஷ்ணன், ஜார்ஜ் மரியான், அருள் D.ஷங்கர், அபிஷேக் வினோத், தங்கதுரை, மதன் கோபால், A.S.ரவிபிரகாஷ் மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – சுந்தரம் புரொடக்ஷன்ஸ், நிர்வாக தயாரிப்பு – வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், தயாரிப்பு உறுதுணை – சித்தாரா சுரேஷ், இசை – பிரித்வி குமார், படத் தொகுப்பு – பிரீத்தி மோகன், கலை இயக்கம் – செந்தில் ராகவன், ஒளிப்பதிவு – V.N.மோகன், பின்னனி இசை -அனில் ஜான்சன், பாடல்கள் – கிருஷ்டோபர் பிரதீப், ஆடியோகிராபி – M.R.ராஜகிருஷ்ணன், நடன இயக்கம் – விஜி சதிஷ், சண்டை இயக்கம் – மகேஷ் மேத்யு, உடைகள் – தாரா மரியா ஜார்ஜ், கதை, வசனம், இணை இயக்கம் – சேந்தா முருகேசன்.

இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன்  ஆகியோரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநரான எஸ்.ஏ.பாஸ்கரன், இத்திரைப்படத்தை திரைக்கதை எழுதி, இயக்குகிறார்.

படத்தின் நாயகனான நிக்கி சுந்தரம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், திரைப்படத் துறையின் மீதுள்ள ஆர்வத்தால், இங்கு வந்து தமிழ் படித்து, இந்தப் படத்திற்குத் தேவையான வகையில் முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்பே கேமிரா முன்பு நின்றுள்ளார்.

மருத்துவத் துறையின் உடல் உறுப்புகள் தானம் பிரிவில் நடைபெறும் முறைகேடுகளையும், பணத்துக்காக ஆட்களைக் கடத்தி உடல் உறுப்புகளை களவாடும் நயவஞ்சக மருத்துவ உலகத்தையும் இத்திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நாயகன் நிக்கி சுந்தரம். டாக்டருக்குப் படித்தவர். ஒரு நாள் அவருடைய அம்மா திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைமையில் நிக்கியின் மருத்துவமனைக்கே அழைத்து வரப்படுகிறார். நிக்கியே அவரது அம்மாவுக்கு சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

இதனால் மிகுந்த மனக் கஷ்டத்துக்குள்ளான நிக்கியை, கொஞ்ச நாள் மன அமைதிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார் அவரது தந்தை. சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தனது உறவினரான ஜார்ஜின் வீட்டில் தங்க வருகிறார் நிக்கி.

அதே நேரம் ஒரு மருந்து உற்பத்தி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடுரோட்டில் மயங்கி விழுந்த நடிகர் சார்லியை காப்பாற்றுகிறார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாகனங்களை நிறுத்தி உதவி கேட்கும்போது, விமான நிலையத்தில் இருந்து ஜார்ஜின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த நிக்கி ஐஸ்வர்யாவுக்கு உதவி செய்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்படுகிறது.

சார்லி காப்பாற்றப்படுகிறார். அவரது ஒரே மகள் கடந்த ஒரு மாத காலமாக காணவில்லை என்றும் காவல்துறையில் புகார் கொடுத்தும் பலனில்லை என்றும் சார்லி அழுது புலம்புகிறார்.

சார்லிக்குத் துணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சப்-இன்ஸ்பெக்டரான அஜய்கோஷிடம் இது பற்றி முறையிடுகிறார். அவரோ உங்களையே கைது செய்வேன் என்று இவர்களை மிரட்டி அனுப்புகிறார்.

ஜார்ஜின் மெடிக்கல் ஷாப்பில் தங்கதுரையும், டார்லிங் மதன் இருவரும் வேலை செய்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் நிக்கி நெருங்கிய நண்பராகிறார். நிக்கி மருத்துவராக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் அவர்களது நெருக்கம் இன்னமும் அதிகமாகிறது.

சார்லியின் மகள் காணாமல் போனது தொடர்பாக மீடியாவிடம் செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் பிரச்சினை பெரிதாகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் விவகாரம் வருகிறது. அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ‘முத்துக்கிருஷ்ணன்’ என்னும் கிஷோர், இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார்.

இருந்தாலும் அவரது மெடிக்கல் லீவை கேன்ஸல் செய்துவிட்டு உடனடியாக பணியில் சேரச் சொல்கிறார் கமிஷனர். கிஷோரும் தனது இன்ஸ்பெக்டர் பணியைத் தொடர்ந்து முதல் வேலையாக சார்லியின் மகளைத் தேடும் பணியைத் துவக்குகிறார்.

அதே நேரம் மெடிக்கல் ஷாப்பில் திடீரென்று மதனுக்கு வலிப்பு நோய் தாக்க அவருக்கு முதலுதவியாக ஒரு மருந்தை ஊசி மூலமாகச் செலுத்திவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார் நிக்கி.

ஆனால், டிஸ்சார்ஜுக்கு முதல் நாள் மதன் திடீரென்று மரணம் அடைகிறார். இதனை ஏற்காத மதனின் பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

அப்போது அந்த மருத்துவமனையின் மருத்துவர் “மதன் இங்கே கொண்டு வரப்படுவதற்கு முன்பேயே அவருக்குச் செலுத்தப்பட்ட மருந்தினால்தான் அவர் இறந்திருக்கிறார்..” என்கிறார். இதனால் போலீஸ் நிக்கியை தேடத் துவங்குகிறது.

மதனுடைய இறப்புக்கும், சார்லியின் மகள் காணாமல் போனதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறார் நிக்கி. இது தொடர்பாக தானே களத்தில் இறங்கி கண்டு பிடிக்க முனைகிறார்.

இந்தத் தேடலின்போது சென்னையில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் இளைஞர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட அந்த ஒரே மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்கள். அப்படி காணாமல் போனவர்களில் சார்லியின் மகளும் ஒருவர் என்பதையறியும் நிக்கி, இந்த வழக்கில் மேலும் புலனாய்வு செய்யத் துவங்குகிறார்.

விசாரணையில் காணாமல் போனவர்கள் மர்மமாந முறையில் கொல்லப்பட்டு அவர்களது உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிகிறார் நிக்கி.  இதேபோல் மதனுடைய மரணமும் இயற்கையானது இல்லை என்பதையும் மதனுடைய உடல் உறுப்பும் திருடப்பட்டிருக்கிறது என்பதையும் நிக்கி அறிந்து கொள்கிறார்.

இதே நேரம் இன்ஸ்பெக்டர் கிஷோருக்கு இந்த உண்மைகள் அடுத்தடுத்து தெரிய வருகிறது. அவரும் தனது விசாரணையை முடுக்கிவிடுகிறார்.

இறுதியில் அவருடைய பணி நிறைவடைந்ததா..? எதற்காக இந்தக் கடத்தல் சம்பவம் நடந்தது..? மதன் எப்படி இறந்தார்..? உடல் உறுப்புக்களுக்காக செய்யப்படும் இந்தக் கொலைகளின் பின்னணியில் இருந்தது யார்..? என்பதெல்லாம் இந்தப் படத்தின் இடைவேளைக்கு பின்பு சொல்லப்படும் திரைக்கதை.

தமிழகத்தில் ஆங்காங்கே நடத்தப்படும் இலவச முழு உடல் பரிசோதனை முகாமில் பல பொதுமக்கள் தங்களை பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள். அங்கே எடுக்கப்படும் பல சோதனைகளினால் அவர்களுடைய உடல் உறுப்புக்கள் பற்றிய விவரங்கள் அவர்களது முகவரியுடன் பல மருத்துவமனைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.

அந்த முகவரிகள் அடங்கிய ரகசியங்களினால் என்னென்ன தவறுகள் நடக்கின்றன என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

புதுமுகம் என்பதாலும், தனது முகம் தமிழ்ச் சினிமாவுக்கு அன்னியமாக இருப்பதையும் உணர்ந்து தனது முதல் படத்திலேயே கதையை நாயகனாக வைத்து தான் அதில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைத்த நாயகன் நிக்கி சுந்தரத்திற்கு நமது பாராட்டுக்கள்.

அவருடைய தமிழ் உச்சரிப்பும், டைமிங்சென்ஸ் வசன வெளிப்பாடும், முக பாவனைகளும் இன்னமும் தமிழ்ச் சினிமாவுக்கேற்றபடி பொருந்தி வரவில்லை என்றாலும், இது முதல் படம் என்பதால் விட்டுவிடுவோம். அடுத்தடுத்த படங்களில் தனது தோற்றத்திற்கேற்ற கதைகளில் அவர் நடித்தால் அதுவே அவருக்கு வெற்றியாக இருக்கும்.

இத்திரைப்படத்தின் சிற்சில காட்சிகளில் மட்டுமே அவரை வெகுவாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகள் மற்றும் காதல் காட்சிகள், டூயட்டுகளில் ஒரு ஹீரோவாக தெரிய நிக்கி, இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இருந்தும், காண்டம் கேட்டவரிடம் பட்டென்று எடுத்துக் கொடுத்து “இந்தாங்க” என்பதும், அவர் திட்டிவிட்டுப் போனதும் புரியாமல் நண்பர்களிடம் பல்பு வாங்குவதும்.. இந்தியாவின் யதார்த்த நிலைமையை அவர் எதிர்கொள்ளும் விதத்திலும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார் நிக்கி.

ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மருந்து விற்பனை ஊழியராக மருந்தை விற்பனை செய்ய அவர் படும்பாடும், சார்லிக்கு உதவிவிட்டு மேனேஜரிடம் சமாளிக்கும்விதமும் ரசிக்க வைக்கிறது. இதேபோல் நிக்கியுடனான அவரது முதல் மோதல்.. காதலாக உருவாவது மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் அஜய் கோஷிடம் சவுண்டுவிடுவது.. நிக்கியை மெடிக்கல் ஷாப்பிற்கே வந்து திட்டிவிட்டுப் போவது.. என்ற சில காட்சிகளில் நாயகன் இல்லாத தன்மையைச் சமாளிக்க உதவியிருக்கிறார் ஐஸ்வர்யா.

ஜார்ஜ், டைகர் தங்கத்துரை, மதன் கோபால் கூட்டணி முதல் சில நிமிடங்கள் திரையைக் கலகலப்பாக்க முயற்சித்திருக்கிறது. இருந்தும் வெளிநாட்டு மருத்துவர்.. கடை முதலாளியின் உறவினர் என்றாலும் நிக்கியுடன் அவர்கள் பழகும் முறை ஏற்புடையதாக இல்லை.

சார்லி தனது குணச்சித்திர நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். மகள் மீதான பாசம் ஒரு பக்கம்.. போலீஸ் மீதான பயம் ஒரு பக்கம்.. இப்படி இரண்டுக்கும் நடுவில் அவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் அப்பாவி அப்பா கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார் சார்லி.

இதேபோல் இன்னொரு குணச்சித்திர வேடத்தில் ஈ.ராமதாஸ் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நடித்திருக்கிறார். தனக்கு மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றினார் என்கிற ஒரே காரணத்துக்காக நிக்கி அண்ட் கோ-வுக்கு இவர் உதவி செய்வது மட்டும்தான் சட்டென்று ஏற்க முடியாத திரைக்கதையாக இருக்கிறது. ஆனால் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் வரவேற்கத்தக்கதே..!

வில்லன்கள் கோஷ்டியான அஜய் கோஷ், அரோல் சங்கர், அபிஷேக் மூவரும் இயல்பான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் கிஷோர் தனது மென்மையான நடிப்பில் கவர்கிறார். கிளைமாக்ஸில் தானும் இந்த ஊழலில் ஒரு பங்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பதை அவர் உணரும்போது பாவமாகத் தோன்றுகிறது. இந்த இடத்தில் ஏற்பட்ட  டிவிஸ்ட் எதிர்பாராதது. ஆனால் சுவாரசியமாக இருக்கிறது.

வி.என்.மோகனின் ஒளிப்பதிவில் குறையில்லை. அனைவரையும் அழகாகவே காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் நாயகனை பெரிதும் காப்பாற்றியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், சண்டை இயக்குநரும். இசையமைப்பாளர் பிருத்வி குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பாடல் காட்சிகளையும் ரசனையோடு படமாக்கியிருக்கிறார்கள்.  

ஏற்கனவே இதே போன்ற மெடிக்கல் க்ரைம் சம்பந்தமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறையவே வந்துவிட்டன. இதுதான் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. படத்தின் கதைக் கருவும், திரைக்கதையையும் ஊகிக்க முடியும் அளவுக்குக் காட்சிகள் இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

இடைவேளைக்கு முன்பு சார்லியின் மகள் காணாமல் போன விஷயம்.. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்படும் இடம்.. இவர்களுடன் நிக்கி சுந்தரம் இணையும் இடம்.. நிக்கி சுந்தரம் இந்தப் பிரச்சினையை கண்டுபிடிக்க முனையும் அளவுக்கான ஒரு காரணி.. தொடர்பு.. இதையெல்லாம் லாஜிக்குடன் இணைக்கும் திரைக்கதையை முன் வைத்திருந்தால், இன்னும் நன்றாகவே இந்தப் படத்தை ரசித்திருக்கலாம்.

இடைவேளைக்கு முன்பு சற்று சோம்பலாக சென்ற திரைப்படத்தை இடைவேளைக்கு பின்புதான் மிக, மிக பார்த்து ரசிக்க முடிந்திருக்கிறது. இதே வேகத்தை இடைவேளைக்கு முன்பாகவும் இயக்குநர் காட்சியிருந்தால் படம் நிச்சயமாக பெரிய அளவுக்குப் பேசப்பட்டிருக்கும்.

இத்திரைப்படம் வெற்றி பெற்றால் டி.வி.எஸ். நிறுவனம் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று தோன்றுகிறது..! இதற்காகவே, இந்தப் படம் தமிழகத்தில் வெற்றியடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்..!

Our Score